பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இயற்கை அன்னை ஆசிர்வதித்த பூமி கேரளா. 44 ஆறுகள், 27 உப்பங்கழிகள் (back waters), 18681 குட்டைகள், 30 லட்சத்துக்கும் மேலான கிணறுகள், 200 ச.கி.மீ. பரப்பளவில் மிகப்பெரிய வேம்பநாடு ஏரி என தண்ணீர் நிரம்பி வழிகிற மாநிலம் கேரளா.இம்மாநிலத்தின் நான்காவது பெரிய ஆறு சாலக்குடி.
தமிழ்நாட்டின் ஆனைமலையில், பல்வேறு கிளை ஆறுகள் இணைந்து, உருவாகிறது சாலக்குடி ஆறு. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, நெல்லியம்பதி குன்றுகள் மீது உண்டாகும் கிளை ஆறுகளும் இத்துடன் இணைகின்றன.
பாயும் வழியில் செழுமை
குறிப்பாக, கடல் மட்டத்தில் இருந்து 1400 மீ உயரத்தில் உருவாகும், கரப்பரா எனும் கிளை ஆறு, ஒருகொம்பன்குடி எனும் இடத்தில், சாலக்குடி ஆற்றுடன் இணைகிறது. சம்மனம்பட்டி குன்றுகளில் உருவாகும் வெட்டியார், தேக்கடி ஆகிய கிளை ஆறுகளுடன், குரியர்குட்டிசாலக்குடி ஆற்றில் வந்து சேர்கிறது.
பரம்பிக்குளம், சோலயார், அனகாயம்என்று மேலும் மூன்று கிளை ஆறுகள், சாலக்குடி நதியில் கலக்கின்றன. கேரள மாநிலத்தில் 130 கி.மீ. தூரம் பயணிக்கும் சாலக்குடி ஆறு, திரிசூர், பாலக்காடு, எர்ணாகுளம் மாவட்டங்களை செழிப்புடன் வைத்து இருக்கிறது. 38,864 ச.கி.மீ. பரப்பளவுக்கு நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது. இதில், 1200 ச.கி.மீ வனத்துறையின் கீழ் வருகிறது.
மீன்கள் சரணாலயம்
இந்த ஆற்று நீரில் அமைந்துள்ள, அத்திராப்பள்ளி, சர்ப்பா, வழச்சல் அருவிகளுக்கு, உலகம் எங்கும் இருந்து, சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஒரு வகையில் சாலக்குடி ஆறு, மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இந்தியாவிலேயே அதிக அளவில், பல்வேறு வகையறா மீன்கள் கிடைக்கும் ஆறு இதுதான். 'Richest river in fish diversity' என்று இதை குறிப்பிடுகிறது மீன் இன வளங்கள் குறித்த தேசிய நிறுவனம். 104 வகை மீன்கள் வாழும் இந்த ஆற்றை- 'மீன்கள் சரணாலயம்' என்கிறது. இவற்றில் 9 வகை மீன்கள் அரிய வகை, அழிவின் விளிம்பில் இருப்பவை (endangered).
அரிய வகை உயிர்கள்
சாலக்குடி ஆற்று வனப் பகுதியில், 319 வகை மலர்த் தாவரங்கள் பூக்கின்றன. இவற்றில், 24 - அரிய வகைத் தாவரங்கள்; மேலும் 10 - அரிய வகை, அழிவின் விளிம்பில் இருப்பவை.
மிக முக்கியமாக, காடர் எனும் பூர்வகுடி மக்கள், சாலக்குடி ஆறு பாயும் வனப் பகுதிகளில்தான் வாழ்கிறார்கள். இந்த ஆற்றில், 30 நீரேற்று மையங்கள் நிறுவப்பட்டு உள்ளன. பத்து லட்சம் மக்கள், நேரடியாக இந்த ஆற்று நீரால், பலன் அடைகிறார்கள். சாலக்குடி ஆற்றின் மீது, ஏற்கனவே பொரிங்கால்குத்து, சோலயார் ஆகிய நீர் மின் நிலையங்கள் இருக்கின்றன. மேலும், அத்திராப்பள்ளி நீர் மின் நிலையம் அமைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதை இயற்கை ஆர்வலர்கள், கடுமையாக எதிர்க்கின்றனர். ஆற்றுப் பகுதியை ஒட்டி உள்ளது பரம்பிகுளம்பூயம்குட்டி வனப்பகுதி.
இது, யானைகள் இடம்பெயரும் முக்கியப் பகுதி. மேலும் இங்கு, 215 வகை அரிய வகை பறவை இனங்கள் வாழ்கின்றன. மின் நிலையம் காரணமாய், இவை எல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும். மனிதன் உருவாக்கியவை அல்ல ஆறுகள், வனங்கள், விலங்குகள், பறவைகள். இவற்றை அழிப்பதற்கு மட்டும் அவனுக்கு ஏது உரிமை?
(தொடர்வோம்).
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.சிலாகிக்க வேண்டிய சாலக்குடி!
WRITE A COMMENT