முனைவர் என்.மாதவன்
வாழ்க்கை தினம் தினம் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறது. பலரும் அதைக் கவனிப்பதில்லை. பாடம் என்ற சொல்லாடல் வகுப்பறைகளில் திணிக்கப்படுவதால் இது குறித்துப் பலரும் யோசிப்பதில்லை. வாழ்க்கையில் ஒரு நிலையை அடையத் தேவைப்படும் பாடங்கள் மனனம் செய்யப்பட்டு தேர்வறையை அடைகின்றன. தேர்வுக்குப் பிறகு கட்டாய மறத்தலுக்கும் ஆளாகின்றன.
கனா காலம்!
படிப்பை முடித்து ஏதோ ஒரு பணியில் சேர்ந்து வாழ்க்கைச் சக்கரம் ஓடத் தொடங்குகின்றது. தானும் தன்னுடைய குடும்பமும் சவுகரியமாக வாழத் தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்பது மட்டுமே இலக்காக மாறிப்போய்விடுகிறது. இப்படி வாழும் வாழ்க்கையில் நாட்டை பற்றிய நினைப்பேது! சமூகத்தை பற்றிய கவலை ஏது!
ஆகையால் பள்ளி நாட்களில்தான் நம்மை நாமே செதுக்கிக்கொள்ள முடியும். ஏனென்றால் இந்த பருவத்தில் குடும்ப பாரம் கிடையாது.
பிடித்ததை படிக்கலாம், கனவு காணலாம். அதேநேரம் இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும் நெருக்கடிகளை பேசியாக வேண்டும். நுழைவுத் தேர்வு எனும் அச்சுறுத்தல் ஆரம்பப் பள்ளி மாணவர்களின் தேர்வறைகளைகூட பயமுறுத்தத் தொடங்கிவிட்டது. இப்படியான சூழலில் வாழ ஒரு விதமான சிறப்புப் பயிற்சி தேவைப்படுகிறது.
அருமையான ஆசான்கள்!
பண்டைய காலம் தொட்டே வாழ்ந்த பல தலைவர்கள் சில செய்திகளை உலகிற்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவை காலந்தோறும் வரலாற்றில் பதியப்பட்டுக் கொண்டு வந்திருக்கின்றது. அப்படிப்பட்ட செய்திகளால் அவர்கள் பெருமை உயர்கின்றதோ இல்லையோ நமக்குப் பாடங்கள் கிடைக்கின்றன. இதையே மற்றொரு கோணத்தில் வாழ்வியல் திறன்களாகப் புரிந்துகொள்ளலாம்.
அறிஞர்கள் பலரது வாழ்க்கைச் சம்பவங்கள், அவர்கள் முன்வைத்த கோட்பாடுளில் வெளிப்படும் வாழ்வியல் திறன்கள் அளப்பரிய ஆற்றலை அளிப்பவை. பலரும் நினைப்பதுபோல் நாம் எடுத்துக்காட்டாகக் கொள்ளும் எந்தத் தலைவர்களும் தம் வாழ்நாள் முழுவதும் மிகச்சரியாகவே நடந்து கொண்டவர்கள் அல்லர். பொறுமை, பரிவு, வாய்மை, பேரன்பு உள்ளிட்ட குணங்களுடன் வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்விலும் எதிர்மறை நிகழ்வுகள் உண்டு.
ஆனால், ஒட்டுமொத்த வாழ்க்கையில் அவர்கள் மற்றவர்களை விடச் சரியாக நடந்துகொண்டுள்ளனர். மனித உறவுகளை மிகச் சரியாகப் பேணி இருக்கின்றனர். இதனாலேதான் தலைவர்களாக உயர்ந்துள்ளனர். இப்படி பல்வேறு தலைவர்களின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்வுகள் நமக்குப் பல பாடங்களைப் போதிக்கின்றன. அவற்றில் இருந்து பாடங்கள் கற்போம். இன்றைய வாழ்க்கைச் சூழலுக்குப் பொருத்தி பார்ப்போம் வாருங்கள் மாணவர்களே!
- கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு அறிவியல்
WRITE A COMMENT