இரா.முரளி
"உங்களைப் பாலி நகருக்கு வரவேற்கிறோம்! உங்களிடம் பிளாஸ்டிக் பைகள்உள்ளனவா? வைத்திருந்தால் அவற்றை இங்கேயே விட்டுவிடவும்".
இந்தோனேசியாவில், பாலி நகரத்தின் விமான நிலையத்தில் நீங்கள் இறங்கியவுடன் கேட்கும் அறிவிப்பு இது. உங்களைப் போன்ற இரண்டு பள்ளி சிறுமிகள் ஏற்படுத்திய பரந்த விழிப்புணர்வின் விளைவே இந்தஅறிவிப்பு. அவர்கள்தான் இந்தோனேசியாவின் சகோதரிகளான மெலட்டி விஜ்சென் மற்றும் இசபெல் விஜ்சென். தங்களுடைய நாட்டுக்கு ஏதாவது பங்களிப்பு செய்தே தீர வேண்டும் என்ற உந்துதலை 12 மற்றும் 10 வயதிலேயே பெற்றவர்கள் இவர்கள். சிறுமிகளின் சக்திக்கு ஏற்ப செய்யக்கூடிய காரியம், சூழல் பாதுகாப்பிற்காக குரல் எழுப்புவதே என்று உணர்ந்தார்கள்.
பிளாஸ்டிக் பை ஒழிப்பு இயக்கம்
இந்தோனேஷியாவின் கடற்பரப்பில் 10 சதவீதம்வரை பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அந்நாட்டில் 1700-க்கும் அதிகமான
தீவுகளை கொண்ட நகரம் பாலி. உலகிலேயே அதிக பிளாஸ்டிக் கழிவுகளை கொண்ட இரண்டாவது நகரம் இதுவே. ஒவ்வொரு ஆண்டும், ஒரு காலகட்டத்தில் கடல் தான் உள் வாங்கிய பிளாஸ்டிக் குப்பைகளை கரையோரம் கொண்டு வந்து துப்பிவிட்டுச்செல்லும். எனவே மெலாட்டியும், இசபெல்லும் பாலி நகரத்தில் எங்கு பார்த்தாலும் காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதே தாங்கள் செய்யக்கூடிய சிறப்பான சேவை என்று முடிவெடுத்தார்கள்.
எதையும் தனியாக செய்வது பலனளிக்காது என்பதால், பிளாஸ்டிக் பைகளுக்கு விடைகொடுப்போம் என்ற முழக்கத்துடன் ‘பை-பைபிளஸ்டிக் பேக்ஸ்' என்ற அமைப்பைத்தொடங்கினார்கள். பல பள்ளிகளுக்கு சென்றுசக மாணவர்களிடம் உரையாடினார்கள். இதன்விளைவாக ஆயிரக்கணக்கான பள்ளிமாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்புக்குத்தங்கள் ஆதரவை
கொடுத்தார்கள். முதல் கட்டமாக பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க அரசு உத்திரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.
10 லட்சம் கையெழுத்துக்கள்
தங்கள் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க சரியான இடமாக பாலி விமான நிலையத்தைத் தேர்வு செய்தார்கள். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றார்கள். விமான நிலையத்திற்குள் சென்றார்கள். அங்கு, தங்களுடைய நாட்டிற்கு வரும் பயணிகளிடம், “எங்கள் நாட்டில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தாதீர்கள்” என்ற வேண்டுகோளை வைத்தார்கள்.அரசுக்கான தங்கள் விண்ணப்பங்களில் கையெழுத்தும் பெற்றார்கள்.
10 லட்சம் கையெழுத்துக்கள் பெற்று அதை பாலியின் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்கள். ஆனால், பலனளிக்கவில்லை. என்ன செய்வது என்றுதெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவர்கள் இந்தியாவிற்குப் பள்ளி மூலம் சுற்றுப் பயணம் வந்தார்கள்.
இந்திய மண் காட்டிய வழிஅவர்கள் மகாத்மா காந்தியின் இல்லத்திற்குச் சென்றார்கள். காந்தியின் வாழ்க்கைமுறையும், போராட்ட குணமும் அவர்களைமிகவும் ஈர்த்தன. அதன் விளைவாக ஊர்திரும்பியவுடன் உடனடியாக பிளாஸ்டிக்பைகளுக்குத் தடை செய்யக்கோரி, அவர்கள் பள்ளியிலேயே உண்ணாவிரதம் மேற்கொண்டார்கள்.
காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரையிலான உண்ணாவிரதம் அது. இவர்களுடைய போராட்டம் பற்றி அறிந்த ஊடகங்கள் இதைப் பற்றி பேசத் தொடங்கின. சிறைக்கு செல்ல நேரிடும் என்று நினைத்து கொண்டிருந்த சிறுமிகளை பாலி ஆளுநர் தன் மாளிகைக்கு வரவழைத்து பேசினார்.
அவர்கள் கொடுத்த விளக்கங்களை ஏற்று பாலிநகரில் பிளாஸ்டிக்பைகள் பயன்படுத்தத் தடை விதித்து உத்திரவிட்டார். இது இவர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. இவர்கள்ஐ.நா.சபையினால் சிறப்பு பேச்சாளர்களாக வரவழைக்கப்பட்டு அங்கும் உரையாற்றினார்கள்.
பள்ளி ஊட்டிய சிந்தனை
"ஒரே தீர்வு! ஒரே குரல்!" என்ற பெயரிலே உலகின் பல்லாயிரக் கணக்கான மக்களை இணைத்து பிளாஸ்டிக்பைகள் ஒழிப்பு இயக் கத்தை நடத்திவருகிறார்கள். பாலி நகரத்தில் உள்ள கிரீன் பள்ளியின் மாணவிகள் இவர்கள். இந்த பள்ளியில் நெல்சன்மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், இளவரசி டயானா, மகாத்மா காந்தி ஆகியோருடைய சிந்தனைகளை படித்ததுதான் சமூக மாற்றத்திற்கு செயல்படதங்களை உந்தித்தள்ளியது என்கிறார்கள் இந்த இளம் சகோதரிகள்.
"எதிர்காலம் எங்களுடையது! பூமியைப் பாதுகாப்பது எங்கள் பணி!"என்று சொல்லி இயங்கி வருகிறார்கள்.
உலகில் பல்வேறு விருதுகளை பெற்று வரும்தங்களை இந்தப் பாதையில் முழுமையாக போராடஈர்த்தவர் மகாத்மா காந்தி என்று
சொல்லும்போது நாமெல்லாம் என்னசெய்து கொண்டிருக்கிறோம் என்று மனம் புழுங்குகிறது.
- கட்டுரையாளர், பேராசிரியர், சமூகச் செயற்பாட்டாளர்.
WRITE A COMMENT