அறிவோம் அறிவியல் மேதையை 02: காலத்தை வென்ற கலைஞன் - லியோனார்டோ டாவின்சி


அறிவோம் அறிவியல் மேதையை 02: காலத்தை வென்ற கலைஞன் - லியோனார்டோ டாவின்சி

தேவிகாபுரம் சிவா

லியோனார்டோ டாவின்சி என்ற மாபெரும் கலைஞன் மறைந்து 500 ஆண்டுகள் ஆகிறது. மோனாலிசா என்ற மந்திரப் புன்னகைக் காரியை வரைந்த தூரிகையாளர் மட்டும் அல்ல அவர். ஆகச்சிறந்த அறிவியலாளரும்கூட.

அவர் சிற்பங்களை வடித்தார்; சீர்மிகு கட்டிடங்களைக் கட்டினார்; நகரங்களை வடிவமைத்தார்; குழல் இசைத்தார்; யாழ் மீட்டினார்; இறந்த மனித உடல்களை அறுத்து ஆய்ந்து உடற்கூறு உண்மைகளைக் குறித்து வைத்தார். போர்க் கருவிகளைச் செய்துதந்தார்.

லியோனார்டோ டாவின்சி, இத்தாலி நாட்டில் வின்சி என்ற ஊரில் 1452-ம் ஆண்டு, ஏப்ரல் 15 அன்று பிறந்தார். விளையாட்டு, கணிதம், ஓவியம் என அனைத்திலும் கெட்டிக்காரராக சிறுவயதிலேயே விளங்கினார். அவரது திறமையைக் கண்டுகொண்ட குடும்பத்தார், ஃபுளோரன்ஸ் நகரத்தில் ஆந்திரேய்யா டெல் வெர்ரோக்கியோ என்ற மாபெரும் கலைஞரின் பள்ளியில் சேர்த்தனர். சேர்ந்த சிறிது காலத்திலேயே ஆசிரியரை விஞ்சிய மாணவனாக ஆனார்.

பலதுறை அறிஞர்

ஃபுளோரன்ஸ், மிலன், வெனிஸ், ரோம் எனப் பல நகரங்களிலும் பணிபுரிந்து அழியாப் புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தார். சிற்பங்களை வடித்தார். கட்டிடங்களையும் பாலங்களையும் வடிவமைத்தார். புகழ்பெற்ற கலைஞர் மைக்கேல் ஏஞ்சலோ லியோனார்டோவின் காலத்தில் வாழ்ந்தவர்தான்.

திருத்தமாகச் செய்தவர்

தான் வரையும் ஓவியங்களில் நுணுக்குமான விவரங்களைக் கொண்டுவருவதற்காக, தாவரங்கள், விலங்குகள், மனித உடல்அமைப்பு, நில அமைப்புகள் என எல்லாவற்றையும் ஆராய்ந்தார் டாவின்சி. “மனதில் தோன்றும் சிந்தனைகளை அறிவின் துணைகொண்டு சோதனை செய்யாவிட்டால் பயன் ஏதும் இல்லை” என்றார்.

ஆர்னித்தாப்டர் - பறக்கும் எந்திரம்

லியோனார்டோவின் ஆராய்ச்சிகளிலேயே முக்கியமானது பறக்கும் எந்திரங்கள். ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடல் வரி லியோனார்டோவுக்காக எழுதப்பட்ட வரிதான் எனலாம். 1487-ல், ஆர்னித்தாப்டர் என்ற உலகின் முதல் பறக்கும் எந்திரத்தை உருவாக்கினார். மனிதர்கள் கால்களைக் கொண்டு விசையை செலுத்தும்படி அதை வடிவமைத்திருந்தார். அதில் திசை மாற்றும் சுக்கானைக்கூட பொருத்தியிருந்தார். ஆனால், மனித உடல் சக்தியைவிட மேலான சக்தி இருந்தால் மட்டுமே ஒரு விமானத்தை மேலெழச் செய்ய முடியும். அதனால், அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

காற்றை அளந்தவர்

விமானம் செய்யும் முயற்சிகளுக்காக காற்றில் பறவைகள் எப்படி பறக்கின்றன? மரத்தில் இருந்து பழுத்து விழும் இலைகள் எப்படி காற்றை எதிர்கொள்கின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்தார். இதன் பலனாகக் காற்றின் வேகத்தை அறியும் அனிமோமீட்டர் என்ற கருவியை உருவாக்கினார்.

குறிப்புகள் காட்டும் கருவிகள்

றெக்கை விமானம் மட்டுமல்லாமல் ஹெலிக்காப்டர், கடிகாரம், அச்சு எந்திரம், நீச்சல் உபகரணங்கள், படகுகள், மகிழுந்துகள், பாலங்கள் எனப் பலவற்றுக்கான வடிவமைப்புகளை அவர் உருவாக்கி இருந்தார். அவர் எழுதிவைத்துள்ள நோட்டுப்புத்தக குறிப்புகளில் இருந்து இவை நமக்குத் தெரிய வருகிறது.

வியக்க வைக்கும் கட்டுமான மாதிரி

கடந்த அக்டோபர் 10 அன்று, அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மாசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். இதில் லியோனார்டோவின் குறிப்புகளில் உள்ள ஆற்றுப்பாலம் கட்டுமான மாதிரி மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது கட்டப்பட்டிருந்தால் அவர் காலத்தின் உலகின் நீளமான பாலமாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பால வடிவமைப்பில் தூண்கள் இல்லை என்பதும் அதனால் ஆற்றில் படகு போக்குவரத்திற்கு தடையேதும் இல்லை என்பதும் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரான்சில் 1519-ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று டாவின்சி இறந்தார். மாமேதை டாவின்சியின் நினைவைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு பள்ளியிலும் புதுமையான கலை, நுண்கலைப் போட்டிகளை நடத்தலாம். கலந்துரையாடல்கள் மூலம் டாவின்சியை அறியச் செய்யலாம். புதிய லியோனார்டோ டாவின்சிகள் உருவாக கருத்துவிதைகளைத் தூவலாம்.

டாவின்சி பொழியும் டாலர் மழை

தன் வாழ்நாள் முழுவதும் செய்த அறிவியல் ஆராய்ச்சிகளை நோட்டுப் புத்தகங்களில் பதிவுசெய்தார் டாவின்சி. எழுத்துகளாகவும், ஓவியங்களாகவும் விரியும் அந்தப் பதிவுகள் 13,000-க்கும் மேற்பட்ட பக்கங்களில் விரிகின்றன. அவர் எழுதிச்சென்ற தாள்கள் இன்று பல்வேறு ஐரோப்பிய அமெரிக்க அருங்காட்சியகங்களிலும் சில தனிநபர்களிடமும் விரவிக்கிடக்கின்றன.

அவற்றின் ஒவ்வொரு பக்கமும் கிளர்த்தும் ஆச்சரியங்களால் அவற்றை அடையடாலர்களைக் கொட்டிக் கொடுக்க பணம் படைதோறும், அருங்காட்சியகங்களின் உரிமையாளர்களும் காத்துக்கிடக்கின்றனர். இப்படி லியோனார்டோ டாவின்சியின் பக்கங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை மைக்ரோசாஃப்ட் உரிமை
யாளர் பில்கேட்ஸ் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 213 கோடிக்கு வாங்கினார்.


- கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு:
devikapuramsiva@gmail.com

FOLLOW US

WRITE A COMMENT

x