நதிகள் பிறந்தது நமக்காக! - 1: ஆற்றோடு நாமும் பயணிப்போம்! 


நதிகள் பிறந்தது நமக்காக! - 1: ஆற்றோடு நாமும் பயணிப்போம்! 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

எளிமையான கேள்வியில் இருந்தே தொடங்குவோம். 'இந்தியாவில் மொத்தம் எத்தனை ஆறுகள் உள்ளன?'.
'கேள்வி எளிமை ஆனதுதான். பதில் தான்....'

பல நேரம் இப்படி நேர்ந்து விடுகிறது. மிகவும் எளிமையான பல வினாக்களை, விஷயங்களை கவனிக்காமலே கடந்து போய் விடுகிறோம். இந்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளங்களில் ஒன்று - 'Know India' - https://knowindia.gov.in/India'.
இதன் முகப்புப் பக்கம் (Profile) இப்படிக் கூறுகிறது - 'சிறிய அளவிலான, கடலோர நதிகள் ஏராளமாக இருக்கின்றன. மேற்குக் கடற்கரை ஓரம் மட்டுமே, 600 ஆறுகள் உள்ளன'.
ஆச்சரியமாக இருக்கிறதா! இதை விடவும் வினோதம் என்ன தெரியுமா? இந்த ஆறுகள் குறித்த விவரங்கள், செய்திகள், தகவல்கள், அவ்வளவு ஏன் பெயர்கள்கூட பலரும் அறியாதவை.

இந்திய நதிகள் பொதுவாக 4 வகைகள்:

1. இமய மலை நதிகள் 2. தக்காண நதிகள் 3. கடலோர நதிகள் 4. உள்நாட்டு சமவெளி நதிகள்.
‘யாமறிந்த நதிகளிலே' கங்கையை
போல் வளமானது ஒன்றும் காணோம். (நன்றி - பாரதி!) கூடவே, யமுனை, நர்மதா, கிருஷ்ணா, கோதாவரி, ‘நமது' காவேரி என்று பலநதிகள், கங்கைக்கு இணையாக மக்களுக்கு நன்மை செய்கின்றன; மக்களால் போற்றப்படுகின்றன.

நாம் நன்கு அறிந்த ஆறுகளைப் போலவே, ‘ஊர் பேர் தெரியாத' சிறிதும் பெரிதுமான ஆறுகள், கிளை ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் நமக்காக ‘ஓடிக்கொண்டு' இருக்கின்றன. ஆனால், வணங்கவும் துதிக்கவும் போற்றவும், வாழ்த்தவும், சில ஆறுகள் மட்டுமே ‘தகுதி' பெறுகின்றன. மற்றவை
எல்லாம் மறக்கப்படுகின்றன. ஆறுகளில் கூடவா, ஏற்றத்தாழ்வு ?

வீணாக ஓடவில்லை

சிறியது, பெரியது என்றெல்லாம் பகுத்திட, நீள அகல அளவுகள் மட்டுமே போதுமானதா? எந்த நதியும் வீணாக ஓடுவதில்லை. எந்த ஆற்று நீரும் பயனின்றிப் போவதில்லை. தாகம் தீர்க்க, நிலங்களைப் பசுமையாக்க, வணிகம் செழிக்க, வாழ்வு சிறக்க, இந்த மண்ணுக்காக, மக்களுக்காக இருக்கின்றன - இந்த ஆறுகள். முற்றும் உண்மை. ‘நதிகள் பிறந்தது நமக்காக!'

இந்திய ஆறுகள் குறித்த முறையான முழுமையான ஆவணங்கள் இன்று வரை உருவாக்கப்படவில்லை. நன்கு அறிமுகமான, நாம் ‘எங்கோ', எப்போதோ, கேள்விப்பட்ட, இதுவரை கேள்வியேபடாத பல்வேறு நதிகள் குறித்தும் சுருக்கமாக சுவாரஸ்யமாக பார்த்துச் செல்வோம். ஆறுகளின் வரலாறு, ஆண்டாண்டு காலமாக அதை ஒட்டி வழ்ந்து வரும் மக்களின் வரலாறும் கூடத்தான். அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், கலை, மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை என்று எல்லா மட்டங்களிலும் விரவி நிற்கிறது ஆறுகளின் பங்கு.

நதி - நாகரிகத்தின் தொடக்கப் புள்ளி. மனித வளர்ச்சியின் முக்கிய பங்குதாரர். வாருங்கள் ஆறு போகிற பாதையில் நாமும் கைகோர்த்துப் பயணிப்போம். அது - நம்முள் இருக்கும் ஆற்றாமைகளை ஆற்றுப்படுத்தும். பழங்காலப் பெருமைகளை கண்முன் நிறுத்தும். நதியில் விளையாடி கரையில் இளைப்பாறிய நமது முன்னோர்கள். ஆறுகளை வணங்கினர். அதைவிடவும், பாதுகாத்தனர்; பராமரித்தனர். நாமும் களத்தில் இறங்கி, நம் ஆறுகளைக் காப்போம். இந்த உளமார்ந்த உறுதிமொழியுடன், 'ஆற்றில் இறங்குவோம்'.

எங்கிருந்து தொடங்கலாம்...?
'அலக்நந்தா'!

- (தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்டப் புத்தகங்களை
எழுதியவர்.

FOLLOW US

WRITE A COMMENT

x