பிரியசகி
தனராஜ் குடும்பத்தினர் துணி எடுக்க கடைக்குச் சென்று திரும்புகையில் சுதாகர் எதையோ கண்டு பயந்தவனாய் அவசரமாக ஓடிச்சென்று காரில் ஏறினான். கீர்த்தி அவனைக் கிண்டல் செய்தவாறு பின்தொடா்ந்தாள்.
ராஜா: எதுக்குடா, இப்படி ஓடி வந்த?
கீர்த்தி: பின்னாடி ஒம்போதுங்க வராங்கப்பா. போனதடவை மாதிரியே கன்னத்தை தட்டி காசு கேக்கப் போறாங்கன்னு பயந்து ஓடுறான்.
தனராஜ்: கீர்த்தி அவங்களும் நம்மமாதிரி உயிரும், உணர்வும் உள்ள மனுஷங்கதான். அவங்களை ஒம்போது, அலின்னு கூப்பிடாம திருநங்கையர்னுதான் சொல்லனும்.
கீர்த்தி: சாரி தாத்தா, இனி அப்படி சொல்ல மாட்டேன்.
சுதாகர்: எனக்கு அவங்க இப்படி ஆம்பளைங்களத் தொட்டுப்பேசி காசு கேக்குறது பிடிக்கலை தாத்தா.
வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டியதுதானே?
தனராஜ்: அவங்க வேலைக்குப் போகத் தயாரா இருந்தாலும், யாரு வேலை குடுக்குறா? குடும்பத்தோட ஆதரவும், சமூகத்தோட அங்கீகாரமும் இல்லாததால சாப்பாட்டுக்கு வழி இல்லாமதான் இப்படி செய்றாங்க.
ராணி: என் ஸ்கூல்ல எட்டாவதுல லோகேஷ்னு ஒரு பையன் படிச்சான். ஏழாவது வரைக்கும் நல்லா இருந்தவன் எட்டாவதுல பொட்டு வைக்குறது, கண்ல மை போடுறது, இடுப்ப ஆட்டி நடக்குறது, கையத்தட்டி பேசுறதுனு வித்தியாசமா நடந்துக்கிட்டதால பசங்க ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. இவனால இவங்க அக்காவுக்கு கல்யாணம் தடைபட்டுதுன்னு வீட்டை விட்டுத் துரத்திட்டாங்கன்னும், இப்ப மும்பைக்குப் போய்ட்டான்னும் பசங்க சொல்றாங்க.
தனராஜ்: பாத்தியா, பிறவியிலேயே இருக்கும் பிரச்சினையைப் பெத்தவங்களே புரிஞ்சுக்காமத் துரத்திட்டா எட்டாவது வரைக்கும் படிச்சவன் வீட்டைவிட்டு வெளிய போய் என்ன பண்ணுவான்? இவனை மாதிரி இருக்கும் திருநங்கையர் கூட்டத்தோடுதானே சேருவான்?
கீர்த்தி: ஏழாவது வரை நல்லா இருந்தவன், எட்டாவதுலதான் இப்படி ஆய்ட்டான்னு சொன்னீங்க; இப்ப பிறவியிலேயே இருக்க பிரச்சினைன்னு சொல்றீங்க? எனக்கு ஒண்ணுமே புரியலை.
தனராஜ்: கீர்த்தி, ஒரு குழந்தை ஆணா, பெண்ணானு எப்படி பால் நிர்ணயம் செய்யப்படுதுன்னு அறிவியல்ல படிச்சிருப்பியே?
கீர்த்தி: ஆமா தாத்தா, ஆனா திருநங்கையர், ஏன் பிறக்குறாங்கன்னு அதுல சொல்லலையே!
தனராஜ்: மனித உடல்ல பல மில்லியன் செல்கள் இருக்கு. ஒவ்வொரு செல்லுக்குள் இருக்கும் குரோமோசோம்களுக்குள்ளேதான் மரபுப் பண்புகளுக்குக் காரணமான ஜீன்கள் இருக்கு. ஒவ்வொரு மனித செல்லிலும் இருக்கும் 23 ஜோடி குரோமோசோம்களில் 22 ஜோடி உடல் பண்புகளுக்குக் காரணமாகவும், கடைசி ஜோடி பால் நிர்ணயத்துக்குக் காரணமாகவும் இருக்கும்.
பொதுவா ஆண்களோட செல்களில் X, Y என்று இரண்டு வகை குரோமோசோம்களும் பெண்களின் செல்களில் X குரோமோசோம்களும் உண்டு.
கருவுறுதலின் போது X குரோமோசோம் உடைய ஆணின் விந்தணு, பெண்ணின் அண்டத்தோட இணைந்தால் பெண் குழந்தை பிறக்கும். Y குரோமோசோம் உடைய விந்தணு, அண்டத்தோட இணைந்தால் ஆண் குழந்தை பிறக்கும். 23 ஜோடி குரோமோசோம்களின் எண்ணிக்கை ஏதோ சிலகாரணங்களால் மாறினா, குழந்தை திருநங்கையாவோ அல்லது திருநம்பியாவோ பிறக்கும்.
இப்ப சொல்லுங்க இயற்கை செய்யும் தப்புக்கு இவங்களை நாம ஒதுக்குறதோ, கிண்டல் பண்ணி அவமானப்படுத்துறதோ, வீட்டை விட்டு துரத்துறதோ சரியா?
சுதாகர்: ரொம்ப தப்புன்னு இப்ப புரியுது; பாவம் இவங்க.
தனராஜ்: மாற்றுத் திறனாளிகளோ, மூன்றாம் பாலினத்தவர்களோ எதிர்பார்ப்பது பரிதாபத்தை இல்லைப்பா, நம்முடைய அங்கீகாரத்தைதான். இதைப்பத்தி இன்னும் நிறைய பேசுவோம்.
- (தொடர்ந்து பழகுவோம்)
கட்டுரையாளர், எழுத்தாளர், டான்போஸ்கோ உளவியல் நிறுவனம்
WRITE A COMMENT