மகளிர் தினம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன கிராமப்புற மகளிர் தினம்? பெண்கள் எல்லோரும் பொதுவானவர்கள்தானே என்ற கேள்வி வரும். பொதுவானதாக ஒன்றை கருதும்போது அங்கு கூடுதல் உதவி தேவைப்படுபவர்களுக்கு கவனம் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. அதிலும் நகரப்புற, கிராமப்புற மக்களுக்கிடையே வித்தியாசங்கள் பல உள்ளன. உலகம் முழுவதும் கிராமப்புறத்தை சேர்ந்த நூறு கோடி மக்கள் கடுமையான வறுமையில் உள்ளனர். அவர்களின் வாழ்க்கை மேம்பட கிராமப்புறத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
கிராமப்புறத்தின் அடையாளமாக இருக்கும் வேளாண்மையில் பெண்களின் பங்கு அளப்பரியது. ஆனால், நாள்தோறும் அதிக பணிச்சுமைக்கு மத்தியில் அவர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து அக்டோபர் 15-ம் நாள் சர்வதேச கிராமப்புற தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகள் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஆற்றலை கட்டமைத்தல்” (Rural women and girls building climate resilence).
பிரதான கடமை
கல்வி, விளையாட்டு, தொழில் என பெண்கள் இன்று அடைந்திருக்கும் அனைத்து சாதனைகளுக்குப் பின்னும் கண்ணுத் தெரியாத பல போராட்டங்கள் உள்ளன. அதிலும் கிராமப்புற பெண்களுக்கு சவால்கள் கூடுதலாகவே இருக்கிறது. நகர்ப்புற பெண்களுக்குக் கிடைக்கும் வசதி கிராமப்புற பெண்களுக்கு கிடைப்பதில்லை.
சுகாதாரம், போக்குவரத்து வசதிகளில் நகர்புறத்தைக் காட்டிலும் கிராமங்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. குடிக்க நீரின்றி பல மைல்கள் நாள்தோறும் கால்கடுக்க நடந்து நீர் இறைத்துவரும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவின் கிராமங்களில் அதிகரித்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் எதிரொலிக்கும் பருவநிலை மாற்றத்தையும், புவி வெப்பமடைவதையும் கட்டுப்படுத்துவதற்கு கிராமப்புறங்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முதல் கட்டமாக உலகம் முழுவதும் வறுமையில் சிக்கிக் கொண்டிருக்கும் கிராமப்புற பெண்களின் நிலையை மாற்ற வேண்டும்.
- ச.ச.சிவசங்கர்
WRITE A COMMENT