ஆர்த்தி சி. ராஜரத்தினம்
நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை யின் தரத்தைத் தீர்மானிப்பது நமக்கு நெருக்கமானவர்களோடு நாம் எப்படிப்பட்ட உறவை பேணுகிறோம் என்பதுதான்.
பதின்பருவத்தினருக்குள் ஒரு விதமான எதிர்ப்பாளர் துளிர்த்துக் கொள்வார். ஆகையால் அவர்கள் குடும்பத்தினரிடம் முரண்டு பிடிப்பார்கள். சக வயதினரைதேடிச் செல்வார்கள். இது அந்தவயதுக்கே உரிய இயல்பு. இதைப் புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களுடைய செயல்பாடு பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் தவறான போக்காகப் பயமுறுத்தும்.
இத்தகைய கட்டத்தில் ஒருவரை ஒருவர் காயப்படுத்திக் கொள்ளாமல் பதின்பருவத்தினரிடம் ஏற்படும் மாற்றங்களையும் வளர்ச்சியையும் புரிந்துகொள்ள வயது முதிர்ந்தவர்கள் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் Connection Ritual
(தொடர்புகொள்ளும் சடங்கு). Connection அதாவது தொடர்பு என்ற சொல் உணர்த்துவதை போல பதின் பருவத்தினருடன் புரிதல் ஏற்படுத்திக் கொள்வதை பெற்றோர் வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். இதை ஏன் சடங்கு (ritual) என்று அழைக்கிறேன் என்றால், இதற்கென சில வழிமுறையை வகுத்துக்கொள்வதுதான் நீண்ட நாட்களுக்குக் கைகொடுக்கும். பொதுவாக பதின்பருவத்தினர் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். அப்போது அவர்களைக் கட்டுப்படுத்த பெற்றோர் முயல்வார்கள். இதன் விளைவாக பதின்பருவத்தினரின் முரட்டுத்தனம் மேலும் தீவிரமடைந்து மூர்க்கத்தனமாக மாறும்அபாயம் உள்ளது. இத்தகைய சூழலில்‘தொடர்புகொள்ளும் சடங்கு’ என்ற முறையைக் கையாளும்போது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பாலம் வலுபெறும். இதோ அதற்கான சில வழிமுறைகள்:
1. ‘தொடர்புகொள்ளும் சடங்கு’ என்பது உங்களுக்கும் உங்களுடைய பதின்பருவ குழந்தைக்கும் இடையிலான உற்சாக உரையாடலுக்கான நேரம். இந்த நேரம் குதூகலம் நிறைந்ததாக இருக்க வேண்டும். அறிவுரை சொல்லுதல், நெருக்கடிகளை கையாள வற்புறுத்தல், ஒழுக்கத்தை திணித்தல் போன்றவற்றுக்கு இங்கு இடமில்லை.
2. நீங்களும் உங்களுடைய குழந்தையும் ஓய்வாக நடந்தபடியே பேசலாம், அல்லது சேர்ந்து எதாவது விளையாடலாம், அன்றைய நாள் தனக்கு எப்படிஇருந்தது என்பதை பகிர்ந்துகொள்ளலாம், அல்லது அலைப்பேசி போன்ற கருவிகள் இன்றி இணைந்து விளையாட்டுத்
தனமாக செய்யும் எதுவாகவும் இருக்கலாம்.
3. கண்டிப்பாக இந்த நேரத்தில் குழந்தையை தண்டிக்கவோ கண்டிக்கவோ கூடாது.
4. தினந்தோறும் ‘தொடர்புகொள்ளும் சடங்கை’ செய்துபார்க்க வேண்டும். இதை அனுதினம் பின்பற்றும்போதுதான் உறவு வலுப்பெறும்.
5. பெற்றோர், குழந்தை இருவருக்கும் தோதான நேரம் பார்த்து 15-லிருந்து 45 நிமிடங்கள் வரை தினந்தோறும் செலவிடலாம்.
ஆரம்ப நாட்களில் பதின்பருவத்தினர் வாய்திறக்க மாட்டார்கள். ஆனாலும் பெற்றோர் அமைதி காக்க வேண்டும்.
- கட்டுரையாளர், குழந்தை மற்றும் பதின் பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்
WRITE A COMMENT