ஆர். ரம்யா முரளி
தங்கள் குழந்தைகளைப் பற்றிய கனவு இல்லாத பெற்றோர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஆசைகளும் கற்பனைகளும் இருக்கும். அதற்கு அடித்தளமாக இருப்பது முறையான கல்வி.
கல்வியில் சிறக்க அடிப்படைத் தேவை கவனக்குவிப்பு. ஏனென்றால் ஒரு இடத்தில், நிற்காமல் அலைபாயும் மனதைக் கொண்டு நம்மால் எதையும் சாதிக்க முடியாது. மனதை எப்போதும் நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போதுதான், நாம் நினைத்த இலக்கை அடைய முடியும். மனதை எப்படி நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்? மனம் ஒரு குரங்கு என்றுதானே பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
சம நிலைப்படுத்த
அதற்குத்தான் யோகாசனங்கள் மூலம் முன்னோர்கள் தீர்வு சொல்லி இருக்கிறார்கள். மனதை எப்போதும் விழிப்போடு வைத்து கொள்ளக் கூடிய ஆசனங்கள் நிறைய இருந்தாலும், சம நிலைப்படுத்துவதில் விசேஷமானது விருக்ஷாசனம். விருக்ஷாசனம் என்றால் என்ன, அதை எப்படிச் செய்வது, அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
விருக்ஷாசனம் செய்வது எப்படி?
விருக்ஷம் என்றால் மரம். மரம் போல் நிற்கும் நிலை என்பதால் இதற்கு இந்த பெயர்.
முதலில் கால்களை நேராக வைத்து, முதுகை நிமிர்த்தி நிற்க வேண்டும். பின்னர் இடது காலை மடக்கி வலது தொடையில் பதிய வைக்க வேண்டும். மடித்து வைக்கப்பட்ட கால் 90 டிகிரி அளவில் பக்கவாட்டில் விரிந்திருக்க வேண்டும். பின்னர் மெதுவாக கைகளைத் தூக்கி தலைக்கு மத்தியில் கைகூப்பி வணக்கம் செய்வது போல் வைக்க வேண்டும். பின்னர் கால்களைக் கீழே இறக்க வேண்டும். இப்போது வலது காலை மடக்கி இதே போல் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியின் போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும்.
தொடர்ந்து இந்த ஆசனத்தைச் செய்து வந்தால் கால்கள் வலுப்பெறும், புஜங்கள் விரிவடையும். முக்கியமாக மனதை ஒரு நிலைப்படுத்த முடியும்.
விருக்ஷாசனம் உடலின் சமநிலையைக் கூட்டி, மன தடுமாற்றத்தைப் போக்கும். கவனக் குவிப்புத் திறன் வளரும் என்பதால் படிக்கும்
மாணவர்களுக்கு இது மிகவும் நல்லது. தன்னம் பிக்கை அதிகரிக்கும். ஒரு இடத்தில் நிற்காமல் துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் மனதை ஒரு நிலைப்படுத்த இந்த ஆசனம் மிகவும் உதவும்.
(யோகம் தொடரும்)
-கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
WRITE A COMMENT