கிங் விஸ்வா
ஒரு காலத்தில் ஒரு ஊரில் ஓர் எலி வசித்து வந்தது. குட்டி எலியான அதன் வால் மிகவும் நீளமாக இருந்தது. அதனுடைய நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் எல்லாம் “ஆகா, எவ்வளவு நீளமான வால்?” என்று வியந்து பாராட்ட, அந்த குட்டி எலிக்குக் கர்வம் பிடித்து விட்டது.
அதன்பிறகு, எங்கே சென்றாலும் அந்தக் குட்டி எலி தனது வாலை ஓரக்கண்ணால் பார்த்தபடிதான் செல்ல ஆரம்பித்தது. இதனால் மற்ற எலிகள் அதற்கு ‘ஓரக்கண்ணி’ என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டன.
ஓரக்கண்ணியின் சேட்டைகள்
குட்டி எலிக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை என்றாலும், அந்தப் பட்டப்பெயரே நிலைத்துவிட்டது. குட்டி எலியின் அம்மா முதற்கொண்டு அனைவரும் இதே பெயரைக் கொண்டு அதை அழைக்க ஆரம்பித்தனர்.
நீளமான வால், என்பதால், ஓரக்கண்ணி அதைச் சுருட்டி கொண்டை போட்டு, பூவைச் சூடிக்கொள்ளும். இதை அனைவரும் பார்க்க வேண்டும் என்றே அங்கும் இங்குமாக நடக்கும். சில நேரம், தனது வாலை ‘ஸ்கார்ஃப்’ போலச் சுருட்டி கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொள்ளும்.
வீட்டில் தூங்கும்போது கூட தலையணையாகச் சுற்றி தலைக்கு வைத்து படுத்துக்கொள்ளும். குளத்தில் நீர் பிடித்து வருவது ஓரக்கண்ணிக்கு மிகவும் பிடித்த வேலை. தனது வாலையே கம்மாடு போலச் சுற்றி, அதன் மீது குடத்தை வைத்து, நடந்து வரும். அப்போது அனைவரிடமும் கையை ஆட்டி, ஆட்டி பேசி, தனது குடத்தைப் பிடிக்க, தனது நீளமான வாலே போதும் என்பதைச் சுட்டிக் காட்டும்.
எச்சரிக்கையைப் பொருட்படுத்தலையே!
ஓரக்கண்ணியின் வீட்டருகே ஒரு பழைய கண்ணாடி அணிந்த சிலந்தி வசித்து வந்தது. டாக்டரான அந்த சிலந்தி, ஓரக்கண்ணியின் வீட்டருகே வசித்து வந்த கிழடுதட்டிப் போன பூனையைப் பற்றி அடிக்கடி எச்சரிக்கும். ஆனால், எப்போதும் தனது வாலை மட்டுமே கவனித்து வந்த ஓரக்கண்ணிக்கோ, வயதான அந்தப் பூனையால் எந்த ஆபத்தும் வராது என்ற எண்ணம் இருந்தது.
ஒருநாள், வழக்கம்போல வாலை மட்டுமே கவனித்து வந்த ஓரக்கண்ணி, விழித்திருந்த அந்தப் பூனையைக் கவனிக்கவில்லை. சட்டென்று ஒரே தாவலில் வாலைப் பிடித்தது பூனை. ஓரக்கண்ணி தனது பலம் கொண்ட மட்டும் இழுக்க, ஒரு கட்டத்தில் வால் அறுந்து, துண்டாகி விட்டது. அறுபட்ட வாலுடன் ஓரக்கண்ணி தனது வீட்டிற்குள் சென்றுவிட, பூனையோ அந்த வாலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது. அழுதவாறே அதனிடம் சென்று, தனது வாலைக் கேட்டது ஓரக்கண்ணி.
ஓடினாள் ஓடினாள்!
வயதான அந்தப் பூனை, “நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன். ஆகவே, எனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வா, உனது வாலைத் தந்துவிடுகிறேன்” என்றது. ஓரக்கண்ணி வேகமாகப் பால்காரன் வீட்டைச் சென்றடைந்தது. பால்காரன் வால் என்ன ஆனது என்று கேட்க, ஓரக்கண்ணி விஷயத்தைச் சொன்னது. பரிதாபம் கொண்ட அந்த பால்காரன் “என்னுடைய மாடு லட்சுமிக்குக் கொஞ்சம் புல் கொண்டு வந்து கொடுத்தால், பால் கறந்து தருகிறேன்” என்று சொன்னான்.
ஓரக்கண்ணி உடனே புல் விற்கும் கிழவியிடம் செல்ல, அந்தக் கிழவி ஊறுகாய் போட எண்ணெய் தந்தால், புல் கட்டுத் தருவதாகச் சொல்ல, எண்ணெய் விற்பவரிடம் ஓடியது ஓரக்கண்ணி. அவரோ, தனது மனைவிக்கு மாங்காய் கேட்க, பழக்கடைக்காரரிடம் சென்று கேட்டது. அவரது மனைவியோ, மாவு கொடுத்தால், மாங்காய் தருவதாகச் சொல்ல, மாவு அரைப்பவரிடம் ஓடியது ஓரக்கண்ணி.
மாவு அரைப்பவரோ, “எனது மாவு மூட்டைகளை எல்லாம் எலிகள் கடித்து விடுகிறது. எனவே, எனது மூட்டைகளைக் கடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்து, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடு” என்று கேட்க, ஓரக்கண்ணிக்கு பிரச்சினை உருவானது. ஏனென்றால், அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
இந்தச் சூழலை எப்படி ஓரக்கண்ணி சமாளித்தது என்ற முடிவு ஒருபக்கம் இருக்க, அனைவரையும் சார்ந்து வாழ்தலே வாழ்க்கை என்ற ஒரு கருத்தை மிகவும் அழகாக இந்தக் கதையின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் கதாசிரியர் எம்.சி. கேப்ரியேல். நாட்டுப்புறக் கதையொன்றைத் தழுவி எழுதப்பட்ட இந்த சிறுவர் கதையைத் தனது வண்ணமயமான ஓவியங்களால் தத்தா மெருகூட்டுகிறார்.
- கட்டுரையாளர்: காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்.
வால் இழந்த எலி
(A Tale of Trouble)
கதாசிரியர் : எம்.சி.கேப்ரியேல்
ஓவியர் : ஜ்யோதிஷ் தத்தா குப்தா
தமிழாக்கம் : ஆர் ஷாஜஹான்
பதிப்பாளர் : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
விலை : ரூ.30
WRITE A COMMENT