கிங் விஸ்வா
பாட்டி ஒருவர் புதிய நகரத்திற்கு வருகிறார். ஒரு நாள் முழுவதும் தேடியும் அவருக்கு தங்குவதற்கு வீடு கிடைக்காததால், சோர்வடைந்து ஒரு இடத்தில் உட்காருகிறார். தன்னுடைய பையிலிருந்து ஊசியையும், நூல்கண்டையும் எடுத்து அழகான ஒரு செருப்பைப் பின்னுகிறார். பின்னர், செருப்பை வைக்க, மிதியடி, மிதியடியை வைக்க, பாயையும் பின்னுகிறார்.
அதைப்போலவே, படுக்க கட்டில், விரிப்பு, தலையணை என பின்னி, அதற்குப் பிறகு வீடு ஒன்றையும் பின்னி அதில் உறங்குகிறார். உறவுகள் இல்லாமல், வீடு இல்லை என்று உணர்ந்து, தனக்காக ஒரு பேரன், பேத்தியைப் பின்னி உருவாக்குகிறார்.
அவர்கள் வீடு முழுவதும் ஓடியாடி விளையாட, பாட்டி மகிழ்கிறார். மறுநாள் அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறார். ஆனால், கம்பளி நூலால் பின்னப்பட்ட குழந்தைகளுக்குப் பள்ளியில் இடமில்லை என்று திருப்பி அனுப்பிவிட, அவர் நேரில் வந்து நியாயம் கேட்கிறார்.
பள்ளி நிர்வாகம் மறுக்க, ஒரு காரை பின்னி, அதில் ஏறிமாநகர் மன்றத்துக்கு வருகிறார். ஆனால், அவர்களும் மறுக்க, ஒரு ஹெலிகாப்டரைப் பின்னி, அதில் ஏறி குடியரசுத் தலைவரிடம் சென்று விசாரிக்கிறார். அவரும் மறுத்து விடுகிறார்.
ஆனால், அதற்குள் மாநகர் மன்றத்தினர் பாட்டியின் பின்னல் வீட்டையும், பேரன் பேத்தி
யையும் காட்சிப் பொருளாக்க நினைத்து, அதைச் சுற்றி இரும்பு வேலிகளை அமைத்தார்கள். திரும்பி வந்த பாட்டி, இதைக்கண்டு சினம் கொண்டு, நூலின் ஒரு முனையைப் பிடித்து இழுத்து, வீட்டையும் சிறுவர்களையும் மறுபடியும் நூலாகப் பிரித்து எடுத்து, வேறொரு ஊருக்குப் போகிறார்.
கதை சொல்லும் சேதி! இந்தக் கதையின் மிக முக்கியமான பேசு பொருள் ‘Prejudice’ எனப்படும் முன்முடிவுகளுடன் செயல்படுவதுதான். சில நேரம், நம்மை அறியாமலேயே நாம் சில விஷயங்களைப் பற்றிய முன்முடிவுடன் செயல்படுவோம்.
இந்தக்கதையிலும் கூட பள்ளி நிர்வாகம், மாநகர் மன்றத்தினர், குடியரசுத் தலைவர் ஆகிய அனை
வருமே கம்பளியால் பின்னப்பட்டவர்களுக்கு பள்ளியில் இடமில்லை என்று ஒரு முன்முடிவை எடுத்து, அதன்படி செயல்படுகின்றனர்.
குழந்தைகள் கம்பளியால் ஆனவர்கள், அதனால் அவர்களால் படிக்க முடியாது என்று மட்டுமே பார்க்கும் அவர்கள், பாட்டியின் கம்பளி வீடு, நூலால் பின்னப்பட்ட கார், ஹெலிகாப்டர் போன்றவை செயல்படுவதை பார்க்கவே இல்லை. அதனாலேயே அந்த நகரம் பாட்டியை இழக்கிறது. எனவே, அடுத்த முறை ஒரு வாய்ப்பு வரும்போது, நாம் முன்முடிவுடன் செயல்படக் கூடாது என்பதையே இக்கதை உணர்த்துகிறது.
- கட்டுரையாளர்:
காமிக்ஸ் ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்
WRITE A COMMENT