ஆர். ரம்யா முரளி
ஆங்கிலத்தில், ‘A Healthy Mind In A Healthy Body’ என்று ஒரு அழகான சொற்றொடர் உண்டு. உடல் என்னும் அழகிய கூட்டிற்குள்தான் அற்புதமான மனம் குடி கொண்டுள்ளது.
மனம் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடலும் ஆரோக்கியமாகப் பேணப்பட வேண்டும். ஆகவே, உடலை போற்றிப் பாது
காத்தல் அவசியம். இதைதான் சான்றோர், சுவர் இருந்தால்தானே சித்திரம்வரைய முடியும்? என்றனர்.
முயற்சியும் பயிற்சியும்!
உடலை நலமாக வைத்துக்கொள்ள அதிகம் பணம் செலவழிக்க வேண்டியது இல்லை. நம்முடைய உடல் நலனைக் குறித்த அடிப்படை அறிவும் கொஞ்சம் முயற்சியோடு கூடிய பயிற்சியும் இருந்தால் போதும். உங்களில் பலர் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என பல கனவுகளுடனும் லட்சியத்துடனும் இருக்கலாம். ஆனால், நம் மனம் நினைக்கும் ஒன்றை நம் உடலை வைத்துத்தானே சாதித்துக்காட்ட முடியும். அதற்கு பெரும் துணையாக இருக்கிறது யோகக்கலை.
உங்களுடைய பிரச்சினை என்ன?
மாணவர்களாகிய உங்கள் முன் இருக்கும் மிக பெரிய சவால்கள் என்னவென்பதைப் பார்ப்போம். சிலருக்கு வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லையே என்ற வருத்தம். சிலருக்கோ வயதிற்கு மீறிய உடல் வாகும் உயரமும் ஏற்படுவதால் சிக்கல்.
சிலருக்கு படித்தது மனதில் நிற்காது. சிலருக்கோ பாடத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் ஏகத்திற்கும் கவனச் சிதறல்கள் ஏற்படும். உங்கள் நண்பர்களில் சிலருக்கு எதற்கு எடுத்தாலும் கோபம் வரலாம். அதைக் கையாளத் தெரியாமல் தவிக்கலாம். உங்கள் நண்பர்கள் சிலருக்கு சின்ன மழைத் தூரல் கூட, மூக்கில் இருந்து சாரல் மழையை வரவழைக்கலாம்.
உங்கள் முன் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் வேறு ஒரு தோழிக்கு தூசு பட்டாலே அடுக்கு தும்மல் அடுக்கி வரலாம். இப்படி பிரச்சி
னைகள் எதுவானாலும் அவை அனைத்திற்கும் யோகப் பயிற்சியின் மூலம் நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
பல கேள்விகளுக்கு விடை இதோயோகாதானே... எங்களுக்குத் தெரியுமே... கண்களை மூடி தியானத்தில் அமர்வது, குனிந்து நிமிர்ந்து,
உடலை வளைத்து... சொல்லும்போதே மூச்சு முட்டுதே. இப்பவே கண்ணைக் கட்டுதே என்கிறீர்களா? உங்களுக்காகத்தான் இனி வரும் வரிகள். யோகா அதன் நன்மைகள், எப்போது, எப்படி செய்ய வேண்டும், எந்த பிரச்சினைக்கு எந்த பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும், எவ்வளவு நேரம் செய்யலாம் என உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையாக அமைய இருக்கிறது.
என்னுடைய ஆரோக்கியத்திற்காக ஆரம்பித்த இந்த பயிற்சியை நான் விடாமல் தொடர்ந்து செய்து பலன் காண்பேன் என்னும் உறுதியும், நீங்கள்செலவழிக்க போகும் நேரமும்தான் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யப் போகும் மூலதனம். வழிகாட்ட
நாங்கள் தயார்....கற்றுப் பலன் பெற நீங்கள் தயாரா?
யோகா கற்போம் – பயிற்சி செய்வோம் – நம்மை வலுப்படுத்தி கொள்வோம்.
(யோகம் தொடரும்)
கட்டுரையாளர்: யோகா நிபுணர்.
எழுத்தாக்கம்: ப.கோமதி சுரேஷ்
WRITE A COMMENT