நதிகள் பிறந்தது நமக்காக! 4- பொங்கிப் பாய்ந்த வெள்ளம்!


நதிகள் பிறந்தது நமக்காக! 4- பொங்கிப் பாய்ந்த வெள்ளம்!

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஆற்று நீர் எல்லாருக்கும் நன்மைதானே செய்யும்? அப்படி இருக்க, ஒரு நதியை, ஒரு மாநிலத்தின் துயரம் என்று சொல்வது சரியா?

வறட்சி, வெள்ளம் இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இயற்கையின் தவறு அல்ல. மாறாக, மனிதனின் பொறுப்பின்மையின் விளைவு.

துயர நதியா?

மேற்கு வங்கத்தின் துயரம் என்று விளிக்கப்பட்டது ஒரு நதி.

காரணம், வெள்ளப்பெருக்கெடுத்து கரைகளை உடைத்துக் கொண்டு, நகரங்களுக்குள் புகுந்து, பெரும் சேதத்தை விளைவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது அந்த நதி. தற்போது இதுவெல்லாம் இல்லை.

ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டன. மிதமிஞ்சி வந்த வெள்ள நீர் சேமிக்கப்பட்டது. தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டது. சேதங்களும் தவிர்க்கப்பட்டன.

இந்தத் துயர நதியின் பெயர் தாமோதர். அகன்ற, ஆழம் இல்லாத, மழை நீரால் நிரம்புகிற நதி. ஜார்க்கண்ட் மாநிலம் பலமாவ் மாவட்டம் சோட்டா நாக்பூர் பீடபூமியில் உள்ள கமர்பட் குன்று தாமோதர் நதி உற்பத்தி ஆகும் இடம். ஜார்கண்ட், மேற்கு வங்கம் வழியே 592 கி.மீ. நீளம் பாய்ந்து, கொல்கத்தாவில் ஹுக்ளி நதியில் கலக்கிறது.

23,300 சதுர கி. மீ.அளவுக்குப் பரந்து இருக்கிற இதன் ஆற்றுப் படுகை, 74 சதவீதம் ஜார்க்கண்டிலும் 26 சதவீதம் மேற்கு வங்கத்திலும் அமைந்துள்ளது.

வனமும் வளமும்

நதி பாயும் வழியெங்கும் காட்டு மரங்களும், விளை நிலங்களும் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட மலர்கள், 800-க்கும் மேற்பட்ட பிற வகைத் தாவரங்கள் தாமோதர் நதிக் கரையில் வளர்கின்றன.

உலகின் மிக வளமான இரும்புத் தாது; நாட்டிலேயே மிக அதிகமாக, (சமையல்) கரி, காப்பர்,கைனைட், மைக்கா ஆகியன, தாமோதர் நதிப் பகுதிகளில் கிடைக்கின்றன.

பராக்கர், கோனார், பொக்காரோ, ஹஹாரோ,ஜாம்னியா, காரி, காயா, குடியா, பேரா ஆகியனதாமோதர் நதியின் கிளை ஆறுகள்.

அமுதம் விஷமாகலாமா?

தாமோதர் நதியை ஒட்டி, தொழில் நகரங்கள் பல உள்ளன.

சந்திரபூரா, ராம்கர், பொக்காரோ, ஜாரியா, சிந்த்ரி, தன்பாத், அசன்சால், அண்டால், துர்காபூர், பர்த்வான், ஹௌரா. ஒவ்வொன்றும், முக்கிய தொழில் மையம் ஆகும்.

தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக, ஆற்று நீர், மோசமாக மாசு அடைந்துள்ளது. இந்த ஆறு பாயும் பல பகுதிகளில், மக்களின் நீர் ஆதாரமாக இது மட்டுமே உள்ளது.

இவர்கள், நச்சு நீருக்கு ஆட்பட்டுள்ளதாக, ஜார்க்கண்ட் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.

தாமோதர் ஆற்றின் கிளை ஆறான நல்கரியில், எண்ணெய், சாம்பல் மிக அதிக அளவில் தென்படுகிறது.

பட்ராட்டு மின் நிலையம் வெளியேற்றுகிற கழிவுகளே காரணம்.

தாமோதர் நதி மாசடைவதைத் தடுத்து, அந்த ஆறு மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான நடவடிக்கையை பரிந்துரை செய்து, ஜார்க்கண்ட் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், செயல் திட்டம் வகுத்து இருக்கிறது.

(Action Plan for rejuvenation of Damodar river in Jharkhand)இந்த வாரியத்தின் அறிக்கை - 6-வது பக்கத்தில் (அத்தியாயம் 1.2) ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில், நெல் விளைகிறது - ஒரு ஹெக்டேரில்1.11டன் .

இந்தியாவின் சராசரி - ஒரு ஹெக்டேரில் 1.9 டன்.

இதுவே தமிழ்நாட்டில் விளைச்சல் - 3.2 டன் / ஹெக்டேர்!தாமோதர் நதி - சொல்லும் செய்தி இதுதான்: ஆறு - இயற்கை தந்த கொடை. அதனை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நம் கடமை.

(தொடர்வோம்).

- கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

WRITE A COMMENT

x