முனைவர் என்.மாதவன்
கோச்ரப் ஆசிரமத்தில் காந்தியடிகள் தங்கியிருந்தகாலம். காலம் தவறாமல் ஆசிரமத்துக்கு நன்கொடை வழங்கிவரும் செல்வந்தர் ஒருவர் ஆசிரமத்தில் காந்தியடிகளை சந்திக்க அவகாசம் கேட்கிறார்.
காலை 8.30 மணிக்கு சந்திப்புக்கான நேரம் உறுதி செய்யப்படுகிறது. மறுநாள் காலை 8 மணிக்கே ஆசிரமத்தை அடையும் செல்வந்தர் காந்தியை சந்திக்கும் விருப்பத்தை காந்தியடிகளின் செயலரிடம் தெரிவிக்கிறார். செயலரோ, “தயவு செய்து அமருங்கள். பாபு தங்களை 8.30மணிக்கு சந்திப்பார்” என்று நிதானமாகச் சொல்கிறார்.
எட்டிப் பார்த்த போது...
ஒரு கட்டத்தில் பொறுமை இழக்கும் செல்வந்தர் காந்தியடிகளின் அறைக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறார். அதிர்கிறார். பாபு கோதுமையில்இருக்கும் குறுணைகளையும், கற்களையும் நீக்கி சுத்தம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
சரியாக 8.30 மணிக்கு பாபு வரவேற்பறைக்கு வருகிறார். பாபுவிடம் சிறிதுநேரம் உரையாடிய பிறகு தான் வந்த நோக்கத்தை நிறைவு செய்துகொள்கிறார் செல்வந்தர். பின்னர்கிளம்பும் முன் பாபுவிடம் தயங்கியவாறே, “பாபு... நான் மிகவும் பணிச்சுமை உள்ளவன் என்பது தாங்கள் அறிந்ததே. நான் 8 மணிக்கெல்லாம் ஆசிரமத்தை அடைந்துவிட்டேன். ஆனாலும் 30 நிமிடம் காத்துக்கொண்டிருக்க வேண்டியாதாகிவிட்டதே. அதேநேரம் தாங்களும் ஏதும் முக்கியமான பணியில் இருந்ததாக தெரியவில்லை. கோதுமையைத்தான் தூய்மை செய்துகொண்டிருந்தீர்கள். என்னை சந்தித்துவிட்டு அதைச் செய்திருக்க கூடாதா” என்றார்.
நேரத்தில் அருமை
பாபுவும் புன்னகைத்துக்கொண்டே சொன்னார் “நான் தங்களைச் சந்திக்க ஒப்புக்கொண்ட 8.30-க்கு சரியாகச் சந்தித்துவிட்டேன். ஒரு வேளை நீங்கள் 8 மணிக்கு வருவதாக நேற்றே தெரிவித்திருந்தால் அதற்கேற்றபடி திட்டமிட்டிருப்பேன். இது கோதுமை தூய்மை செய்வதோடு மட்டும் சம்மந்தப்பட்டதல்ல. அதை அரைத்து மாவாக்க வேண்டும். பின்னர் ஆசிரமத்திலுள்ள அனைவருக்குமான உணவு தயாரிக்கவேண்டும். எனக்கான பணியின் காலதாமதத்தால் அனைத்தும் காலதாமதமாகும். அதை நான் ஒரு போதும் விரும்புவதில்லை. மன்னிக்கவும் உங்களுக்கு உங்களுடைய நேரத்தின் அருமையும் தெரியவில்லை. என்னுடைய நேரத்தின் அருமையும் புரியவில்லை” என்று முடித்தார் காந்தி. செல்வந்தர் தவறை உணர்ந்தார்.
அக்கம் பக்கம் பார்
கடந்த காலத்தைக் காசு கொடுத்து வாங்கும் அளவுக்கு செல்வந்தர்கள் யாருமில்லை என்றார் ஓர் அறிஞர். சரி நேரத்தை எவ்வாறு திட்டமிடலாம்? நாம் செய்ய உள்ள பணிகள் பெரிதாக இருக்கலாம். ஆனால், அதை சிறு சிறு துண்டுகளாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்துவைக்கலாம். பின்னர் தொகுக்கும்போது மலை போலத் தெரிந்த வேலை எளிதில் முடிந்து இருக்கும். இது ஒன்
றும் புதிதல்ல. சென்னை போன்ற பெருநகரங்களின் மின்சார ரயிலில் பயணித்துப் பார்த்தாலே புரியும். கடையிலிருந்து மொத்த வியாபாரத்தில் பூக்கள் வாங்கும் பெண்கள் தாங்கள்பயணிக்கும் நேரத்திற்குள்ளாகவே முதற்கட்ட விற்பனைக்கான 10 முழம் பூவைத் தொடுப்பதை பார்க்கலாம்.
எவ்வளவோ செய்யலாமே!
கணக்காளர் ஒருவர் கணக்கு எழுதும் கலையைச் சொல்லிக்கொடுத்தார். அன்றாடம் நமக்காகும் செலவை அவ்வப்போது எழுதினால் சில நொடிகள் மட்டுமே அதற்கு தேவைப்படும். நாள் இறுதியில் எழுதினால் ஐந்து நிமிடங்கள் வரை தேவைப்படும். அதே கணக்குகளை வாரா வாரம் எழுதினால் அரை நாளும்மாதாமாதம் எழுதினால் இரண்டு மூன்று நாட்களும் ஆகும் என்றார்.
நேரத்தை மிச்சப்படுத்தலாம்
அன்றைக்கு செய்ய வேண்டிய பணிகளை அன்றைக்கே முடிப்பது ஒரு சிறந்த வாழ்வியல் கலை. பேருந்துக்காக காத்திருக்கும் நேரம், பயணிக்கும் நேரம் போன்றவற்றில் வாசிக்க ஏதுவாக சிறு சிறு குறிப்புகளைத் தயார் செய்து வைத்துக்கொண்டால் கிடைக்கும் கொஞ்சநேரத்தையும் சரியாக பயன்படுத்தலாம். இப்படி எப்படியெல்லாம் நேரத்தைமிச்சப்படுத்தலாம், பயனுள்ள வகையில் கழிக்கலாம் என்று யோசித்து எங்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்.
- கட்டுரையாளர் பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
WRITE A COMMENT