கிங் விஸ்வா
வானத்தில் காட்சி தரும் அழகு நிலாவுக்கு ஓர் ஆசை வந்தது. இரவில் வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை உள்ளன என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டது. ஆகவே, ஒன்று, இரண்டு, மூன்று என்று நட்சத்திரங்களை எண்ண தொடங்கியது.
இப்படியே எண்ணிக்கை லட்சக்கணக்கில் தொடர்ந்தபோது, பொழுது விடிந்து சூரியன் வந்துவிட்டது. நட்சத்திரங்கள் வானத்தில் இருந்து மறைய, நிலா தனது கடைசி எண்ணிக்கையை மறந்துவிட்டது.
மறைந்ததும் மறந்தது!
தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளராத நிலா, அடுத்த நாளும் தனது எண்ணிக்கையை தொடர்ந்தது. இம்முறையும் தனது எண்ணிக்கையைத் தொடர்ந்தது. ஆனால், அந்தோ பரிதாபம். காலையில் சூரியன் வந்த உடனே வழக்கம்போல நட்சத்திரங்கள் பார்வையில் இருந்து மறைய, நிலாவும் தனது எண்ணிக்கையை மறந்துவிட்டது. இப்படியே தொடர்ச்சியாக நடக்க, ஒருநாள் நிலாவால் தன்னுடைய தோல்வியை தாங்க முடியாமல், அழத் தொடங்கிவிட்டது.
சூரியனின் உதவி
நிலா அழுவதைப் பார்த்த சூரியன் என்ன விஷயம் என்று கேட்டது. நிலாவும் தனது நிலைமையை விளக்க, உதவும் மனம் கொண்ட சூரியன், “அவ்வளவுதானா நான் உனக்கு உதவுகிறேன். வானத்தில் எத்தனை நட்சத்திரம் உள்ளன என்று எண்ணிச் சொல்கிறேன்” என்று உறுதி அளித்துவிட்டுக் கிளம்பியது.
சூரியன் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைக் கணக்கிட வெளியே வந்தது. ஆனால், வானம் பிரகாசமாக இருக்க, சூரியனின் கண்களுக்கு ஒரு நட்சத்திரம் கூடத் தென்படவில்லை. ஏமாற்றத்துடன் நிலாவிடம் திரும்பி வந்து சூழ்நிலையைச் சொல்லியது. ஆனால், நிலா சூரியனின் பேச்சைக் கேட்கவில்லை. “நீ உறுதி அளித்தபடி, வானத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரம் என்று எண்ணிச் சொல்லும்வரையில், நான் உன்னுடன் பேச மாட்டேன்” என்று சொல்லிவிட்டது.
சூரியனின் தேடல்
நண்பனுக்காக சூரியன் மறுபடியும் தேடத் தொடங்கியது. மேகங்களுக்கு இடையே, பாறைகள்/மலைகளுக்கு அடியே,
மரங்களுக்கு இடையே என்று பல இடங்களில் தேடியும் சூரியனால் ஒரு நட்சத்திரத்தையும் கண்டுபிடிக்கவே முடிய
வில்லை. இதற்குள் மாலை ஆகிவிட, சோகத்துடனும் சோர்வுடனும் சூரியன் திரும்பி வந்தது.
கண்டுபிடிச்சாச்சு!
அப்படி திரும்பி வரும்போது ஒரு கிராமத்தில் சிறுவர்கள் ஆடியும் பாடியும்மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டது. உடனே, “பூமியில் எத்தனைக் குழந்தைகளோ, வானத்தில் அத்தனைத் தாரகைகள்”என்று உணர்ந்தது. உடனடியாக மகிழ்ச்சியுடன் நிலாவிடம் ஓடி வந்தது.
”நிலா, நிலா, வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன்” என்றது. மகிழ்ச்சியடைந்த நிலா, “எவ்வளவு?” என்று கேட்க, சூரியன் பதிலைச் சொன்னது.
அன்றுமுதல், நிலா தனது கவலையை மறந்து மீண்டும் இரவினில் வெளியே வரத் தொடங்கியது. மேகங்கள் நடுவினில் இருக்கும் நட்சத்திரங்களை ரசிக்கத் தொடங்கியது. இரவு முழுக்க நட்சத்திரங்களை கண்டு மகிழும் நிலா, காலையில் பொழுது விடியும்போது
சிறுவர்கள் விளையாட வருவதைக் கண்டு மகிழ்ச்சியுடன் பாடும்:
“பூமியில் எத்தனைக் குழந்தைகளோ, வானத்தில் அத்தனைத் தாரகைகள்”.
- கட்டுரையாளர்: காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்கணக்கை மறந்த நிலா!
‘கணக்கை மறந்த நிலா’
கதாசிரியர்: சஞ்சீவ் ஜெய்ஸ்வால்
ஓவியர்: சைபல் சாட்டர்ஜி
தமிழாக்கம்: டி. மதன்ராஜ்
வெளியீடு :2012, நேரு குழந்தைகள் புத்தகாலயம்
பதிப்பாளர்: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
விலை: ரூ.40
கதாசிரியர் சஞ்சீவ் ஜெய்ஸ்வால்
59 வயதாகும் சஞ்சய், இந்தியாவின் மிகச்சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர். உத்தரப்பிரதேசம் தவுரஹ்ராவில் பிறந்து லக்னோவில் படித்து பட்டம் பெற்றவர். இந்திய ரயில்வேயின் ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான RSDO-வில் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
WRITE A COMMENT