தானாக கதவைத் திறக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம்
பாலாஜி
புத்தகம் படித்து நீச்சலடிக்க முடியாது. மற்றொருவர் கார் ஓட்டுவதைப் பார்த்து நான் கார் ஓட்ட முடியாது. அதுபோலத்தான் எலக்ட்ரானிக் தொழில்நுட்பமும். எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் அறிவு அல்ல, திறன். அதற்கு நிறைய பயிற்சி தேவை. எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது எப்படி? அதற்கு மாணவர்கள் பள்ளி நாட்களில் என்ன செய்ய வேண்டும்? இவற்றைப் பற்றி எளிமையாகத் தெரிந்துகொள்வோம்.
இன்று எல்லோரையும் அதிசயப்பட வைக்கின்ற ஒரு செய்தி ஒருவரைப் பார்த்தவுடன் அவர் யார் என்று புரிந்து கொண்டு தானாகத் திறக்கும் கதவுகள். இது எவ்வாறு சாத்தியமாகிறது என்று பார்க்கலாம் மாணவரே!
இதில் மூன்று முக்கிய தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளன.
1. கதவைத் திறக்கும் தொழில்நுட்பம்
2. எப்போது கதவைத் திறக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் தொழில்நுட்பம்.
3. ஒருவர் வந்துவிட்டதைக் கண்டறியும் தொழில்நுட்பம்.
காந்தமும் கதவும்
கதவைத் திறக்கும் தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது. நமக்கு நன்றாகத் தெரிந்த மின் காந்தம்தான் அது. கதவில் ஒரு இரும்புத் தகட்டையும், கதவிற்கு வெளியே ஒரு மின்காந்தத்தையும் வைத்தால் போதும். மின்காந்தத்தில் மின்சாரம் செலுத்தப்பட்டால் அது காந்தத் தன்மை பெற்று இரும்பு தகட்டை இழுக்கும். அதன் காரணமாகக் கதவு திறக்கப்படாது. மின்சாரம் நிறுத்தப்பட்டால் மின்காந்தம் தனது காந்த தன்மையை இழக்கும் அதன் காரணமாக இரும்பு தகட்டை இழுக்காது. இப்போது கதவைத் திறப்பது எளிது. இதை வெளியீடு (Output) என்று குறிப்பிடுவார்கள்.
நான் வந்துவிட்டேன்!
அடுத்ததாக ஒருவர் வந்துவிட்டதைக் கண்டறியும் தொழில்நுட்பம். இதில் பலவிதமான முறைகள் உள்ளன. முதலில் எளிதான ஒரு முறையைப் பார்ப்போம். அதாவது ஒளியை மறைத்தல். இந்த முறையில் ஒளியை வெளியிடும் ஒரு மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருளையும் ஒளியை பெறும் ஒரு மின்னணு பொருளையும் இணைக்க வேண்டும்.
முதல் படத்தில் ஒளியை வெளியிடும் பொருள் ஒளியை பெறும் பொருளை அடைகிறது. இதன் காரணமாக ஒளியைப் பெறும் மின்னணு பொருள் 5V- ஐ வெளியீடாகத் தருகிறது. இடையில் ஒருவர் வந்து விட்டால் ஒளியைப் பெறும் மின்னணு பொருளுக்கு வருகின்ற ஒளி தடைபடுகிறது அதன் காரணமாக அது “0V” -ஐ வெளியிடுகிறது. சில நேரங்களில் நாம் ஒளியைத் தரும் பொருளை உபயோகிப்பது இல்லை. அதற்கு பதில் நம் உடல் வெளியிடும் அகச்சிவப்பு கதிர்களைக் கண்டறியும் PIR (Passive Infra Red) என்ற அகச்சிவப்பு கதிர்களைப் பெறும் மின்னணு பொருட்களை உபயோகித்து ஒருவர் வந்திருப்பதைக் கண்டறியலாம்.
அடுத்ததாக ஒருவருடைய விரல் ரேகையைப் பதியவைத்து அதன் மூலம் சரியான நபரைக் கண்டறியலாம். அடுத்ததாக ஒருவர் குரலை வைத்து யார் என்று கண்டறியலாம். ஒருவர் முகத்தைப் பார்த்து யார் என்று கண்டறியலாம்.
இன்னும் பல வழிகளில் ஒருவருடைய அடையாளத்தைக் கண்டறியலாம். இதை உள்ளீடு (Input) என்று அழைப்பர். இப்போது நமக்கு எவ்வாறு கதவைத் திறப்பது என்றும், எவ்வாறு ஒருவரைக் கண்டறிவது என்றும் தெரியும். இரண்டும் தனித்தனியானவை. இந்த இரண்டையும் எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்
செயல்படும் பகுதி (Processing Unit), ஒருவரைக் கண்டறியும் பகுதியிடமிருந்து உள்ளீட்டினைப் பெற்று ஆராய்ந்து கதவைக் கட்டுப்படுத்தும் பகுதிக்குக் கட்டளையிடுகிறது. உள்ளீட்டுப் பகுதி, செயல்படும் பகுதி, வெளியீடு பகுதி ஆகியவை கம்பிகளால் (Wire) இணைக்கப்படுகின்றன.
இதை எவ்வாறு செயல்படுத்துவது, என்னென்ன பொருள்கள் வேண்டும் எவ்வாறு பெறுவது என்பது பற்றித் தொடர்ந்து பேசுவோம்.
கட்டுரையாளர் மின்னணு பொறியியல் நிபுணர், பயிற்றுநர்.
WRITE A COMMENT