தோழியருடன் பள்ளி பேருந்தில் அமர்ந்திருந்த அவளுடையப் பெயரைச் சொல்லி அடையாளம் கேட்ட அந்தத் தீவிரவாதி நேரடியாகத் துப்பாக்கியால் அவளை நோக்கிச் சுட்டான். மொத்தம் மூன்று குண்டுகள்! ஒரு குண்டு அவள் தலையைத் துளைத்து தோளில் இறங்கியது.
ரத்தவெள்ளத்தில் பலத்த காயத்துடன் அவள் மயங்கினாள்.
ஆம்! அவள்தான் மலாலா யூசூப்ஃபஸி.
கட்டாயம் கல்வி வேண்டும்
அடிபட்ட சிறுமி மலாலா உடனடியாக பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பிறகு இங்கிலாந்துக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டாள். அப்போது அவளுக்கு வயது 15 தான். இந்தச் சம்பவம் உலகையே உலுக்கியது. மலாலா பாகிஸ்தானில் உள்ள ஸ்வாத் பள்ளத்தாக்கில் 1997-ல் பிறந்தார்.
சிறுவயது முதலே தந்தையின் உந்துதலால் அறிவுத்தேடல் மிகுந்தவளாக இருந்தாள்.
பெண்கள் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். பாகிஸ்தானில் தாலிபன் என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் பெண்கள் படிப்பதற்கு பள்ளிக்குச் செல்வதை தடை விதித்தார்கள். பொது விஷயங்களில் பெண்கள் பங்கேற்பதையும் தடுத்தார்கள். அதற்காக 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளை அழித்தார்கள்.
சிறுமி மலாலா இதற்காக வெகுண்டெழுந்தாள். ‘‘நான் கல்வி பெறுவதைத் தடுக்க தாலிபான்களுக்கு யார் உரிமை தந்தது?” என்று பாகிஸ்தான் தொலைக்காட்சியில் தைரியமாக முழங்கினார்.
சவால் விட்ட சிறுமி
2009-ல் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் இணையதளத்தில் தன் கல்வி உரிமைக்காக தாலிபான்களை எதிர்த்து ‘குல் மக்கை’ எனும் புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதில் உறுதியாக இருந்தார். அப்படி தாலிபான்களுக்குச் சவால்விட்ட சிறுமியை தாலிபான்கள் சும்மா விட விரும்பவில்லை. அதன் விளைவுதான் மேலே குறிப்பிட்ட துப்பாக்கித் தாக்குதல். இது பாகிஸ்தான் பெண்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீவிரவாதிகள் நினைத்தனர். ஆனால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றுகூடி அதை எதிர்த்தன.
அதிகம் விற்ற புத்தகம்
பெண் குழந்தைகள் கல்வி பெறுவதன் அவசியத்தை அச்சமின்றி மலாலா தொடர்ந்து வலியுறுத்திப் பேசத் தொடங்கினார். தாலிபான்களின் அச்சுறுத்தல் அவருக்கு இருந்ததால் அவர் இங்கிலாந்திலேயே அரசின் பாதுகாப்போடு தங்க வைக்கப்பட்டார். தனது 16-வது வயதில் ஐ.நா.சபையில் உரையாற்ற அழைக்கப்பட்டார்.
அதே ஆண்டு. ‘‘நான்தான் மலாலா - பெண் கல்விக்காக குரல் எழுப்பும் பெண் மற்றும் தலிபான்களால் சுடப்பட்டவள்" ( I am Malala- The Girl Who Stood Up for Education and Was Shot by the Taliban.” ) என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
அது உலகெங்கிலும் அதிக விற்பனையானது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்காக ஐரோப்பா பாராளுமன்றம் சுதந்தர சிந்தனைக்கான ‘ஷக்ரோவ்' என்ற பெருமைக்குரிய விருதை மலாலாவுக்கு அளித்தது மலாலா தனக்கு வந்த நன்கொடைகளை ‘மலாலா நிதி’ என்ற பெயரில் ஒரு நிதி அமைப்பை உருவாக்கி அதில் வரவு வைத்தார். இந்த நன்கொடைகளை சிரிய நாட்டு அகதிளுக்கும், கென்யா நாட்டுப் பெண் குழந்தைகளுக்கும் உதவித்தொகையாக வழங்கினார். நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளுக்காக குரல் எழுப்பினார்.
நோபல் பரிசு
2014 அக்டோபரில் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமைப் போராளி கைலாஷ் சத்தியார்த்தி என்பவருடன் இணைந்து மலாலாவின் பெயரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 17 வயதிலேயே மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ‘‘இந்தப் பரிசு எனக்காக மட்டுமல்ல கல்வியைத் தேடும் அனைத்துப் பெண் குழந்தைகளுக்கானது. பயந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதியை நாடும் குழந்தைகளுக்கானது. மாற்றத்தை விரும்பும் குரலற்ற குழந்தைகளுக்கானது’’ என்றார் மலாலா.
பெண்கள் கல்வி உரிமைக்காக மலாலா எழுப்பிய குரல் உலக மக்கள் அனைவரின் காதுகளுக்கும் எட்டியது. மலாலா தற்பொழுது இங்கிலாந்தில் உள்ள பிரிம்ஹிங்காம் நகரில் வசித்து வருகிறார். பெண்களுக்கு கல்விதான் சுதந்திரத்தை கொடுக்கும். நம்பிக்கையை கொடுக்கும். எனவே கல்வியே அடிப்படை என்ற கல்வி போராளி மலாலா இளம் தலைமுறையினருக்கு ஒரு திசை காட்டியாவார்.
- இரா.முரளி
(மேலும் பலர் திசை காட்டுவார்கள்)
கட்டுரையாளர், பேராசிரியர்-சமூகச் செயற்பாட்டாளர்.
WRITE A COMMENT