பிரியசகி
திருநங்கையரைப் பற்றிய தங்களது சந்தேகங்களை தனராஜ் தாத்தாவிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தனர் சுதாகரும், கீர்த்தியும்.
கீர்த்தி: தாத்தா, திருநங்கையா பிறப்பது பிறவிக் குறைபாடுன்னா அது பிறந்த உடனே தெரியாம, ஏன் எட்டாவது, ஒன்பதாவது படிக்கும் போதுதான் தெரியுது?
தனராஜ்: சின்னக் குழந்தையிலிருந்தே ஆண், பெண் குழந்தைகள் ஒண்ணா விளையாடினாலும் டீன்ஏஜ்னு சொல்ற பதின் பருவ வயது வந்ததும் ஆணைப் பார்த்து பெண்ணோ, பெண்ணைப் பார்த்து ஆணோ வெட்கப்பட்டு, சேர்ந்து விளையாடுறதைத் தவிர்க்குறாங்க. ஏன்னா ஆண், பெண் இருவரோட உடலிலும் ஹார்மோன்களால் நிறைய மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு மார்பக வளர்ச்சி, இடுப்பெலும்பு பெரிதாகுதல், மாதவிடாய் தொடங்குவது என பல மாற்றங்கள் ஏற்படுவது போல ஆணின் உடலிலும் விலா எலும்புகள் விரிவடைதல், குரல் மாற்றம், கை, கால்களில் முடி வளருதல் விந்தணு உற்பத்தியாதல்னு மாற்றங்கள் டீன் ஏஜ்லதான் வரும்.
ஆணுக்கோ, பெண்ணுக்கோ உடல் உறுப்புகளிலும் உணர்வுகளிலும் எற்படும் மாற்றங்கள் ஒத்துப் போறதால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. ஆனா திருநங்கையர், திருநம்பிகள் உடலில் வளரிளம் பருவத்தில் ஹார்மோன்களால் மாற்றம் ஏற்படும் போது உறுப்புகளுக்கும், உணர்வுகளுக்கும் முரண்பாடு இருப்பதால்தான் பிரச்சினையே.
கீர்த்தி: சரி தாத்தா, திருநங்கையர்னா யாரு? திருநம்பிகள்னா யாரு?
தன்ராஜ்: ஆண்களா பிறந்து, டீன்ஏஜ்ல தன்னைப் பெண்ணாக உணா்ந்து, பெண்ணாகவே வாழ நினைக்குறவங்க திருநங்கையர். இதுக்கு மாறா, பெண்களா பிறந்து,தன்னை ஆணாக உணர்ந்து,ஆணாகவே வாழ முற்படுபவர்கள்திருநம்பிகள். தான் எந்தப் பாலினமாஇருக்க விரும்புகிறார்களோ அதற்கேற்ப நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொண்டும், திருப்தி அடையாத நிலையில் ஆபரேஷன், ஹார்மோன் சிகிச்சை மூலமும் தன்னை முழுமையா எதிர்பாலினமா மாத்திக்க முயற்சிக்குறாங்க.
கீர்த்தி: தாத்தா, இவங்க பப்ளிக் டாய்லெட்டுக்குப் போனா ஆண்கள் பக்கம் போவாங்களா? பெண்கள் பக்கம் போவாங்களா? ஏன் இவங்களுக்குன்னு தனி டாய்லெட் இல்லை? ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளின்னு இருக்கிற மாதிரி இவங்களுக்கு ஏன் தனிப்
பள்ளிகள் இல்லை. இது பிறவிக் குறைபாடுன்னா அரசாங்கம் ஏன் இவங்களுக்கு படிப்பு, வேலையெல்லாம் குடுக்க ஏற்பாடு பண்ணலை?
தன்ராஜ்: நல்ல கேள்விகள்மா. இதப்பத்தி பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே உனக்குள்ளஇவ்ளோ கேள்விகள் வர்றது ரொம்ப சந்தோஷம். இதைப் பற்றிய விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமா இப்பதான் பரவிக்கிட்டிருக்கு. 2014-வது வருஷம் தான் உச்ச நீதிமன்றம் மாற்றுப் பாலினத்தவர்களை மூன்றாம் பாலினம்னு அங்கீகரிச்சிருக்கு. இவர்களைப் பிற்படுத்தப் பட்டவர்களோடு சேர்ப்பதாகவும், அரசியலமைப்பில் உள்ள எல்லா அடிப்படை உரிமைகளும் இவங்களுக்குக் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணை பிறப்பிச்சிருக்கு.
சுதாகர்: இவங்கள்ல பெரிய ஆளா இருக்கிறவங்க யாராவது இருக்காங்களா தாத்தா?
தனராஜ்: ஓ! நிறைய பேர் முன்னுதாரணங்களா இருக்காங்க. நர்த்தகி நடராஜ் என்ற திருநங்கை நாட்டியக் கலைஞர் பத்மஸ்ரீ விருது வாங்கியிருக்காங்க. சத்யாராய் நாக்பால் என்ற திருநம்பி 2011-ம்ஆண்டுக்கான சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றவர். இந்தியாவில் முதல் திருநங்கை காவல்துறை உதவி ஆய்வாளர் பிரித்திகா யாசினி, சமூக செயல்பாட்டாளர்கள் லிவிங் ஸ்மைல் வித்யா, கல்கி, பிரியா பாபு, ஆஷா பாரதி, நாமக்கல் ரேவதி இன்னும் நிறைய பேரை சொல்லலாம். ஆனா இந்தஅளவுக்கு இவங்க பேர் தெரியுதுன்னா அதுக்கு அவங்க பட்டவலியும், வேதனையும், அவமானங்களும் கொஞ்ச நஞ்சம் கிடையாது.
கீர்த்தி: இவங்களும் நம்மை மாதிரி சந்தோஷமா வாழும் காலம் சீக்கிரம் வரணும் தாத்தா.
(தொடரும்)
கட்டுரையாளர், டான் போஸ்கோ உளவியல் நிறுவனம்
WRITE A COMMENT