திசைகாட்டி இளையோர் 5: கொத்தடிமை போராளி இக்பால் மாஷி


திசைகாட்டி இளையோர் 5: கொத்தடிமை போராளி இக்பால் மாஷி

இரா.முரளி

"என்னடா வேடிக்கைப் பார்க்கிற? வேலையப் பாருடா!"- தரைக் கம்பளம் தயாரிக்கும் தொழிலகத்தின் முதலாளி அந்தச் சிறுவனை விரட்டினான், "ஐயா காலை ஏழு மணியிலிருந்து வேலை செய்யுறேன். இப்ப இரவு 7 மணி ஆயிடுச்சு!"

"அதான் மதியம் அரை மணி நேரம் ஓய்வு எடுத்த இல்ல! தொலைச்சு கட்டிடுவேன். வேலையைப் பாருடா!"

அந்தச் சிறுவனுக்கு வேறு கதி இல்லை. அவன் அப்பா தான்வாங்கிய 600 ரூபாய் கடனுக்காக அவனை நான்கு வயதிலேயே இந்த முதலாளியிடம் அடிமையாக அடகு வைத்துவிட்டார். ஆறு ஆண்டுகாலம் தினமும் 14 மணி நேரம் உழைத்தும், அந்தக் கடன் அடையவில்லை.

அது வட்டியாக குட்டிப்போட்டு என்றும் அடைக்கமுடியாத உயரத்தில் சென்று கொண்டிருந்தது.

தப்பிக்கும் முயற்சி

இந்நிலையில், எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்று தவித்தான் பத்து வயதான அந்த சிறுவன். அவனைப் போன்றே பல சிறுவர்கள் அங்கேஅடிமைகளாக இருந்தார்கள். ஒருநாள் நேரம் பார்த்து தன் நண்பர்கள் சிலருடன் தப்பித்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று முறையிட்டான். ஆனால், அந்தப் போலீஸ் அதிகாரியோ கம்பள தொழிலக முதலாளி தரும் பணத்
திற்கு ஆசைப்பட்டு அவனையும், நண்பர்களையும் மறுபடியும் அங்கேயே ஒப்படைத்தார்.

கடுமையான சித்திரவதைத் தண்டனையுடன் அவன் பணியைத் தொடர வேண்டியதானது. ஆனாலும் அவன் தன்நம்பிக்கையை இழக்கவில்லை. மறுபடியும் திட்டமிட்டு தப்பித்தான். இம்முறை அவன் இஷான் உல்லாகான் எனும் சமூக செயல்பாட்டாளரிடம் அடைக்கலம் புகுந்தான். அவனுக்கு உதவிய அவர்கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டசிறுவர்கள் பாதுகாப்பு அமைப்புஒன்றிடம் அவனை ஒப்படைத்தார். அந்த அமைப்பின் மூலம் அவன் கல்வி கற்கத் தொடங்கினான். அவர்களும் அவனுக்குப் பாதுகாப்பு மட்டுமல்ல, கல்வியும் அளித்தனர். நான்கு ஆண்டுகளில் படிக்க வேண்டிய படிப்பை ஆர்வத்தினால் இரண்டே ஆண்டுகளில் படித்தான்.

செயல்வீரனான சிறுவன்

இந்தச் சிறுவனின் பெயர் இக்பால் மாஷி. 1983-ல் பாகிஸ்தானில் லாகூர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஏழ்மையான கிருத்துவக் குடும்பத்தில் பிறந்தவன். கொத்தடிமை நிலையில் இருந்து தப்பித்து வந்து படித்த போது தன்னைப் போன்றே உலகில் பல பகுதிகளில் சிறுவர்கள் கொத்தடிமைகளாக சிக்கித் தவிப்பதை அறிந்தான். தான் வழக்கறிஞராகி அவர்களின் விடுதலைக்காக போராட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அதற்கு முன்பு, மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்க விழைந்த சிறுவன் இக்பால் பல இடங்களுக்குச் சென்று பேச தொடங்கினான். அவனுக்கு கல்வி வழங்கிய கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு இயக்கமும் அவனை முன்னிறுத்தி பல பரப்புரை நிகழ்ச்சிகளை அமைத்தது.

சுவீடன் மற்றும் அமெரிக்க நாடுகளில் அவன் உரையாற்ற அழைக்கப்பட்டான். உலகின் கொத்தடிமைத் தனத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய இச்சிறுவனின் பங்களிப்பு அனைவரையும் ஈர்க்கத் தொடங்கியது. பேச்சு மட்டுமன்றி, பல சிறுவர்களை இணைத்து அவன் போராடத் தொடங்கினான். அமெரிக்கவின் 'ரீபோக் மனித உரிமை விருது' அவனுக்கு வழங்கப்பட்டது.

கொலை மிரட்டல்

அவன் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால், கொத்தடிமை முறைக்கு எதிராக அரசும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. இதன் விளைவாக பல கம்பள முதலாளிகள் இவனைஎதிரியாகக் கண்டார்கள். பாகிஸ்தானில் இவனுக்குப் பலமுறை கொலை மிரட்டல் விடப்பட்டது. அச்சப்படாமல் முன்னேறினான். உலகின் பல பகுதிகளில் இக்பாலின்குரல் ஒலித்தது. உலகம் சுற்றும் சிறுவனாக ஆகிப்போன அவன், 1995 ஏப்ரல் மாதம் 16ம் தேதி தன் குடும்பத்துடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட பாகிஸ்தான் திரும்பினான். அப்போதுதான் அந்த சோக சம்பவம் நடந்தது. அவன் ஊரைச் சேர்ந்த கம்பள முதலாளிகளின் அடியாளால் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்போது அவன் வயது 12 மட்டுமே! இச்சிறுவனின் இறப்பு பாகிஸ்தானை உலுக்கியது. பாகிஸ்தானிய அரசு கொத்தடிமை தடுப்புச் சட்டங்களைக் கடுமையாக்கியது. இக்பாலின் இறப்பு பல நாடுகளை வருத்தப்பட வைத்தது. கொத்தடிமை ஒழிப்புக்கு குரல்கொடுத்த இக்பாலின் பெயரினால் பல இயக்கங்கள் உருவாகி செயல்பட்டு வருகின்றன.

- கட்டுரையாளர் பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.

FOLLOW US

WRITE A COMMENT

x