தித்திக்கும் தமிழ் 3: படித்தவர்களுக்கும் பாமரர்களுக்குமான சொற்கள்!


தித்திக்கும் தமிழ் 3: படித்தவர்களுக்கும் பாமரர்களுக்குமான சொற்கள்!

கவிதா நல்லதம்பி

பக்கத்து வீட்டு நண்பர்களான ஸ்வேதா, சந்தோஷ், குஷி ஆகியோர் நற்பின்னைக்குப் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்திருந்தார்கள். அம்மா, ஸ்வேதா, சந்தோஷ், குஷின்னு அவங்க பேரு எவ்வளவு ஸ்டைலா இருக்கு. எனக்கும் அக்காவுக்கும் ஏன் இப்பிடிப் பேரு வச்சிருக்கீங்க என்று அம்மாவிடம் செல்லச் சண்டையிட்டாள் வெண்பா.

அம்மா: ஏன் உங்க பேருக்கென்ன, அழகான தமிழ்ப் பேரு வச்சிருக்கோம். தமிழ்னாலே அழகுதானே.

வெண்பா: ஏம்மா, இவங்க மட்டும் இங்லீஷ்லயா பேரு வச்சிருக்காங்க.

அம்மா: இல்ல வெண்பா, ஆனா இதெல்லாம் தமிழ்ப் பேரு இல்லையே. பிறமொழிப் பெயர்களாச்சே.

வெண்பா: நீங்க சொன்னதும் நினைவுக்கு வருது. அக்கா நேத்துப் பேசும்போது பிற மொழிச் சொற்கள்னு சொன்னா. அதில நிறைய வகை இருக்குன்னும் சொன்னா. அவகிட்டயே கேட்கிறேம்மா.

அம்மா: சரி வெண்பா. நீங்க பேசிக்கிட்டிருங்க. நானும் அப்பாவும் சாப்பாடு எடுத்துவைக்கிறோம் என்று அம்மா அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்.

வெண்பா: சொல் வகை என்னெல்லாம் அக்கா? பெயர்ச் சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்னு நான்கு வகைதானே.

நற்பின்னை: நீ சொல்றது ரொம்பச் சரி வெண்பா. ஆனா சொற்களை இலக்கிய வகைச் சொற்கள், இலக்கண வகைச் சொற்கள்னு இரண்டாப் பிரிக்கிறாங்க.

வெண்பா: இப்படி வேற இருக்கா?

நற்பின்னை: ஆமாம். நீ சொல்ற நான்கும் இலக்கண வகைக்குள்ள அடங்கும். நான் சொல்லப் போறது இலக்கிய வகைக்குள்ள வரும்.

வெண்பா: ஓ.. அந்த இலக்கிய வகைச் சொற்கள் பற்றிச் சொல்லுக்கா.

நற்பின்னை: இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல்னு நான்கா பிரிக்கலாம்.

வெண்பா: என்னக்கா, இது எனக்குப் புதுசா இருக்கே!

நற்பின்னை: ஆமாம்.. படிச்சவங்க, படிக்காதவங்கன்னு எல்லாருக்கும் பொருள் விளங்குகிற மாதிரியான எளிய சொற்களை இயற்சொற்கள்னு சொல்லுவாங்க. எடுத்துக்காட்டா, பூ, மரம், காற்று, மண், குழந்தை போன்ற சொற்களைச் சொல்லலாம். இந்த இயற்சொல்லையும் பெயரைக் குறிக்கும் சொற்கள், வினையைக் குறிக்கும் சொற்கள்னு பிரிச்சுப் பார்க்கலாம்.

வெண்பா: இதுலயும் ரெண்டு வகையா? அக்கா இது போதும். திரிசொல்னா என்னன்னு சொல்லு.

நற்பின்னை: படிச்சவங்களால மட்டுமே பொருள் உணர்ந்துகொள்ளக் கூடிய சொற்களைத் திரிசொற்கள்னு சொல்வாங்க.

வெண்பா: நமக்குப் புரியுமா அப்ப?

நற்பின்னை: இல்ல, இங்க படிச்சவங்கன்னு சொல்றதை இலக்கியத்தைப் படிச்சவங்கன்னு பொருள் எடுத்துக்கணும். சரி, நான் கேட்கிற சொற்களுக்குப் பொருள் தெரியுதான்னு பாரு.

தத்தை, செப்பு, ஆழி இந்த மூன்று சொற்களுக்கும் பொருள் சொல்லு பார்ப்போம்.

வெண்பா: தத்தை தத்தை தத்தைன்னு ஒரு பாட்டு இருக்கு. ஆனா பொருள் தெரியலையே. செப்புன்னா செப்புச் சாமான்தான, நாம சின்ன வயசுல விளையாண்டது. ஆழின்னா கடல் தானே.

நற்பின்னை: தத்தைன்னா கிளின்னு பொருள் வெண்பா. செப்புச் சாமான்னு சொல்லுவோம். ஆனா இலக்கியத்தில செப்புன்னா கூறு, சொல்லுன்னு பொருள் வரும்.

வெண்பா: சரி, ஒரு பொருளைக் குறிக்கிற பல சொற்கள்னு பார்த்தோமே, அதுகூட அப்ப இந்த வகைக்குள்ள வரும்தானே.

நற்பின்னை: சரியாச் சொன்ன. பல பொருள் குறித்த ஒரு சொல்லும் இந்தத் திரிசொல் வகைக்குள்ள அடங்கும்.

வெண்பா: அக்கா தலையே சுத்துது. இன்னும் ரெண்டு இருக்கா? திசைச் சொல்னா என்ன?

நற்பின்னை: இன்னைக்குப் போதும் வெண்பா. நண்பர்களுக்கும் நேரமாகுது. சாப்பிடுவோம். அடுத்து திசைச்சொல் பற்றிப் பேசுவோம்.

(மேலும் தித்திக்கும்)

கட்டுரையாளர், தமிழ்த் துறை பேராசிரியை.

FOLLOW US

WRITE A COMMENT

x