ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு
சந்திரயான்-2, அறிவியலை தெருமுனை தேநீர்க்கடை வரை பேசுபொருளாக மாற்றியது. சந்திரயான்-1, மங்கள்யான் வெற்றிகளால் இந்தியாவுக்கு உலக அங்கீகாரம் பெற்றுத் தந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் - இஸ்ரோ.
தமிழ்நாட்டில் மகேந்திரகிரியில் உள்ள உந்துசக்தி வளாகம், ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையம் உள்ளிட்ட 13 ஆய்வு மையங்களை உள்ளடக்கியது இஸ்ரோ. இத்தகைய பெருமைவாய்ந்த இஸ்ரோவில் நீங்களும் விஞ்ஞானி ஆகலாம். எப்படி?
நான்கு வழிகள்
இஸ்ரோ நிறுவனத்தில் விஞ்ஞானியாக நான்கு வழிகள் உண்டு.
முதல் வழி: விண்வெளி துறையின் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்து, வளாகத் தேர்வின் மூலம் விஞ்ஞானியாவது. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology-IIST), இந்திய விண்வெளித் துறையில் இயங்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
பொறியியல் பட்டப்படிப்பில் விண்வெளி பொறியியல், மின்னணு மற்றும் தொடர்பியல் ஆகிய இரண்டுப் பிரிவுகள் இங்கு கற்பிக்கப்படுகின்றன. இங்குப் படிக்கும் மாணவர்கள் இஸ்ரோ நிறுவனத்தில் பணியமர்த்தப்படும் வாய்ப்புகள் அதிகம்.
கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் படிக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்
கலாம். குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இணை நுழைவுத் தேர்வு-உயர்நிலை அளவில் (Joint Entrance Examination - Advanced) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சேர்க்கை அறிவிப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். (மேலும் விவரங்களுக்கு: iist.ac.in).
இரண்டாம் வழி: பிற கல்வி நிலையங்களில் இளநிலை பொறியியல் அல்லது முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர்களும் திறந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்விலும் நேர்முகத் தேர்விலும் தேர்ச்சி அடைந்தால் விஞ்ஞானி பணிக்கு தேர்வாகலாம். இது தொடர்பான அறிவிப்புகள் ஊடகங்களில் வெளியிடப்படும். (பார்க்க: isro.gov.in/careers)
மூன்றாம் வழி: விண்வெளி துறையுடன் தொடர்புடைய சிறப்புப் பாடங்களில் முதுநிலை பொறியியல் பட்டம் பெறுவதன் மூலமாகவும் விஞ்ஞானி ஆகலாம்.
நான்காம் வழி: விண்வெளித் தொடர்புடைய அறிவியல், பொறியியல் துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் முதுநிலை விஞ்ஞானி ஆகலாம். இவ்வகையிலான வாய்ப்புகள் மிகக் குறைவு. அதிலும் குறிப்பிட்ட சிறப்புப் பாடப் பிரிவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி இருக்க வேண்டும்.
விஞ்ஞானியாக என்ன படிக்கலாம்?
இயற்பியல், வேதியியல், இயந்திரப் பொறியியல், மின்னியல், கட்டிடவியல், கருவியியல், மின்னணுவியல், மின்னணு-தொலை தொடர்பியல், கணினி அறிவியல், உலோகவியல், விண்வெளி பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு வாய்ப்புகள் உண்டு. தனியார் அல்லது அரசுக் கல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை படித்திருப்பது போதுமானது.
(தொடரும்)
- கட்டுரையாளர், இயக்குனர்-தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம்.
WRITE A COMMENT