Last Updated : 19 Nov, 2019 09:47 AM

 

Published : 19 Nov 2019 09:47 AM
Last Updated : 19 Nov 2019 09:47 AM

தேர்வுக்குத் தயாரா? - படிப்படியாய் படிப்போம்:  படிக்கவும் மனதில் நிறுத்தவும் உதவும் வழிகாட்டுதல்

கோப்புப்படம்

"படிச்சது எதுவுமே சரியா மனசுல நிக்க மாட்டேங்குது…" பள்ளி மாணவர்கள் பலரின் புலம்பல் இதுவாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் நேரம் ஒதுக்கி பொறுப்பாகத்தான் படிக்கிறார்கள்.

ஆனால், அடுத்த நாள் தேர்வெழுதி திரும்பும்போது பலரும் இப்படித்தான் வெகுவாய் சலித்துக்கொள்கிறார்கள். தேர்வெழுதுவதற்கு அடிப்படைத் தேவை நினைவாற்றலே. எவ்வளவு திறமை இருப்பினும் நினைவாற்றலின் அடிப்படையில்தான் மாணவரின் திறமை எடைபோடப்படுகிறது. எனவே நினைவாற்றல் கலை கைவரப் பெற உதவும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாக பின்பற்றுவது அவசியம்.

புரிந்து படிப்போம்

தினசரி வீட்டுப் பாடம் செய்வதில் தொடங்கி, வகுப்புத் தேர்வு முதல் ஆண்டு இறுதித் தேர்வு வரை நினைவாற்றலின் துணை கொண்டே பாடங்களை படித்து, தேர்வுகளில் எழுதி வருகிறோம். நினைவாற்றல் என்றதுமே பலரும் கண்மூடித்தனமாக பாடங்களை மனப்பாடம் செய்வது என்று நினைக்கிறார்கள். பாடங்களை புரிந்து கொள்ளாமல், பொதிந்துள்ள கருத்துக்களை உள்வாங்காமல் அவற்றை மனதில் நிறுத்த முடியாது. அப்படியான முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடும்.

மனப்பாடத்துக்கு எதிரான மாற்றங்கள்

மனப்பாடம் செய்யும் போக்கை குறைக்கும் வகையிலே தற்போதைய புதிய பாடத்திட்டமும், வினாத்தாள் வடிவமைப்பும் மாற்றம் பெற்றுள்ளன. பாடங்களின் உள்ளிருந்து வினாக்கள் கேட்பது, பாடநூலுக்கு வெளியில் இருந்து பாடம் தொடர்பாக கேட்பது, சிந்தனையைத் தூண்டும் விதமாக உருவாக்கப்பட்ட வினாக்கள் என மனப்பாடம் செய்யும் போக்குக்கு எதிராகவே புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே புரிந்துகொள்ளாமல் ‘உருப்போடும்’ வழக்கமான மனப்பாட முறைக்கு விடை கொடுப்போம். பாடங்களை அதன் கருத்துக்களின் அடிப்படையில் புரிந்து கொண்டு மனதில் இருத்த முயல்வோம்.

முன் தொடங்குவோர் முந்துவர்

பாடங்களை ஆசிரியர் நடத்திய அன்றே அவற்றை படிக்கத் தொடங்கிவிட வேண்டும் என்பார்கள். உண்மையில் அதற்கு முந்தைய தினமே அவற்றை தொடங்கியிருக்க வேண்டும். அதாவது ஆசிரியர் ஒரு பாடத்தை நடத்தத் தொடங்குவதற்கு முன்தினமே, அந்தப் பாடத்தை ஓரிரு முறை வாசித்து பார்க்கலாம்.

முந்தைய பாடங்கள் மற்றும் வகுப்புகளின் தொடர்ச்சியாக உள்ள பாடக்கருத்துக்களை அடையாளம் காணலாம். பின்னர் புதிதாகத் தென்படும் சொற்களையும், கருத்துக்களையும் அடிக்கோடிட்டு வைக்கலாம். இந்த முன்தின தயாரிப்பு, அடுத்த நாள் ஆசிரியர் பாடம் நடத்தும்போது, உற்று கவனிக்க உதவும்.

அன்றே படித்தல் நன்றே!

அன்றைய தினம் வீடு திரும்பியதும் பாடத்தை எடுத்து ஒருமுறை வாசித்துப் பார்த்தால் வித்தியாசம் புரியும். கூடவே ஆர்வமும், ஈடுபாடும் வந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட கடினமான பாடத்தையும் லகுவாக படித்து விடலாம். அதுபோன்றே பாடங்களைப் படிப்பதற்கு என தனியாக நேரத்தையோ, நல்ல நாளையோ ஒதுக்கத் தேவை இல்லை. இன்றே, இப்போதே என முழு தயார் நிலையில் கற்றல் செயல்பாடுகளைத் தொடங்கி அவற்றை முறையாகத் தொடர வேண்டும். ஒத்திப்போடுவது பாடச் சுமையை அதிகரிக்கும். பாடம் மீதான ஆர்வம் குறையவும் காரணமாகிவிடும்.

வேண்டாமே முழு மனப்பாடம்

பாடப் பகுதிகளை மனப்பாடம் செய்ய முற்படும்போதுதான், நினைவாற்றல் தொடர்பான தகராறுகள் தொடங்குகின்றன. பாடக் கருத்துக்களை புரிந்து உள்வாங்காமால், அவற்றை அப்படியே மனப்பாடம் செய்யக் கூடாது. அவ்வாறு முயல்வது, படிப்பது, அவற்றை நினைவில் இருத்துவது, தேர்வில் நினைவு கூருவது என எல்லா இடங்களிலும் தடுமாற்றத்தையே தரும். எனவே பாடங்களை படங்களின் வாயிலாக எளிமையாக மனதில் பதிய முயலலாம். புதிய பாடநூல்களில் பாடக்கருத்துக்
களின் சாரம்சம், பாடத்தின் முக்கியக் கருத்துக்கள் படமாகவும், பட்டியலாகவும் தரப்பட்டுள்ளன.

பாடங்களை ‘படம்’ செய்வோம்

மேலும் கீழ்வகுப்புகளில் மாணவர்கள் கற்றுக்கொண்ட மன வரைபட உத்தியை பயன்படுத்தியும், பாடக்கருத்துக்களை நினைவில் இருத்தலாம். இதன் மூலம் பாடங்களைப் படிப்பதில் முதல்முறை மட்டுமே சில நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்க வேண்டி இருக்கும்.

மனவரைபட முறையில் பாடப்பொருளை புரிந்து கொள்வதுடன், முக்கிய வார்த்தை பிரயோகங்களை மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும். தேர்வுத் தாள் மதிப்பீடு செய்யப்படும்போதும், இந்த முக்கிய வார்த்தை பிரயோகங்களே திருத்துபவரின் கவனத்தை ஈர்த்து மதிப்பெண்களை குவிக்க செய்யும்.

படிப்படியாய் படிப்போம்

பாடங்களை முதல் முறை மட்டுமே முழுமையாக படித்தால் போதும். அடுத்தமுறைகளில் படிக்கும்போது ‘கீ வேர்ட்ஸ்’ எனப்படும் முக்கிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டே விரைவாக கடந்து செல்லலாம். முதல்முறை படித்தலில், ஒரு பாடத்தின் ஒட்டுமொத்த கருத்தை புரிந்துகொள்வது, குறிப்பிட்ட பாடத் தலைப்பின் கீழான விபரங்களை புரிந்து கொள்வது, பின்னர் குறிப்பிட்ட வினாவுக்கான பதிலை படிப்பது என்ற படிப்படியான நிலைகள் உதவும். ஒரே பாடத்தில் உள்ள இணையான மற்றும் வேறுபட்ட பாடக் கருத்துக்களை கொண்ட வினாக்களை ஒப்பிட்டு படிப்பதன் மூலம், நேர விரயத்தை தவிர்க்கலாம்.

திருப்புதல் செய்வோம்

பாடம் நடத்தும்போது கவனிப்பதுடன், இயன்ற வரை அன்றைய தினமே விரிவாக படித்துவிடுவது முக்கியம்.இதனால் குறிப்பிட்ட பாடமும் அதற்கான கருத்துக்களும் மனதில் ஆழப்பதிந்து விடும். மனவரை படம், வினாத் தொகுப்புகள், ஒப்பிடல் மற்றும் வேறுபாடு அட்டவணைகள் உள்ளிட்ட சொந்தத் தயாரிப்புகளின் உதவியுடன் திருப்புதல் செய்யும்போது அவை விரைவாக நடைபெற வாய்ப்பாகும். மேலும் உள்ளிருந்து வினாக்கள் கேட்டாலோ, வழக்கமான வினாவினை சுற்றி மாற்றிக் கேட்டாலோ கவலையின்றி விடையெழுத இந்த சொந்தத் தயாரிப்புகள் வெகுவாய் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x