அருண் சரண்யா
l ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் தொடக்க விழாவின்போது எல்லா நாடுகளும் கலந்துகொள்ளும் ஊர்வலத்தில் (Parade of Nations) எந்த நாட்டு வீரர்கள் முதலில் வருவார்கள்?
ஒலிம்பிக்ஸின் தாயகமான கீரீஸ் நாட்டுவீரர்கள்தான் முதலில் வருவார்கள்.
l மற்ற நாடுகள் ஏதாவது குறிப்பிட்ட வரிசையில் இடம்பெறுமா?
அந்த நாடுகளின் ஆங்கில எழுத்துத்தொடக்க வரிசைப்படி இடம்பெறுவார்கள். எந்த நாட்டில் ஒலிம்பிக்ஸ் நடக்கிறதோ அந்த நாட்டு வீரர்கள் மட்டும் இறுதியாக வருவார்கள்.
l ஒலிம்பிக்ஸின் இறுதி நாளில் வலம் வரும்போதும் (CLOSING PARADE OF THE OLYIMPICS) இதே வரிசைதானா?
இல்லை. அப்போது நாடுகளாகப் பிரிந்து வருவதில்லை. உலக ஒற்றுமையையும் நடப்பையும் உணர்த்தும் வகையில் இப்படி செய்கிறார்கள். இந்தபழக்கம் 1956 மெல்போர்ன் ஒலிம்பிக் விளையாட்டில் இருந்து தொடங்கியது.
l இந்த அருமையான யோசனை யாருடைய மூளையில் உதித்தது?
ஜான் இயான் விங் என்ற 17 வயதுஇளைஞன் மூளையில்தான். ஆஸ்திரேயாவில் வசித்து வந்த சீனரான இவர் இப்படி ஒரு மாற்றத்தை கொடுக்கலாமே என்று கடிதம் எழுத, இதை ஏற்றுக்கொண்ட சர்வதேச ஒலிம்பிக் குழு (இன்னும் முடிவடைய சில நாட்களே இருந்த நிலையிலும்) அந்த ஒலிம்பிக்ஸிலேயே இதை அறிமுகப்படுத்தியது. பிறகு இதுவே மரபானது.
l ஒலிம்பிக்ஸ் என்ற பெயர் ஏன் வந்தது?
கீரீஸில் உள்ள ஒலிம்பியா என்ற இடத்தில் கி.மு.776-ல் விளையாட்டுப் பந்தயங்கள் நடைபெற்றதால்தான். சொல்லப்போனால் ஒலிம்பிக்ஸுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கி.மு. பத்தாம் நூற்றாண்டில் வழிபாட்டுக்காக மக்கள் கூடிய இடம்தான் ஒலிம்பியா. அங்கு ஜியஸ் என்ற கடவுளின் கோயிலும் இருந்தது. ஒலிம்பியாவில் உள்ள மைதானத்தில் நாற்பதாயிரம் பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து போட்டிகளைக் கண்டு ரசிக்கலாம்.
l பண்டைய ஒலிம்பிக்ஸில் வெற்றி பெற்றவர்களுக்கு என்ன பரிசுகள் வழங்கப்பட்டன?
பனைமரக் கிளை ஒன்று வெற்றி பெற்றவரின் கையில் அளிக்கப்பட்டது. தலையில் சிகப்பு ரிப்பன் கட்டப்பட்டது. பார்வையாளர்கள் அவரை நோக்கி பூக்களை எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். பந்தயத்தின் இறுதி நாளில் இந்த 'விருது' வழங்கும் விழா ஜியஸ்கோவிலில் உயர்ந்த மேடையில் நடைபெறும்.
l நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்று ஒலிம்பிக்ஸ் நடத்தப்படுவது ஏன்?
கீரீஸில் (கி.மு. 700-ல்) காலத்தை ஒலிம்பியாட் எனும் கணக்கில்தான் அளந்தார்கள். இது நான்கு வருட இடைவெளியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வப்போது அண்டை நாடுகளுடன் மற்றும் உள் நாட்டிலும் போர்கள் நடந்து கொண்டிருந்த்தால் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை என்பது வசதியாகவும் இருந்தது.
WRITE A COMMENT