முனைவர் என்.மாதவன்
கிரேக்க நாட்டில் செல்வாக்கு மிக்க நபராக அவர் வாழ்ந்து வந்தார். அதனால் அவர் பேச்சுக்கு மறுபேச்சென்பதே கிடையாது. கிரேக்க மன்னர் பிலிப் தமது மகனுக்கு கல்வி போதிப்பதற்காக இவரை மாசிடோனியாவிற்கு வரவழைத்தார். லைசியம் என்ற பெயரில் ஒரு பள்ளியும் இவர் நடத்தினார்.
நாடுகளை வெற்றிகொள்ளும்போது பிடிக்கப்படும் படைவீரர்களை அடிமையாக்குவதை இவர் எதிர்த்தார். ஆனால், அதே நேரத்தில் உள்ளூரில் மக்களை அடிமைகளாகக் கொள்வதை தவறில்லை என்றார். பூமியானது பிரபஞ்சத்தின் மையம். சூரியன், சந்திரன் போன்றவை பூமியைச்சுற்றுகிறது என்ற புவிமையக்கோட்பாட்டை ஆதரித்தவர். ஆனால், இவருக்குப் பின்னால் வந்த கோபர்நிகஸ், கலிலியோ போன்றோர் இதனை தவறென நிருபித்தது வேறு கதை. அட யாருப்பா அவர் இவ்வளவு பீடிகை என்கிறீர்களா? அவர்தான் அரிஸ்டாட்டில். (கி.மு. 384 முதல் 322 (347 என்றும் சொல்லப்படுகிறது) வரை வாழ்ந்தவர்)
பலவற்றுக்கு முன்னோடி
இன்றைக்கு சாதாரணமாகப் பார்த்து நாம் என்ன இப்படி அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறாரே என்று கூறிவிடலாம். ஆனால், தொகுத்தல், வகைப்படுத்துதல், ஆய்தல், முடிவுக்கு வருதல் என்ற அறிவியல் அடிப்படையில் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆய்வு முறையின் முன்னோடி அவர். உயிரியல், தாவரவியல், வேதியியல், அறவியல், தர்க்கம், தத்துவம், அரசியல், உளவியல் என அனைத்துவகையான அறிவியல் பிரிவுகள் குறித்தும் ஆழ்ந்த சிந்தனைகளை முன்வைத்தவர். அறிவை வெளிப்படுத்தும் முறையில் உரையாடல் வடிவில் தொகுத்ததில் இவருக்கு முக்கிய பங்குள்ளது.
அரிஸ்டாட்டிலுக்கும் சறுக்கும்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பற்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டா? உண்டு என்பதே அரிஸ்டாட்டிலின் வாதமாக இருந்தது. அதாவது ஆண்களை விட பெண்களுக்கு பற்கள் குறைவு. அதற்கு அவர் அளித்த விளக்கம் இன்னும் ஒரு படி மேலானது. அதாவது ஆண்கள்தான் சமூக மாற்றத்திற்காக அதிகம் உழைக்கின்றனர். யோசிக்கின்றனர். எனவே ஆண்களுக்கு அதிகம் மூளை வளரவேண்டும்.
இதற்காக அவர்கள் அதிகம் உண்ணவேண்டும். அவ்வாறு அதிகம் உண்ணவேண்டும் என்றால் அதிகம் உணவை அரைக்கவேண்டும். அவ்வாறு அதிகமாக அரைப்பதற்கு அவர்களுக்கு அதிகம் பற்கள் என்றார். தமது மனைவியின் வாயைத் திறக்கச் சொல்லி எண்ணிப் பார்த்திருந்தாலே இது தவறெனத் தெரிந்திருக்கும். ஆனால், ஏனோ அவர் இதை செய்யவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகே இவர் கூறியது தவறு எனக் கண்டறியப்பட்டது.
நேற்று, இன்று, நாளை
நீயுட்டன் ஒருமுறை, “நான் இவ்வளவு தெளிவாக சிந்திக்கிறேன். ஆய்வு செய்கிறேன் என்றால் கலிலியோவின் தோள்களில் நின்று கொண்டு நான் அறிவியலைப் பார்க்கிறேன்” என்றார். இதே போல, அறிவியல் துறையை அணுகும் விதத்தை தமக்குப் பின்னால் வந்த அறிவியல் அறிஞர்களுக்கு அளித்ததில் அரிஸ்டாட்டிலுக்கு மகத்தான பங்குள்ளது. அதே நேரத்தில் அவர் சொன்னதெல்லாம் சரி என்று ஒப்புக்கொள்வதற்கில்லை. இங்கு அரிஸ்டாட்டில் என்ற ஆளுமை ஒரு உதாரணம் மட்டுமே.
நாமும் சரியோ தவறோ மனதுக்கு சரியெனப் படுவதை வெளிப்படுத்தும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் எழுதிக்கூட வைக்கலாம். இதனால் நம்முடைய நேற்றைய சிந்தனையையும், இன்றைய சிந்தனையையும் ஒப்பிட்டு பார்க்கலாம். இவ்வாறு செய்யும்போது நமது சிந்தனை வளர்ச்சியை ஒப்புநோக்கி அளவிடலாம். கல்வி என்பதே சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றத்தை உருவாக்குவதுதானே!
கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்.
WRITE A COMMENT