எஸ்.எஸ்.லெனின்
மருத்துவம், பொறியியலுக்கு இணையான, படிக்கும்போதே சர்வதேச அளவிலான பணிவாய்ப்பை வழங்கக்கூடிய பலவகை உயர்
படிப்புகள் உள்ளன. அவற்றில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை இங்கே அறிந்துகொள்வோம். இதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உயர்கல்வி வாய்ப்புகளை அடையாளம் காணலாம். அவற்றுக்கான முறையான தயாரிப்புகளை முன்
கூட்டியே தொடங்கவும் முடியும்.
நுழைவுத் தேர்வின் பெயர்: NCHM JEE
என்ன படிக்கலாம்?
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜியின் கீழ் பல்வேறு பட்டப் படிப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு, பி.எஸ்சி. ஹாஸ்பிடாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேசன்.
எங்கே படிக்கலாம்?
மத்திய அரசின் சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது ’நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு
கேட்டரிங் டெக்னாலஜி’. இந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் மட்டுமே சேர்ந்து படிக்க வேண்டும். இந்த அமைப்பைச்சேர்ந்த மத்திய அரசு கல்வி நிலையங்கள் நாடு முழுக்க 60 நகரங்களில் செயல்படுகின்றன. இதுதவிர மாநில அரசின் கீழும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. உதாரணத்துக்கு, தமிழகத்தில் சென்னை தரமணியில் மத்திய அரசு நிறுவனமும், திருச்சி துவாக்குடியில் மாநில அரசின் நிறுவனமும் செயல்படுகின்றன. மேலும் ஏராளமான தனியார் கல்வி
நிலையங்களும் இத்துறையில் செயல்படுகின்றன.
வேலை எங்கே?
ஹோட்டல், கேட்டரிங் என்றதும் சமையலுடன் மட்டுமே தொடர்புடைய வேலைகள் என மாணவர்கள் நினைத்துவிட வேண்டாம்.
பொறியியலுக்கு நிகரான தொழிற்கல்வி படிப்பு இது.
நட்சத்திர விடுதிகள் பராமரிப்பு, விருந்தினரை வரவேற்று உபசரிப்பது, உணவக மேலாண்மை, உணவுப் பண்டங்களை அலங்கரிப்பது-பரிமாறுவது, திருமணம் உள்ளிட்ட விருந்துகளுக்கான உணவுத் தயாரிப்பு, கப்பல், விமானம் உள்ளிட்ட சர்வதேச போக்குவரத்து மேடைகள், சுற்றுலாத் துறை, தின்பண்டங்கள் தயாரிப்பு, விற்பனை தொடர்பான சந்தை, உணவு தொடர்பான செய்தியாளர் – கட்டுரையாளர் பணிகள், புகைப்படக்கலை, உணவுதரம் பிரிப்போர் மற்றும் தணிக்கையாளர் என ஏராளமான பணி
வாய்ப்புகள் இத்துறையில் கொட்டிக்கிடக்கின்றன.
தனித்திறனில் கவனம்
படிப்பை முடித்தவர்களுக்கு மதிப்பெண்களைவிட செய்முறையில் அவர்கள் காட்டும் தனித்திறனே வேலைவாய்ப்புகளை தேடித்தரும்.
எனவே ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் இத்துறையில் எளிதில் ஜெயில்லலாம். ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு அப்பால் வங்கி கடனுதவியுடன் சொந்தமாகத் தொழில் தொடங்கி சுயமாக உயரவும் வாய்ப்புண்டு.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2-வில் தேர்ச்சி பெற்ற எவரும் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 பாடங்களில் ஒன்றாக ஆங்கிலம் இருப்பது அவசியம். அதிகபட்ச வயது 22. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 25 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு எப்படி?
‘நேஷனல் கவுன்சில் ஃபார் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி’ அமைப்பு நுழைவுத் தேர்வுகளை நடத்து
கிறது. 3 மணிநேரம் நடைபெறும் நுழைவுத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் 4 பிரிவுகளில் கேட்கப்படும். தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணத்தையும் அவ்வாறே செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 50 சதவீதம்மட்டுமே கட்டணம். விண்ணப் பிக்கவும், கூடுதல் விபரங்களுக்கும் http://www.nchm.nic.in/ என்ற இணையதளத்தை நாடவும்.
உதவிக்கு ஆசிரியர்கள், அருகிலிருக்கும் படித்த மற்றும் பணியிலிருக்கும் பெரியவர்களை மாணவர்கள் அணுகுவது நல்லது.
WRITE A COMMENT