ரெ.சிவா
நிற மற்றும் இனவெறி அடக்கு முறைகளால் அமெரிக்காவில் கலவரங்கள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. பாதுகாப்பு காரணமாக ஒவ்வொரு இனக்குழுவினரும் கூட்டமாகவே இருப்பார்கள். குழு மோதல்கள் அடிக்கடி நிகழும்.
1994-ல் லாங் பீச் பகுதியில் அமைந்துள்ள உட்ரோ வில்சன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலைக்குச் சேருகிறார் எரின் குரூவெல். மாணவ மாணவியருக்குக் கற்பிக்கும் பல்வேறு உத்திகளுடன் பாடக்குறிப்புகளைத் தயார் செய்துகொண்டு ஆர்வமுடன் முதல்நாள் பள்ளிக்குச் செல்கிறார்.
ஏன் இந்த பாகுபாடு?
துறைத் தலைவர் அவற்றைஎல்லாம் பார்க்கிறார். “உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். பள்ளியிலும் மாணவர்கள் குழுக்களாகவே இயங்குகின்றனர். அவர்களுக்குள் அடிக்கடி கடுமையான மோதல்கள்நிகழும். பலரும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குச் சென்று வந்தவர்கள். கவனமாக இருங்கள்” என்று அறிவுறுத்துகிறார்.
கறுப்பினத்தவர், லத்தீன் அமெரிக்கர், ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று சமூகத்தின் சிறிய மாதிரியாகவே வகுப்பறை இருக்கிறது. ஒரு குழுவினர் மற்றவர்களுடன் பேசுவதுகூட இல்லை. அருகே செல்வதும் இல்லை. தனியாக யாரேனும் வேறு குழுவிடம் சிக்கிக்கொண்டால் அடி, வன்முறை நிச்சயம். எரின் எவ்வளவு சொன்னாலும் மாணவர்கள் கேட்பதே இல்லை. இவர்களிடையே தனியாக ஒரு ஐரோப்பிய மாணவரும் இருக்கிறார்.
ஒருநாள் மாணவ மாணவியரின் இனப் பாகுபாடு, வன்முறைச் செயல்களால் கோபம் கொண்டு எரின் அவர்களிடம் பேசுகிறார்.
“நீங்கள் பெரிய வீரர்களாக உங்களை நினைத்துக் கொள்கிறீர்கள். உங்களைவிட பெரிய கேங் லீடரும் கேங்கும் இருந்தி
ருக்கிறது. லட்சக்கணக்கான வேற்றினத்தவரைக் கொடூரமாக அழித்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
அச்செய்தி மாணவ மாணவியரிடையே அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனாலும் அவ்வளவு பெரிய கொடுமை நிகழ வாய்ப்பில்லை என்கின்றனர்.
இறுக்கம் குறைய விளையாடு
உங்களில் யாருக்கு Holocaust பற்றித் தெரியும்? என்று எரின்கேட்கிறார். ஐரோப்பிய இனமாணவர் மட்டுமே கை தூக்கு
கிறார். கலந்துரையாடல் தொடங்குகிறது.
வகுப்பில் உள்ள ஒவ்வொருவரின் குடும்பத்தில், உறவுகளில், நட்பில் சிலர் சிறையில் இருக்கின்றனர். சிலரையாவது வன்முறையில் இழந்திருக்கிறனர். அவர்களே நேரடியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை எரின் அறிகிறார்.
குழுக்களுக்கு இடையே நிலவும் இறுக்கத்தை குறைத்து மாணவ மாணவியரிடையே நட்பை ஏற்படுத்தச் சில விளையாட்டுகளை உருவாக்குகிறார் எரின். இனவேறுபாட்டின் வரலாறு பற்றிய அருங்காட்சியகத்திற்கு மாணவ மாணவியரை அழைத்து செல்கிறார்.
நாட்குறிப்பு ஏற்படுத்தும் மாற்றம்
ஹிட்லரின் பேரழிவு குறித்த உரையாடல் வகுப்பறையில் தொடங்குகிறது. எப்படியெல்லாம் எளிய மக்கள் துன்பங்களை அனுபவித்தனர் என்பதைச் சிலர் எழுதி வைத்ததாலேயே அறிய முடிந்தது. அவற்றுள் முக்கியமானது ஆன் பிராங்க் என்ற சிறுமியின் நாட்குறிப்பு என்று சொல்கிறார் எரின்.
“நீங்களும் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை தினமும் நாட்குறிப்பாக எழுதுங்கள். உங்களுடைய நாட்குறிப்பை நான் மட்டும் வாசிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இங்கு வைத்துவிடலாம்” என்று சொல்லி ஆளுக்கொரு குறிப்பேட்டையும் வழங்குகிறார்.
அமெரிக்க கலவரங்களில் பாதிக்கப்பட்டவரின் குறிப்புகள், ஆன் பிராங்க் நாட்குறிப்பு ஆகிய புத்தகங்களையும் அனைவருக்கும் வாசிக்கக் கொடுக்கிறார்.
வகுப்பறையில் மாற்றங்கள் மலரத் தொடங்குகின்றன. வாசிப்பு வாசல்களைத் திறக்கிறது. குழு மனப்பான்மை என்ற இரும்
புத்திரை விலகி நட்பு மலர்கிறது. நாட்குறிப்புகள் மன அழுத்தத்தைப் பகிர்கின்றன.
அழிவில் இருந்து மீட்ட தேவதை
பேரழிவில் உயிர் பிழைத்தவர்களை பள்ளிக்குக்கு வரவழைத்து ஓரு கலந்துரையாடல் நிகழ்கிறது. ஆன் பிராங்க் குடும்பம் உட்பட சில யூதக் குடும்பங்களை ஜெர்மானியரிடம் இருந்து மறைத்து வைத்துச் சில காலம் ‘மிப் கீஸ்’ என்ற பெண்மணி காப்பாற்றி இருக்கிறார். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை மாணவர்கள் அறிகிறார்கள். அவரைத் தங்களது பள்ளிக்கு வரவழைத்து உரையாட வேண்டும் என்று விரும்புகிறார்கள். வழக்கமான வழிமுறைகளில் நிதி திரட்டி நெதர்லாந்து நாட்டில் வசித்து வந்த அந்த மூதாட்டியை அமெரிக்கா வரவழைக்கின்றனர். அந்த உரையாடல் மாணவர்களின் மனங்களை வன்முறைக்கு எதிராக யோசிக்க வைக்கிறது. மாற்றங்கள் மலர்கின்றன.
மாணவ மாணவியரின் நாட்குறிப்புகளைத் தொகுத்து ‘The Freedom Writers Diary’ என்ற நூலாக வெளியிடுகிறார் எரின். அந்த நூலில் இருந்தே ‘Freedom Writers’ என்ற ஆங்கிலத் திரைப்படம் 2007-ல் எடுக்கப்பட்டது. சில ஆண்டுகள் ஆசிரியப் பணிக்குப் பிறகு பள்ளியில் இருந்து விலகி முழுநேர ஆசிரிய பயிற்றுநராக பணிபுரிந்துவருகிறார் எரின் குரூவெல்.
- கட்டுரையாளர்,
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
WRITE A COMMENT