Published : 23 Oct 2019 08:38 AM
Last Updated : 23 Oct 2019 08:38 AM

ஆசிரியருக்கு அன்புடன்! 3: சுதந்திரம் – உரிமம் அல்ல!

ரெ.சிவா

அது குழந்தைகள் பாடி, ஆடி, விளையாடிய கழிக்கும் இடம்என்பதைப் பாதையில் வைத்திருக்கும், “Beware! Children Playing!”என்ற எச்சரிக்கை பலகை அறிவுறுத்துகிறது.

எங்கெங்கு காணினும் குழந்தைகள் குதூகலாமாய் இருக்கும் சூழலில்அமைந்துள்ள அந்தக் கட்டிடத்தின் பெயர் சம்மர் ஹில் பள்ளி.

வேறொரு பள்ளியில் தேர்வில் தவறிய மேடியை அவளது பெற்றோர் சம்மர் ஹில்லுக்கு அழைத்து வருகின்றனர். முன் படித்த பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட ரயானையும் அவனது அப்பா அங்கு சேர்க்கிறார்.

விரும்பிய பாடத்தைப் படிக்கலாம்!

கொண்டாட்டமான பள்ளிச் சூழலுக்குள் அதிகாரிகள் படைநுழைகிறது. சம்மர் ஹில் பள்ளியின்நடைமுறைகளில் குறை கண்டுபிடித்து அதை மூடிவிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர்கள் சோதனை செய்கிறார்கள்.

ஒவ்வொரு வகுப்பிலும் படிக்கும் மாணவர்களின் பட்டியலை அதிகாரிகள் கேட்கின்றனர். “அப்படியானவகுப்பறை இங்கு இல்லை. கட்டாயப்பாடம் என்று எதுவும் இல்லை.

விரும்பிய பாடத்தைப் படிப்பார்கள்” என்கிறார் தலைமையாசிரியை.

இதை கேட்டு அதிர்ச்சி அடையும் அதிகாரிகள், பாடத்திற்கான நேரத்தில் வகுப்பறைக்குள் செல்கின்றனர். பல வயதுடைய மாணவ மாணவியர் இருக்கின்றனர். ஆசிரியர் பேசத்தொடங்குகிறார். “புதிய மாணவர்களை வரவேற்கிறேன். நமது பள்ளியின் முக்கிய செயல்பாடு விளையாட்டு. அதில் முழுமையாக ஈடுபடுங்கள். வகுப்பறைக்கு நீங்கள் படிக்க விரும்பியபோது வரலாம். இந்தப் பட்டியலில்இருந்து விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம்” என்கிறார்.

அதை எப்படிச் சொல்வது?

ரயானுக்கு எந்தப் பாடமும் பிடிக்கவில்லை. நீ வெளியே போய் எது வேண்டுமானாலும் விளையாடு என்றுஆசிரியர் அவனை அனுப்புகிறார். அதிகாரிகள் அதிர்ச்சியாகிறார்கள்.

“இந்த சிறுவன் எப்போது படிக்க வருவான்?” என்று கேட்கிறார்கள்.

“அதை எப்படிச் சொல்ல முடியும்?சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகள்கூட ஆகலாம். பள்ளி இறுதித் தேர்வுவரும்போது படிக்கத் தோணலாம்” என்று ஆசிரியர் கூறுகிறார்.

அன்று இரவு ரயான், மேடியின் அறைக்குள் நுழைந்து அவளது பெட்டியில் வைத்திருந்த இருபதுபவுண்ட் பணத்தை திருடிவிடுகிறான்.

தீர்ப்பு என்ன?

காலையில் பள்ளிக் குழு கூடுகிறது.

பள்ளியில் ஏதேனும் பிரச்சினைகள் என்றால் மாணவர்களால் பள்ளிக் குழு கூட்டப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவப் பிரதிநிதிகள் அதை நடத்துவார்கள். ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களது கருத்துக்களைச் சொன்னபின் ரயான் பணம் எடுத்ததைஉறுதி செய்கிறார்கள். அவனுக்கு என்ன தண்டனை தரலாம்? என்று கலந்துரையாடல் நடக்கிறது. அதில் கூறப்பட்ட தண்டனைகள் குறித்து வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. அதன்படி இனிமேல் தவறு செய்யக்கூடாது என்று எச்சரிக்கையும் வாரம்இரண்டு பவுண்ட் என பத்து வாரங்களில் பணத்தைத் திருப்பித் தரவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

பாடத்திட்டத்தை முறைப்படி பின்பற்றாததால் பள்ளியை மூடவேண்டும்என ஆய்வுக்குழு பரிந்துரைக்கிறது. அரசின் திட்டமும் அதுதான். இதுகுறித்து மாணவர் மன்றம் விவாதிக்கிறது. நீதிமன்றத்துக்கு வழக்குவருகிறது. சில நிபந்தனைகளுடன்பள்ளியை நடத்தலாம் என கல்வித்துறை ஓர் ஒப்பந்தத்தை முன் மொழிகிறது. அதன்படி சம்மர் ஹில் பள்ளியில் வகுப்பறைப் பாடங்களுக்கு அரசின் அட்டவணைப்படி நேரம் ஒதுக்க வேண்டும்.

பார்வையாளர் ஆகும் நீதிபதிகள்

ஒப்பந்தம் குறித்து மாணவர் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்என குழந்தைகள் வேண்டுகிறார்கள்.

நீதிபதிகள் தங்கள் இருக்கையைமாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுத்துவிட்டு பார்வையாளர்களாகிறார்கள்.

பள்ளியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு ஒப்பந்தம் ஏற்கப்படுகிறது. குழந்தைகளின் இந்தச்செயல்பாட்டைக் கண்டு மகிழ்ந்தநீதிபதிகள் பள்ளிக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்கின்றனர்.

உண்மை கதை

சம்மர் ஹில் பள்ளியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது. 1921-ல்இங்கிலாந்தில் A.S.Neil என்ற ஆசிரியரால் தொடக்கப்பட்டது சம்மர் ஹில் பள்ளி. குழந்தைகளை மதிக்கும் சுதந்திரமான கல்வி முறை கொண்ட பள்ளி.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் இன்னும் இரண்டு ஆண்டுகளில்நூற்றாண்டைக் கொண்டாடப்போகிறது.

தேர்வு மூலமே தரத்தை அறியமுடியும் என்பவை போலப் பல்வேறுஇறுகிய வழக்கங்களால் குழந்தைமையை சிதைக்காமல் குழந்தைகளைமதித்து சுதந்திரமான சூழலை அளித்தால் சிறந்த மனிதர்களாக ஆக்க முடியும் என்பதற்கு சம்மர்ஹில் பள்ளி முன்னுதாரணம்.

நெய்ல் சொன்னது போலச் சுதந்திரம் – குழந்தைகள் உரிமை. கடும் விதிகளைப் பின்பற்றி வாங்கும் உரிமம் அல்ல.

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x