மாணவ மனம் - 1: திடீரென படிப்பில் சறுக்குவது ஏன்?


மாணவ மனம் - 1: திடீரென படிப்பில் சறுக்குவது ஏன்?

பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அவர்களின் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது. ஏனென்றால், சிறுவயதினரைக் காட்டிலும் விடலைப் பருவத்தில் இருப்பவர்களின் மூளையின் வளர்ச்சி வித்தியாசமானது.

அப்போது மூளையில் நடைபெறும் சிக்கலான மாற்றங்கள் அப்பருவத்தினரின நடத்தை, கற்றல் திறன், உறவுகளை அவர்கள் அணுகுமுறை மீது பெரிதும் தாக்கம் செலுத்துகிறது. ஆகவேதான் எவ்வளவு தான் முயன்றாலும் 13 வயதில் இருந்து 19 வயதுவரை உள்ள குழந்தைகளை வளர்ப்பது சவாலாக உள்ளது.

தீர்வே சிக்கல்

இங்கு பெற்றோர், ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களில் முதன்மையானது, அதுவரை நன்றாக படித்துக்கொண்டிருந்த குழந்தைகள்கூட திடீரென படிப்பில் சறுக்கு வார்கள். இதற்கு தீர்வு காண, அவர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்குவது, மொபைல்போன், தொலைக்காட்சி ஆகியவற்றுக்குத் தடை விதிப்பது, நண்பர்கள் சகவாசத்தைத் துண்டிப்பது, தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவது போன்ற ஏகப்பட்ட நடவடிக்கைகளை பெரியவர்கள் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் பதின்பருவத்தினரின் சிக்கலை மென்மேலும் தீவிரப்படுத்த மட்டுமே செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்களால் உதவ முடியும்

பதின்பருவத்தினரிடம் வெளிப்படும் திடீர் மாற்றத்துக்குக் காரணங்கள் பல. அது ஹார்மோன்களில் நிகழும் ஏற்ற இறக்கத்தினால் இருக்கலாம் அல்லது அவர்கள் மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியை காட்டிலும் உணர்வுப் பகுதி மேலோங்கத் தொடங்குவதால் இருக்கலாம் அல்லது உற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகக் காரணிகள் ஏற்படுத்தும் தாக்கத்தினாலும் இருக்கலாம்.

ஆக, பெற்றோர், ஆசிரியர் என்ற முறையில் பதின்பருவ குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய உதவிகள் இவை:

1. பதின்பருவ குழந்தைகளுக்கு வாரத்துக்கு 200-லிருந்து 350 நிமிடங்கள் வரை உடல்ரீதியான செயல்பாடுகள் அவசியம். அது விளையாடுவதாக இருக்கலாம் அல்லது உடற்பயிற்சி செய்வதாக இருக்கலாம். இந்த வயதினரின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை ஒழுங்குபடுத்தவும் உணர்வுகளை சீர்படுத்தவும் இது கைகொடுக்கும்.
2. போதுமான உறக்கமும் சரிவிகித உணவு பழக்கமும் கற்றலுக்கு பெரிதும் உதவுபவை.
3. படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் நேரத்தையும் அவர்களுடைய நண்பர்களுடன் செலவழிக்கவும் கொடுக்க அனுமதிக்க வேண்டும். நண்பர்களோடு எவ்வளவு நேரம் செலவிடலாம், அப்போது என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்த உங்களுடைய எதிர்பார்ப்பை குழந்தைக்கு உணர்த்துங்கள்.
4. படிப்பில் எதிர்பாராத சரிவு ஏற்படும் போது அவர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொள்ளுங்கள். அவர்களுடைய பிரச்சினைக்கு நீங்கள் தீர்வு சொல்ல வேண்டாம். அதை குழந்தைகளே கண்டறிவதற்கான சூழலை மட்டும் ஏற்படுத்திக்கொடுங்கள்.
5. பிறரோடு ஒப்பிடாமல் அவர்களுடைய செயல்பாடுகள் குறித்த உங்களுடைய பின்னூட்டத்தை வெளிப்படுத்துங்கள். நேர்மறை, எதிர்மறை ஆகிய இரண்டு விதமான கருத்துகளையும் பொறுமையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6. பெற்றோராகிய நீங்கள், உங்கள் குழந்தை, ஆசிரியர் ஆகிய மூவரும் இணைந்தகுழுவாக செயல்படுங்கள். ஆசிரியரின் கருத்துக்களைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள், அதே நேரத்தில் குழந்தையின் உணர்வுக்கு கூடுதல் செவி கொடுங்கள்.

- ஆர்த்தி சி. ராஜரத்தினம்

கட்டுரையாளர், பதின்பருவத்தி
னருக்கான மனநல ஆலோசகர்

FOLLOW US

WRITE A COMMENT

x