உயர்கல்விக்கு திறவுகோல் 3: சட்ட வல்லுநர் ஆகலாம்!


உயர்கல்விக்கு திறவுகோல் 3: சட்ட வல்லுநர் ஆகலாம்!

எஸ்.எஸ்.லெனின்

பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ.,ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ஒருங்கிணைந்த எல்.எல்.பி. (ஹானர்ஸ்) என்ற 5 வருட ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை படிக்கலாம். இதற்கு CLAT- Common Law Admission Test என்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

எங்கே படிக்கலாம்?

21 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கைக்காக கிளாட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண்களை நாட்டின் முன்னணி 52 தனியார் பல்கலைக்கழகங்களும் தங்களது மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொள்கின்றன. இதுதவிர கிளாட் நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு, சட்ட படிப்புகளுக்கான வேறுபல நுழைவுத் தேர்வுகளுக்கும் தயாராக உதவும். எங்கே வேலை?வழக்கமான வழக்கறிஞர் பணிக்கு நிகராக பல்வேறு நிறுவனங்களுக்கும் அவசியமான சட்ட ஆலோசகர் பணிக்கு சட்டம் பயின்றவர்கள் அதிக அளவில் தேவைப்படுகிறார்கள். இதுதவிர, அரசு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள் என பரந்தபணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

பிளஸ் 2-வில் தேர்ச்சியுடன், 45% மதிப்பெண்களும் பெற்றவர்கள் (எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 40%) இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம் பயில வயதில் உச்ச வரம்பு கிடையாது.

நுழைவுத் தேர்வு எப்படி?

கிளாட் நுழைவுத் தேர்வு ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். தமிழகத்தின் சென்னை மற்றும் திருச்சி உட்பட நாடெங்கும் உள்ள 40 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. ஆண்டுதோறும் மே நான்காவது வாரத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் விண்ணப்பித்தல் தொடங்கும். விண்ணப்ப அவகாசம் அதிலிருந்து சுமார் 3 மாதத்துக்கு வழங்கப்படுகிறது.

200 மல்டிபிள் சாய்ஸ் வினாக்களுடன் 2 மணி நேரத்துக்கு தேர்வு நடைபெறும். சரியான விடைக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படுகிறது. தவறான விடைக்கு கால் மதிப்பெண் கழிக்கப்படும்.

ஆங்கிலம், பொது அறிவு, நடப்பு நிலவரம், அடிப்படை கணிதம், அடிப்படை சட்ட அறிவுஆகியவற்றை சோதிக்கும் வினாக்கள் நுழைவுத் தேர்வில் கேட்கப்படுகின்றன. கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்யலாம். ஜுன் இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். துல்லியமான நாள் விபரங்களுக்கு முறையான அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கவும்.

கூடுதல் தகவல்களுக்கு- clatconsortiumofnlu.ac.in

FOLLOW US

WRITE A COMMENT

x