பிரியசகி
கீர்த்தி பள்ளிக்குள் நுழைந்தபோது பள்ளி முதல்வரின் அறையில் இரு பெற்றோர் வாக்குவாதம் செய்துக் கொண்டிருப்பதை கண்டாள். அருகில் சென்று பார்த்தால், வகுப்புத்தோழன் டேனியேலுடன் அவனது பெற்றோரும் தம்பியும் நின்று கொண்டிருந்தனர்.
அருகில் தலையில் கட்டுடனிருந்த சிறு பெண்ணின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம், "ஏன் சார் லூசுப் பசங்களையெல்லாம் ஸ்கூல்ல சேக்குறீங்க... பாருங்க நேத்து எம் பொண்ணத் தள்ளிவிட்டு எவ்வளவு பெரிய அடிபட்டிருக்கு. ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?” என ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கீர்த்தியைக் கண்ட முதல்வர் வகுப்பறைக்குச் செல்லுமாறு அதட்டவே தன் வகுப்பறைக்குச் சென்றாள். டேனியல் சற்று தாமதமாக வகுப்புக்கு வந்தான்.
ஆசிரியர்: ஏன்டா லேட்டு? டேனியேல்: சார் நேத்து ஒரு சின்னப் பிரச்சினை. அதைப்பத்தி விசாரிக்க பிரின்ஸ்பால் கூப்பிட்டார்
ஆசிரியர்: ஏன் என்னாச்சு?
டேனியேல்: சார் என் தம்பிக்கு ஆட்டிசம். யாரோடையும் பேசாம தனியா விளையாடுவான். சில நேரம் டென்சனானா கத்துவான், ஓடுவான், குதிப்பான், சுவரில முட்டிக் குவான். அவனையே கடிச்சுக்குவான். ரொம்பக் கோப்படுத்துறவங்களதான் பிடிச்சுத்தள்ளுறது, அடிக்குறதுனு பண்ணுவான்.
எப்பவுமே ஊஞ்சல்ல விளையாடுறது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். உட்கார்ந்தா இறங்கவே மாட்டான். நேத்து ஊஞ்சல்ல உட்கார்ந்து விளையாடிட்டு இருந்தான். அவன் கிளாஸ் பொண்ணு தான் விளையாடனும்னு இவனை இறங்க சொல்லியிருக்கா. இவன் அதை கவனிக்காம இருக்கவே ஊஞ்சலை நிறுத்தி, கையைப் பிடிச்சு இழுத்திருக்கா.
இவன் கோபத்துல தள்ளிவிட்டிருக்கான்; ஊஞ்சல் கட்டைல இடிச்சு ரத்தம் வந்துடுச்சு. அவன் வேணும்னு செய்யலை சார். அவனை எல்லாரும் மெண்டல், லூசுன்னு கூப்புடுறாங்க. பாவம் சார் அவன்.
(அழுகிறான் டேனியேல்)
பிரேம்: சார், நேத்து நான் அங்கேதான் இருந்தேன். அவன் லூசு மாதிரிதான் நடந்துக்கிட்டான். அந்தப் பொண்ணப் பிடிச்சுத் தள்ளிட்டு இவன் சத்தமா கத்துறான்,
சுத்தி சுத்தி ஓடுறான், கீழே விழுந்து மண்ணுல புரண்டு அழுகுறான், பார்க்கவே சிரிப்பா வந்துச்சு.
ஆசிரியர்: பிரேம், யாரையுமே லூசு, மென்டல்னு சொல்லக்கூடாது. உன்னோட தம்பியோ, தங்கச்சியோ இப்படி இருந்தா அவங்களையும் இதே மாதிரி கூப்பிடுவியா?
பிரேம்: சாரி சார்.
ஆசிரியர்: ஸ்டூடெண்ட்ஸ் நல்லா கவனிங்க. மென்டல் ஹெல்த் என்ற ஆங்கில வார்த்தைக்கு மனநலம் என்பது பொருள். மனநலம் குன்றியவர்களையும், அறிவுத் திறனில் குறைவாக உள்ளவர்களையும் இந்த மாதிரி மெண்டல்னு கூப்பிடுறது தவறான வழக்கம்.
அதுவும் ஆட்டிசம், டிஸ்லெக் ஸியா என்ற கற்றல் குறைபாடு போன்றவற்றிற்கும் அறிவுத் திறனுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவர்களுடைய அறிவுத் திறன் சராசரியாகவோ, சராசரிக்கும் அதிகமாகவோ இருக்கும். இந்தக் குறைபாடு உடையவர்களில் பலர் மேதைகளாகக் கூட இருக்கலாம்.
ராஜா: அப்புறம் ஏன் சார் அந்தப் பையன் அப்படி வித்தியாசமா நடந்துக்கிட்டான்?
ஆசிரியர்: கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய ஐம்புலன்கள் தரும் தகவல்களை மூளை உணர்ந்து அதற்கேற்ப தரும் பதில் கட்டளைகளைக் கொண்டுதான் நாம் இயங்குகிறோம்.
இதில் நமக்கு எந்த சிரமமும் இல்லாததால் சூழ்நிலை களுக்கேற்ப நாம் சரியாக நடந்துக்குறோம். ஆனா ஆட்டிச பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஐம்புலன்கள் மூலம் வரும் தகவல்களை உள்வாங்குவதிலும் அவற்றைப் புரிந்து கொண்டு நடப்பதிலும் பிரச்சினை இருப்பதாலதான் இப்படி நடந்துக் குறாங்க.
(மணி அடிக்கிறது)
சரி அடுத்த வகுப்புில் இதைப் பற்றி விரிவா பேசலாம்.(தொடரும்)
கட்டுரையாளர்: எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்.
WRITE A COMMENT