கிங் விஸ்வா
சியாங் சி என்ற சீன நாட்டுத் தாத்தா தினமும் குழந்தைகளுக்கு கதை சொல்லி வந்தார்.ஆனால், ஒருநாள் கடுமையாக புயல் வீசியதில், அவரது கதைகள் எல்லாமும் காற்றில் பறந்து போய்விட்டன.
குழந்தைகள் வந்த பிறகு, தன்னிடம் கதைகள் எதுவும் இல்லை என்று சியாங் சி சொல்கிறார். அப்போது ஒரு பொம்மை வியாபாரி அங்கே வர, அவனிடமிருந்து கண், காது, மூக்கு மற்றும் பல முகமூடிகளைப் பார்க்கிறார். உடனே அவர் ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
வெங்கி என்ற சிறுவனின் உடலில் இருந்து கண், காது, மூக்கு மற்றும் வாய் ஆகிய நான்கு உறுப்புகளுமே தனித்தனியே கழன்று விடுகின்றன.
அந்த நான்குக்கும் இடையே அவர்களில் யார் பெரியவர் என்ற அகங்காரப் போட்டி ஏற்பட்டதே இதற்குக் காரணம். இந்த நான்கும் தனித்தனியே சென்று அவர்களுக்கு என்று ஒரு தனி தேசத்தை உருவாக்கி, அங்கே சென்று ஆட்சிஅமைக்கிறார்கள்.
கண்கள் தனியாக வந்து, பார்வைக்கான தேசத்தை உருவாக்க, கண்களின் ராணி அங்கே ஆட்சிசெய்கிறார்.வானவில்லின் வண்ணங்களை ரசிக்க முடிந்த அவரால், வகை வகையான இனிப்புகள் கண்முன்னே இருந்தும் அவற்றை ருசி பார்க்க முடியவில்லை. இதனால், பணிப்பெண்கள் சிரிக்கிறார்கள்.
இதைப்போலவே, வாய் மகாராஜாவை அவரது சேவகர்கள் அழுகிய சுரைக்காயை ஐஸ்கிரீம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். மூக்கு ராணியிடம் மிளகாயை உடைத்துத் தந்து, அவரை ஓட விடுகிறார்கள். காது ராஜாவின் அரசவையில் சிலர் பலூன்களை உடைத்து குழப்பம் ஏற்படுத்த, அவரும் அலறி அடித்து ஓடிவிடுகிறார்.
அதே நேரம் வெங்கியின் உடலில் இந்தநான்கும் இல்லையென்பதைத் தெரிந்து கொண்ட கிருமிகள், இந்த நான்கும் தனித்தனியே இருக்கும்போது பலவீனமடைந்து இருப்பதை உணர்கிறார்கள். எனவே, வேட்டையாட இதுதான் சரியான தருணம் என்று உணர்ந்து, நான்கையும் தாக்க வருகிறார்கள்.
தனித்தனியே இருந்தால், என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதை இப்போது தெரிந்து கொண்ட அந்த நான்கு உறுப்புகளும் வெங்கியிடம் வந்து மன்னிப்பு கேட்கின்றன. பின்னர், வெங்கியின் உடலில் ஒன்றாக இணைந்து, மீண்டும் பலம் பொருந்தியவை ஆக மாறிவிடுகின்றன. இப்படியாக கதை ஒருவழியாக முடிவடைகிறது. நாடக வடிவில் எழுதப்பட்ட இந்தக் கதை, புத்தகத்திலும் நாடகமாகவே இருக்கிறது.
அகங்காரம். இதுதான் இந்தக்கதை சொல்லவரும் சேதி. அகங்காரம் உருவானால், கிருமிகள் நம்மை எளிதாக தாக்கிவிடும். கதையில்வந்த ராஜா, ராணிகளைப் போல, குழந்தைகள் முதல் பணியாளர்கள் வரை, அந்த அகங்காரத்தைப் பயன்படுத்தி, அவர்களை முட்டாளாக்கி விடுவார்கள். நான்கு எருதுகள், ஒருசிங்கம் கதையைப் போல, இந்தக் கதையும் ஒற்றுமையின் வலிமையையே உணர்த்துகிறது.
- கட்டுரையாளர்:
காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்
***********************************************************************
கதாசிரியர் ரேகா ஜெயின்
1924-ல் ஆக்ராவில் பிறந்தவர். 1979-ல்இந்தியாவின் சிறந்த சிறுவர் நாடகக் குழுக்களில் ஒன்றான ‘உமங்’ கை தொடங்கினார். இந்தியா முழுவதும் பயணம் செய்து சிறுவர் இலக்கியம், நாடகக் கலை வளர்ச்சி என்று பாடுபட்டவர்.
ஓவியர் சுத்தசத்வ பாசு
இந்தியாவின் தலைசிறந்த ஓவியக் கல்லூரிகளில் ஓவியக் கலையைக் கற்பித்து வருகிறார். இந்தியாவின் முதல் அனிமேஷன் டெலிசீரியலைப் படைத்தவர். இவர் எழுதிய ‘Song of Scarecrow’ புத்தகம் பல விருதுகளைப் வென்றுள்ளது.
யார் மிக, மிகப் பெரியவர்?
(Who is the Greatest?)
தமிழாக்கம்:
ஆர் ஷாஜஹான்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
விலை: ரூ.25
WRITE A COMMENT