இன்று எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் செய்யும் அதிசயங்கள் கணக்கிலடங்காதவை. பூமியில் ஒரு அறையில் உட்கார்ந்து கொண்டு விண்கலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முகத்தைப் பார்த்து வீட்டின் கதவைத் தானாக திறக்கிறது. ஓட்டுநர் இல்லாமல் காரை ஓட்டுகிறது. இன்னும் பற்பல அதிசயங்களை நிகழ்த்துகிறது.
எலக்ட்ரானிக் பொருட்கள் என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு உண்டு. அதனால்தான் பள்ளியில் படிக்கும்போதே பலர் எலக்ட்ரானிக் ப்ராஜெக்ட்களை செய்கின்றனர்.
காலம் மாறிப் போச்சு!
ஆனால், சரியாகப் புரிந்துகொண்டு செய்வதில்லை. அதனால் பாதியிலேயே ப்ராஜக்டை கைவிடுகின்றனர் அல்லது புரியாமல் மற்றவர் உதவியுடன் ப்ராஜக்டை முடிக்கின்றனர். உண்மையில் பள்ளி மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை எளிதில் கற்றுக்கொள்ளலாம். அதற்கு அதிகம் செலவு செய்யத் தேவையில்லை.
பொதுவாக மாணவர்கள் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தையும், கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தையும் வெவ்வேறாகப் பார்க்கின்றனர். ஆனால், இரண்டும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று எலக்ட்ரானிக்ஸை உபயோகித்து கம்ப்யூட்டரை உருவாக்கினார்கள். இன்று கம்ப்யூட்டரை உபயோகித்து எலக்ட்ரானிக் பொருள்களை உருவாக்குகிறார்கள். இது சிறிது குழப்பமாக தெரியலாம். கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் உதவும், அதேபோல் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் நிபுணராக கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் உதவும்.
எளிதில் கற்கலாம்!
மனிதர்கள் முதலில் நடந்தார்கள், ஓடினார்கள், பின்னர்மாட்டு வண்டி, மிதி வண்டி என்று பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்து பயணத்தை எளிதாக்கினார்கள். இன்று யாரும் சென்னையிலிருந்து திருச்சிக்கு நடந்து செல்வதில்லை. அதேபோல் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்ட 1906 முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
இந்த மாற்றங்களையும், இன்றைய எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தையும் பற்றி தெளிவாக புரிந்து கொண்டால் எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்குவது எளிது. எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் அறிவு அல்ல, திறன். அதற்கு நிறைய பயிற்சி தேவை. எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெறுவது எப்படி? அதற்கு மாணவர்கள் பள்ளி நாட்களில் என்ன செய்ய வேண்டும்?. இவற்றைப் பற்றி எளிமையாக அதேநேரம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.
- பாலாஜி
- (தொடரும்)
கட்டுரையாளர், பொறியாளர், தொழில்நுட்பப் பயிற்றுநர்
WRITE A COMMENT