தித்திக்கும் தமிழ் 2: ஒரு பொருள் பன்மொழி


தித்திக்கும் தமிழ் 2: ஒரு பொருள் பன்மொழி

கவிதா நல்லதம்பி

‘‘வெண்பா, அம்மா எங்க போயிருக்காங்க?” கேள்வியுடன் நுழைந்தாள் நற்பின்னை.

வெண்பா: பாட்டியைக் கூட்டிக்கிட்டு முண்டக்கண்ணி அம்மன் கோயிலுக்குப் போயிருக்காங்கக்கா. அந்தச் சாமிக்குக் கண்ணு பெரிசா, உருண்டையா இருக்குமா என்ன?

நற்பின்னை: ஏன் அப்படிக் கேட்கிற?

வெண்பா: நீ கோவத்துல முழிக்கும்போது உன்ன முண்டக்கண்ணின்னு தானே நான் கிண்டல் பண்ணுவேன்.

நற்பின்னை: அது முண்டக்கண்ணி அம்மன் இல்ல, முண்டகம் கண்ணி அம்மன். நாம பேச்சு வழக்குல முண்டக்கண்ணின்னு சொல்றோம்.

வெண்பா: ஏதாவது ஒரு காரணத்துக்காகத் தானே அந்தப் பேர் வச்சிருப்பாங்க.

நற்பின்னை: ஆமாம். முண்டகம்னா என்ன தெரியுமா?

வெண்பா: முண்டம்னு திட்டறதுதான் தெரியும். முண்டகம்னா தெரியலையே...

நற்பின்னை: முண்டகம்னா தாமரைப் பூ. தாமரை இதழ் போல நீண்ட அகன்ற அழகிய கண்களைக் கொண்டவள் என்கிற
அர்த்தத்துலதான் முண்டகம் கண்ணின்னு பேரு வச்சிருக்காங்க.

வெண்பா: ஓ.. தாமரையைச் சொல்ல இப்படி ஒரு பேர்கூட இருக்கா?

நற்பின்னை: நான் முன்னாடி சொன்னேன்ல 'ஒரு பொருள் பன்மொழி'ன்னு அது இதுதான் வெண்பா. ஒரு பொருளைத் தரக்கூடிய பல சொற்களைக் குறிக்கத்தான் இந்தத் தொடர் பயன்படுது.

ஒரு பொருளைக் குறிக்கிறதுக்குப் பல சொற்கள் இருக்கு. ஆனா நாமதான் இப்ப நிறையச் சொற்கள மறந்தே போயிட்டோம்.

வெண்பா: சரிக்கா.. தாமரைக்கு வேற என்ன

சொற்கள் இருக்குன்னு சொல்லேன்.

நற்பின்னை: ம்.. கமலம், முளரி, கஞ்சம், புண்டரிகம், அரவிந்தம், பதுமம் இப்படிப் பல சொற்கள்..

வெண்பா: ஆனா, இதையெல்லாம் நாம பயன்படுத்தறதே இல்லையே.

நற்பின்னை: தமிழ் மொழியில இந்த மாதிரி ஒரு சொல்லுக்குப் பல பொருள் தரும் சொற்களும் பல பொருள் தரும் ஒரு சொல்லும் நிறைய இருக்கு. நமக்குத் தெரிஞ்ச சொற்களுக்கே வேற வேற சொற்கள் இருக்கு

வெண்பா.. நீ சொல்றியான்னு பார்க்கலாமா? ‘சூரியன்’

வெண்பா: கதிரவன்தான் எனக்குத் தெரியும்.. வேற சொற்கள் ஏதும் தெரியாதே!

நற்பின்னை: ஞாயிறு, பகலவன், வெய்யோன், பரிதி, உதியன், எல்லோன்னு இன்னும் நிறைய சொற்கள் இருக்கு..

வெண்பா: ஓ.. இவ்வளவு இருக்கா.. வேற ஒரு சொல் சொல்லேன். தெரியுதான்னு பார்க்கிறேன்.

நற்பின்னை: ‘உலகம்’.

வெண்பா: பூமிதான, வேற இருக்கா என்ன?

நற்பின்னை: பார், வையகம், புவி, ஞாலம், குவலயம், காசினி, தரணி இப்படிப் பல சொற்கள் இருக்கு.

வெண்பா: அக்கா, ரொம்பவே ஆர்வமா இருக்கு இதையெல்லாம் கேட்கறதும், தெரிஞ்சிக்கறதும். நானும் என் தோழிகளோட வார்த்தை விளையாட்டு விளையாடப் போறேன். சரி. இன்னும் சில சொற்களைக் கேளு. எனக்குத் தெரியுதான்னு பார்க்கலாம்..

நற்பின்னை: ‘உடல்’

வெண்பா: உடம்புன்னு சொல்வோம். வேறு சொற்கள் இருந்தா சொல்லுக்கா.

நற்பின்னை: ஊன், மெய், யாக்கை, குடம்பி, கூடு, மேனி…

வெண்பா: போதும்.. போதும்.. நிறைய சொல்லாத மறந்திரும். பாரதியார் பாட்டுல கூட வருமே ‘மேனி சிலிர்க்குதடி’ன்னு..

நற்பின்னை: அருமை வெண்பா.. நீ அழகா சொற்களைத் தொடர்புபடுத்திக் காட்டுற.. இன்னும் கேட்கட்டுமா?

வெண்பா: ம்..கேளுக்கா.

நற்பின்னை: உனக்கு ரொம்பத் தெரிஞ்சதையே கேட்கிறேன். ‘கடல்’.

வெண்பா: கடலா.. சமுத்திரம்னு நினைவிருக்கு. ஒரு வரலாற்றுப் புத்தகத்துல இந்தியப் பெருங்கடல, இந்து மகா சமுத்திரம்னு போட்டிருந்தாங்க.

நற்பின்னை: சமுத்திரம்னா பெருங்கடல் தான். ஆனா அது தமிழ்ச் சொல் இல்ல.

வெண்பா: தமிழ்ச் சொல் இல்லையா?

நற்பின்னை: ஆமாம் வெண்பா. ஆழி, அளக்கர், பரவை, வாரி, முந்நீர், உவரி, தொன்னீர், பாழின்னு பல சொற்கள் இருக்கு நம்ம மொழியிலயே கடலைக் குறிக்க.. ஆனா,தமிழ்ச் சொல் போலவே நிறைய பிற மொழிச் சொற்களை நம்ம மொழியில பயன்படுத்திக்கிட்ருக்கோம்..

வெண்பா: ஓ… இப்படியெல்லாம் கூடப் பிரிச்சுப் பார்க்கணுமா?

நற்பின்னை: நாம தெரிஞ்சுக்கணும் இல்லையா? எது தமிழ்ச் சொல்? தமிழ் போலவேநாம பேசிக்கிட்ருக்கிற பிறமொழிச் சொற்கள் எதெல்லாம்னு.. அடுத்ததா நாம பேசப் போறது பிற மொழிச் சொற்கள் பத்தித்தான் வெண்பா..

(மேலும் தித்திக்கும்)

கட்டுரையாளர்,

தமிழ்த் துறை பேராசிரியை.

FOLLOW US

WRITE A COMMENT

x