நியூயார்க் நகரத்தின் பிரஸ்பிட்டேரியன் மருத்துவமனை. 1952-ம் ஆண்டு, அமைதியான காலைப் பொழுது. தன்னை நெருங்கிய இளம் பெண் மருத்துவரை புன்னகையுடன் எதிர்கொண்டார் உயரமான தோற்றமும் கனிவான முகமும் கொண்ட மூத்த பெண் மருத்துவர்.
இருவருக்குமான பேச்சின் ஊடாக அந்த இளம் மருத்துவர் ‘‘டாக்டர், பிறந்த குழந்தைகளைக் காப்பாற்ற எவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?’’ என்று கேட்டார். ‘‘ரொம்ப சுலபம்’’ என்று பதில் சொல்லத் தொடங்கிய அந்த மூத்த மருத்துவர் மேஜையில் இருந்த ஒரு திசுத்தாளை உருவி தன் பேனாவால் கடகடவென ஐந்து குறிப்புகளை எழுதி நீட்டினார்.
அது மருத்துவ வரலாற்றிலும் மனித குலவரலாற்றிலும் மிக முக்கியமான கணம். கோடிக்கானக்கான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துபோகும் அவலத்தை மாற்றிய கணம். அந்த மூத்த மருத்துவர் டாக்டர் வெர்ஜீனியா அப்கார். அவர் அன்று எழுதி நீட்டிய ஐந்து குறிப்புகளின்படி உருவாக்கப்பட்டதுதான் அப்கார் சோதனை (Apgar test).
குழந்தை பிறந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் இந்த சோதனை செய்யப்படுகிறது. 1) குழந்தையின் தோற்றம் (Appearance), 2) இதயத் துடிப்பு (Pulse), 3) சுரணை (Grimace), 4) கைகால் அசைவு (Activity), 5) சுவாசம் (Respiration) ஆகியவற்றை சோதித்து மருத்துவர்கள் 2, 1, 0 என மதிப்பெண் போட்டு அவற்றை கூட்டி குழந்தையின் நலத்தை கண்டறிகின்றனர். இந்தக் கணக்கீட்டு எண் ‘‘அப்கார் ஸ்கோர்’’ (Apgar Score) என்று வெர்ஜீனியா அப்கார் நினைவாக அழைக்கப்படுகிறது.
இளமைப் பருவம்
வெர்ஜீனியா அப்கார் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஆறு வயதில் கல்வி கற்கத் தொடங்கும் போதே வயலின், செல்லோ போன்ற இசைக்கருவிகளை இசைக்க தொடங்
கினார். பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், டென்னிஸ், கூடைப்பந்து, பேஸ்பால், அஞ்சல்தலை சேகரிப்பு என பற்பல ஆர்வங்களைக் கொண்டிருந்தார். படிப்பிலும் கெட்டிக்காரராக விளங்கினார்.
16வயதில் பள்ளிப் படிப்பை முடித்தார். பிறகு தன் தந்தை அளித்த ஊக்கத்தால் மருத்துவம் பயிலும் நோக்கில் மாசாசுசெட்ஸ் மாநிலத்தில் ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் பட்ட படிப்பில் சேர்ந்தார்.
சோதனைகள் சாதனைகள்
1929-ல் விலங்கியல் படிப்பை முடித்த வெர்ஜீனியா மருத்துவக் கல்லூரியில் சேர நினைத்தபோது அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. பணத் தட்டுப்பாடு வெர்ஜீனியாவையும் பாதித்தது. பல்வேறு வேலைகளைச் செய்து பொருளீட்டினார். கல்லூரி ஆய்வுக் கூடத்துக்காக வீதியில் திரியும் பூனைகளைப் பிடித்து கொடுக்கும் வேலையைக் கூடச் செய்தார். வேலை செய்து சம்பாதித்த தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றோடு தெரிந்தவர்களிடம் கடன் உதவியும் பெற்று போராடி நியூயார்க், பிரஸ்பிட்டேரியன் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
1933-ல் மருத்துவக் கல்வியை முடித்தார். 1935-ல் அறுவைச் சிகிச்சை மருத்துவர் பயிற்சியை முடித்தார். 1938 -ல் மயக்கமருந்தியல் துறையில் மருத்துவர் பயிற்சியை முடித்தார். இவை எதுவுமே சுலபமாக நடந்துவிடவில்லை. மருத்துவத் துறை முழுக்க ஆண்களின் துறையாக இருந்த காலம் அது. தங்கும் வசதி கூட இல்லாத கல்லூரிச் சூழலில் ஒரு கட்டத்தில் ஆறுமாதத்தில் மூன்று முறை தன் வசிப்பிடத்தை அவர் மாற்ற வேண்டி இருந்தது.
மயக்கமருந்தியல் துறையில் பயிற்சி முடித்து 1938-ல் பிரஸ்பிட்டேரியன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே மயக்க மருந்தியல் மருத்துவரானார். தன் பணியில் பல்லாயிரக்கணக்கான பிரசவங்களில் நேரடியாக மருத்துவம் பார்த்த அவர், பிறந்த குழந்தைகள் ஏன் இறக்கின்றன, ஏன் திடீர் என ஊனமாக ஆகின்றன போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்தார். அந்த ஆய்வுதான் மேற்சொன்ன அப்கார் சோதனை முறையை உருவாக்கிட உதவியது. அன்றில் இருந்து இன்றுவரை உலகம் முழுவதும் அப்கார் முறை பிறந்த சிசுக்களைக் காப்பாற்ற கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
என்றென்றும் மாணவி
இருபத்தாறு ஆண்டுகள் மருத்துவ சேவை புரிந்து பல சாதனைகளை நிகழ்த்திய வெர்ஜீனியா, மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற மீண்டும் மாணவியானார். 1959-ல் ஐம்பது வயதில் பொது மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். இப்படிம் இறுதி வரை அவர் ஒரு மாணவியாகவே வாழ்ந்தார்.
அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. மருத்துவ சேவையும், இசையும் அவரது இணைபிரியா துணைகளாக விளங்கின. சில இசைக்கருவிகளை அவரே உருவாக்கவும் செய்தார். குழந்தைமை மாறாமல் 65 வயதுவரை தபால்தலைகளை சேகரித்தார். இறக்கும் போது அவரது சேமிப்பில் 50, 000 தபால்தலைகள் இருந்தன!
சிசு மரணங்களை தடுக்கவும், இளம்பிள்ளை வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நல்வாழ்வுக்காவும் ஓய்வின்றி உழைத்தார். இதற்காக நிதிதிரட்டும் ‘டைம் கொடைநடை’ (March of Dimes) என்ற இயக்கத்தில் இணைந்தார்.
(டைம் என்பது அமெரிக்க நாணயம்). பத்து டைம் சேர்ந்தால் ஒரு டாலர். குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கானோர் இந்த இயக்கத்திற்கு ஒரு டைம் அல்லது பல டைம்கள் நிதி அளிக்க, அந்த நிதி பல லட்சம் டாலர்களாகி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவியது.
கட்டுரையாளர்: எழுத்தாளர்
WRITE A COMMENT