பாலாஜி
மைக்ரோபிராஸசர் எனும் சிலிக்கான் செயலகம் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக சிலிக்கான் மூளையின் சில முக்கியமான பாகங்களை பற்றி தெரிந்துகொள்வோமா!
ஆரம்ப காலங்களில் பொறியாளர்கள் மைக்ரோபிராஸசர், ஞாபகப்பகுதி, உள்தொடர்பு பகுதி, வெளித்தொடர்பு பகுதிஎன்று பல செயல்களை செய்யும் பகுதிகளைத் தனித்தனியாக பெற்று அவற்றைPCB போர்டில் ஒன்றாக இணைத்து சிலிக்கான் மூளையை உருவாக்கினார்கள்.
இதன் காரணமாக சிலிக்கான் மூளையின் அளவு பெரிதாக இருந்தது. மேலும் செலவும் அதிகம் ஆனது. இதைக் கருத்தில் கொண்டு பொறியாளர்கள் இவை அனைத்தையும் ஒரே IC-ல் வைத்து உருவாக்கினார்கள். அதன் பிறகு விலையும் குறைந்தது, அளவும் சிறியதானது. இதைத்தான் ‘மைக்ரோகன்ட்ரோலர்’ என்று அழைத்தனர்.
மைக்ரோகன்ட்ரோலர் = மைக்ரோபிராஸசர் + கன்ட்ரோலர் + மெமரி மைக்ரோகன்ட்ரோலர் மெமரியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று அழியாத மெமரி (non- volatile memory) மற்றொன்று அழிக்கூடிய மெமரி (volatile memory). எல்லா மைக்ரோ
கன்ட்ரோலர்களிலும் இரண்டு விதமான அழியாத மெமரிகள் உள்ளன. ஒன்று படிக்க மட்டும் கூடிய அழியா மெமரி (ROM, Read Only Memory). எழுதி, படிக்கக் கூடிய அழியா மெமரி (Flash, Erasable & Readable). படிக்க மட்டும் கூடிய அழியா மெமரியைப் (ROM) பயன்படுத்தி செயல்படுத்தும் பகுதி முதலில் செயல்பாட்டை தொடங்குகிறது. இந்த படிக்க மட்டும் கூடிய அழியா மெமரியில் உள்ளவற்றை மாற்ற முடியாது. இதன் காரணமாக எழுதி படிக்கக்கூடிய அழியா மெமரியில்தான் நாம் புரோகிராமை எழுதவேண்டும். நமது கணினியில் மாற்றிய எண் மொழி புரோகிராமை கணினியில் இருந்து மைக்ரோகன்ட்ரோலருக்கு பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதற்கு நமது கணினியையும் மைக்ரோகன்ட்ரோ லரையும் இணைக்க வேண்டும்.
கணினியையும் மைக்ரோகன்ட்ரோலரையும் இணைப்பதற்கு usb கேபிளைப் பயன்படுத்துகிறோம்.
இந்த ஃபிளாஷ் மெமரியில் ஒரு முறை பரோகிராமை எழுதி விட்டால் எத்தனை முறை மைக்ரோகன்ட்ரோலருக்கான மின்சாரத்தை துண்டித்தாலும், அடுத்த முறை மின்சாரம் தரும்போது மைக்ரோகண்ட்ரோலரில் உள்ள மைக்ரோபிராஸசர் ஃபிளாஷ் மெமரியில் உள்ள எண்மொழி பரோகிராமை படித்து அதன்படி வேலை செய்யும். அதன் பிறகு நாம் எந்த மைக்ரோகண்ட்ரோலரை உபயோகித்தாலும், எவ்வாறு கணினியில் இருந்து மைக்ரோகண்ட்ரோலரில் உள்ள ஃபிளாஷ் மெமரிக்கு எண்மொழி ப்ரோக்ராமை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒரு முறை சரியாகக் கற்றுக் கொண்டால் போதும்.
ஒவ்வொரு மைக்ரோகண்ட்ரோலர் தயாரிப்பாளரும் தங்கள் மைக்ரோகண்ட்ரோலருக்கு என பிரத்யேகமாக ஒரு மென்பொருளை தருவார்கள், அதன் உதவியால் மட்டுமே கம்ப்யூட்டரிலிருந்து மைக்ரோகண்ட்ரோலரில் உள்ள ஃபிளாஷ் மெமரிக்கு எண்மொழி ப்ரோக்ராமை பதிவேற்றம் செய்ய முடியும். அடுத்த தொடரில் எவ்வாறு புரோகிராம் மூலம் மைக் ரோகண்ட்ரோலர் உள்ளீடு வெளியீடு பின்களை கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.
(தொடரும்)
-கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்.
WRITE A COMMENT