இங்கிலாந்தின் இதயமான புரூக்பீல்ட் பள்ளியில் புதிய கல்வியாண்டிற்கான முதல் கூட்டம். திரளான மாணவர்களும் ஆசிரியர்களும் குழுமி இருக்கிறார்கள். பள்ளி முதல்வர் பேசத் தொடங்குகிறார்.
“அன்பான மாணவர்களே, உங்களது தேர்வு முடிவுகள் சிறப்பாக இருந்தன. சிப்ஸ் என்று அன்போடு அழைக்கப்படும் திரு. சிப்பிங் கடந்த 58 ஆண்டுகளில் இன்றுதான் முதல் கூட்டத்தில் பங்குபெற இயலாத நிலை. 83 வயதான அந்த இளைஞருக்கு உடல் நலக்குறைவு” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பிடித்தமான தோற்றம்
மெலிந்த ஒல்லியான தேகம் கொண்டவயதான ஒருவர் கைத்தடியை ஊன்றிஅரங்கை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார். வெளுத்த பரட்டை முடி. கூர்மையான நாசி. வட்டக்கண்ணாடி. பார்த்தவுடன் பிடிக்கும் தோற்றம் கொண்ட அவர்தான் ஆசிரியர் சிப்பிங்.
கூட்டம் முடிந்து வெளிவரும் மாணவர்கள் சிப்ஸுக்கு வணக்கம் கூறுகிறார்கள். அவர்களின் பெயரையும் அவர்களின் அப்பா, தாத்தா பற்றிய கிண்டலையும் மறக்காமல் கூறுகிறார் சிப்ஸ்.
ஆசிரியர்களை சந்திக்கிறார் சிப்ஸ். புதிதாக வேலைக்கு வந்திருக்கும் ஆசிரியர், “இப்போது நீங்கள் அனைவருக்கும் பிடித்தவராக இருக்கிறீர்கள். ஆனால், புதிதாக பணியில் சேர்ந்த போது மாணவர்களிடம் இருந்து கஷ்டத்தை அனுபவித்தீர்களா? இறுதியில் மாணவர்களை வசப்படுத்தும் ரகசியத்தைக் கண்டுபிடித்திருப்பீர்கள்” என்கிறார் ஆசிரியர்.
“வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னால் பய உணர்வோடு நிற்கும் முதல் ஆசிரியர் நீங்கள் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்” என்கிறார் சிப்ஸ்.
விரியும் நினைவோடைபள்ளிக்கு அருகிலேயே இருக்கும் தனது வீட்டிற்குச் செல்கிறார் சிப்ஸ். ஓய்வெடுக்கும்போது நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
மணி ஓசை கேட்கிறது. புதிதாக ஆசிரியப் பணியில் சேர்ந்த சிப்பிங் வரும்முன்பே மாணவர்கள் அமைதியாக அமர்ந்திருக்கின்றனர். அமைதியாக இருப்பது போலநடித்துக்கொண்டே அபத்தமான கேள்விகளைக் கேட்கிறார்கள். போக போக அவர்களுக்குள் சண்டை மூள்கிறது. கலவர பூமியாக மாறிய வகுப்பறைக்குள் தலைமையாசிரியர் நுழைகிறார். அவரது சத்தம் கேட்டவுடன் கும்பலாக விழுந்து சண்டையிட்டுக்கொண்டு இருந்த மாணவர்கள் எழுகின்றனர். அவர்களுக்குள் இருந்து பரிதாபமாக எழுந்து நிற்கிறார் சிப்பிங்.
அன்றிலிருந்து சிப்பிங் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார். அவரது முகம் எப்போதும் இறுகியே காணப்படுகிறது. கல்வியாண்டுகள் கடக்கின்றன. விடுமுறைக்கு செல்லும் மாணவர்கள் சில ஆசிரியர்களுடன் நன்றாகப் பேசுகின்றனர். தான் வலியச் சென்று பேசினாலும் பேசாமல் ஓடிவிடுகின்றனர் என்று நடுத்தர வயதான சிப்பிங் மனதுக்குள் வருத்தம் அடைகிறார்.
அன்பான மனைவி
விடுமுறையின் போது திருமணம் செய்துகொள்கிறார். புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் சிப்ஸிபின் திருமணம் செய்திருக்கிறார் என்பதே செய்தியாக இருக்கிறது. அவரது மனைவி அனைவரிடமும் அன்பாக பழகுகிறார். மனைவியிடம் இருந்து நகைச்சுவையாகப் பேச சிப்ஸ் கற்றுக் கொள்கிறார். அவரது மனைவி அழைக்கும் செல்லப்பெயரான சிப்ஸ் என்பது நிலைத்துவிடுகிறது. சிப்ஸ் உடன் மாணவர்கள் அன்பாக பழகுகின்றனர்.
தலைப் பிரசவத்தின்போது சிப்ஸின் குழந்தையும் மனைவியும் இறக்கின்றனர். அந்த பேரிழப்பிற்குப் பின் மாணவர்களே அவரது உலகமாக ஆகின்றனர்.
1000 குழந்தைகள் இருக்கிறார்கள்!
ஆண்டுகள் பல கடக்கின்றன. ஓய்வு பெறுகிறார் சிப்ஸ். முதல் உலகப்போர் தொடங்குகிறது. பள்ளியின் இளம் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் ராணுவத்தில் சேருகிறார்கள். பள்ளியை நடத்துவதற்காக சிப்ஸை தலைமையாசிரியர் ஆக்குகிறார்கள். போர் முடியும் வரை பள்ளியை நன்கு பார்த்துக்கொள்கிறார் சிப்ஸ்.
மலரும் நினைவுகளை அசைபோட்டபடி வீட்டுக்குச் செல்கிறார் சிப்ஸ்.
சிப்ஸின் உடல்நிலை மோசமாகிறது. பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் மற்றும்சில ஆசிரியர்கள் வருகிறார்கள். “வாழ்க்கைமுழுவதும் தனியாக வாழ்ந்தவர். பாவம்,மனைவி இறந்துவிட்டார். குழந்தையும் இல்லை” என்று வருந்திப் பேசிக்கொண்டிருக்கின்றனர். சிப்ஸ் அவர்களை மெதுவாக அழைக்கிறார்,“என்னை பற்றி நீங்கள் பேசியதைக் கேட்டேன். எனக்குக் குழந்தைகள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கிறார்கள்” என்று சொல்லும் அவரின் நினைவில் முன்னாள் மாணவர்கள் அறிமுகம் தொடர்கிறது. இப்போது பார்த்த இளம் மாணவன் போயிட்டு வரேன் சார்! என்று சொன்ன நினைவோடு சிப்ஸ் இயற்கையில் கலக்கிறார்.
1934-ல் வெளியான நாவலை மையமாகக் கொண்டு 1939-ல் எடுக்கப்பட்ட படம் Goodbye Mr.Chips. எல்லாக் காலங்களிலும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. கற்பித்தலில் ஆர்வமும் தொடர்ந்த தேடலும் உள்ளவர்களுக்கு அதற்கான பதில் கிடைத்துவிடுகிறது.
மாணவர்களின் பேச்சுக்குக் காது கொடுக்கும், அன்போடு கவனிக்கும் ஆசிரியர்கள் வாடா மலர்கள். அவர்களை மாணவத் தேனீக்கள் வட்டமிடுவார்கள்.
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
படம் : Goodbye, Mr. Chips
ஆண்டு : 1939
மொழி : ஆங்கிலம்.
WRITE A COMMENT