உடலினை உறுதி செய் 3: யோகாசனம் செய்ய தயாரா?


உடலினை உறுதி செய் 3: யோகாசனம் செய்ய தயாரா?

ஆர். ரம்யா முரளி

நம்முடைய ஆரோக்கியத்திற்காக நாம் செலவிடும் சொற்ப நேரம்கூட நமக்கான மூலதனம் என்று பார்த்தோம். சரி, இப்போது நாம் யோகக் கலையைக் கற்றுக்கொள்ள முடிவு செய்து விட்டோம். அப்படியே ஆரம்பிக்க முடியுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். எந்த ஒரு வேலையை ஆரம்பிக்கும்போதும் அதற்கென ஒரு வழிமுறையை பின்பற்றினால்தான் அதற்கான பலன் முழுமையாகக் கிடைக்கும். யோகக் கலையும் அது போலதான்.

எப்போது செய்யலாம்?

இத்தனை நாட்களாக பள்ளி இருந்தால் ஒரு நேரம், விடுமுறை நாட்களில் ஒரு நேரம் என்று தூங்கி, எழுந்துபழகி இருப்போம். இப்படி பழக்கப்பட்ட நம்முடைய மனதுக்கு ஒரு அன்பு கட்டளை இட வேண்டும். யோகாசனமோ, மூச்சு பயிற்சியோ அவற்றை செய்வதற்கு அதிகாலை நேரமே சிறந்தது. தினந்தோறும் காலை 4 மணி முதல் 6 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான கால
கட்டமே யோகாசனம் செய்யச் சிறந்த நேரமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நேரத்தில்தான், முன்னிரவு நாம் சாப்பிட்ட எந்த உணவும் நமது வயிற்றில் தேங்கி இருக்காது. அதிலும் குறிப்பாக காலை நேரம் மிகச் சரியானது. இரவு நன்றாகத் தூங்கி எழுந்த பின், நம்முடைய மனம் அடுத்த நாளுக்கான ஓட்டத்திற்கு தயாராகி இருக்கும்.

பலன்கள் பல

மிகுந்த அமைதியாகக் காணப்படும் அந்த நேரத்தில் செய்யப்படும் எந்த வேலையாக இருந்தாலும் அது நமக்கு இரட்டிப்பு பலன்களை கொடுக்க வல்லது. மாணவர்களுக்கும் அதிகாலை நேரம் மிகச் சிறந்தது என்கிறார்கள் வல்லுநர்கள். மேலும் ஓசோன் வாயு மண்டலம் பரவிய நிலையில், பேரமைதியான சூழலில் மேற்கொள்ளப்படும் யோக பயிற்சி, நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்பட உதவும்.

காற்றோட்டமான இடம்

சரி, ஒரு வழியாக கஷ்ஷ்ஷ்....ட்டப்பட்டு காலை எழுந்தாகிவிட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும்? காலை எழுந்தவுடன் எப்போதும் போல் பல் துலக்கி, காலை கடன் முடித்தப் பிறகு நம்முடைய உடல் யோகப் பயிற்சி செய்வதற்கு லகுவாகி விடும். நல்ல காற்றோட்ட
மான இடத்தில் அமர்ந்து யோகப் பயிற்சியை ஆரம்பிக்கலாம். காற்றோட்டமான இடம் என்றவுடன் மின்விசிறி அல்லது ஏசி என்றுதானே நினைத்தீர்கள்! காற்றோட்டமான இடம் என்றால், நல்ல வெளிச்சமான ஜன்னலோரம் அல்லது வீட்டின் பால்
கனியோ, மொட்டைமாடியாகவோ கூடஇருக்கலாம். அதேபோல கை, கால்களை வசதியாக திருப்பி, பயிற்சி செய்ய முடியுமோ அந்த இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம்.

உடலை உறுத்தாத ஆடை

அடுத்து, உடலை ஒட்டியவாறு இறுக்கமான ஆடையாகஅணியாமல், கொஞ்சம் தளர்வான ஆடையை அணிந்துகொள்ளலாம். மேலும் யோகப் பயிற்சியின்போது உங்கள் உடலை உறுத்தும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அது பெல்ட், கை கடிகாரம் என்று எதுவாக இருந்தாலும் தவிர்க்கலாம். முக்கியமாக ஆசனங்கள் செய்யும்போது வெறும் தரையில் நின்று செய்யாமல், ஒரு விரிப்போ, பாயோ போட்டுச் செய்யும்போது நம்மில் இருந்து வெளிப்படும் நேர்மறை அலைகளை நம்முள் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

யோகப் பயிற்சியின் முதல் கட்டமாக நம்முடைய மூச்சை ஒழுங்குபடுத்த வேண்டும். நம் உடலில் உள்ள எல்லா உறுப்புக்களும் சீராக இயங்க மூச்சுக் காற்று மிக முக்கியம். அதனால் மூச்சை நிலைநிறுத்தி அதை ஒரு ஒழுங்கிற்குக் கொண்டு வருவதுதான் முதல் படி.

(யோகம் தொடரும்)

கட்டுரையாளர்: யோகா நிபுணர்.

எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்

FOLLOW US

WRITE A COMMENT

x