ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று பல்வேறு துறைகளில் சாதித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருக்கொலை, சிசுக் கொலையில் தொடங்கி குழந்தைத் திருமணம், வரதட்சிணை கொடுமை, கணவருடன் உடன்கட்டை ஏறுதல் போன்ற பல அபாயங்களை வரலாற்றில் கடந்துதான் பெண் இன்றைய நிலையை அடைந்திருக்கிறாள் என்பதை மறந்துவிடக்கூடாது.
சொல்லப்போனால் இன்றும் நம்முடைய சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ள நேரிடும் சவால்களைக் காட்டிலும் அதிகமான சவால்களைப் பெண்கள் எதிர்கொள்ளும் சூழல் நிலவுகிறது. ஏனென்றால் கல்வி பெறுவது, சத்தான உணவு சாப்பிடக் கிடைப்பது, மருத்துவ வசதிக்கான சூழல், சொத்து உரிமை கோருவது என ஒவ்வொன்றுக்கும் உலகின் ஏதோ ஒரு மூலையில் இந்த நொடிப்பொழுதிலும் பல பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
உரிமை நிறைவேற
இத்தகைய அநீதிகளை வென்றெடுத்து பெண்கள் நிமிர்ந்தெழ வேண்டும் என்பதற்காக 2012-ம் ஆண்டு அக்டோபர் 11-ஐ சர்வதேச பெண் குழந்தை நாளாக ஐ.நா. அறிவித்தது. இந்த நாள், உலகப் பெண் குழந்தைகளின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கவனம் செலுத்துவதற்கானது. பெண் குழந்தைகளுக்கு அதிகார
மளித்தல் மற்றும் அடிப்படை மனித உரிமைகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றுக்கான பணிகளுக்கும் இந்த நாள் பயன்படுத்தப்படுகிறது. 2019-ம் ஆண்டுக்கான கருப்பொருள், ‘பெண் சக்தி:எழுதப்படாதது நிறுத்தப்பட முடியாதது’ (Girl Force:Unscripted and Unstoppable). இந்த நாளில் பெண்களால், பெண்களுடன் மற்றும் பெண்களுக்காக நிகழ்த்தப்பட்ட சாதனைகள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து வந்த பாதை
சர்வதேச பெண் குழந்தை நாளுக்கான முதல் முயற்சி 1995-ல் சீனாவில் தொடங்கியது. சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ‘பெண்கள் உலக மாநாட்டில்’ பங்கேற்ற நாடுகள் அனைத்தும் உறுதிமொழி எடுத்தன. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த மாநாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து மட்டுமின்றி சிறுமிகளின் உரிமைகள் குறித்தும் பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அன்றுதான் சிறுமிகளுக்காக வரையறுக்கப்பட்ட முதல் பிரகடனம் கையெழுத்திடப்பட்டது. இதை அடுத்து, ஐ.நா.சபை சர்வதேச பெண் குழந்தை நாளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.
உலகம் முழுவதும் உள்ள சிறுமிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டு வருவதே இதன் நோக்கம். இப்படியாக, ‘குழந்தைத் திருமணத்துக்கு முடிவு கட்டுவோம்’ என்ற கருத்தாக்கத்தில் முதல் சர்வதேசப் பெண் குழந்தை நாள் 11 அக்டோபர் 2012-ல் அனுசரிக்கப்பட்டது. ஏற்கெனவே பெண் கல்வியில் முன்னோடியான இந்திய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.
அதிலும் ஐ.நா.வின் இந்த முன்னெடுப்புக்குப் பிறகு இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளும் பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் வளர்ச்சிக்காகவும் பல திட்டங்களை முன்னெடுத்துவருகின்றன. அன்பு மாணவர்களே, மாணவிகளே இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரமும் உரிமையும் பலரின் இடைவிடாத முயற்சியால், போராட்டத்தால் கிடைத்தது என்பதை இப்போது உணர்ந்திருப்பீர்கள்.
- ம. சுசித்ரா
WRITE A COMMENT