இந்தியாவில் விளையாட்டுகளின் கதை 


இந்தியாவில் விளையாட்டுகளின் கதை 

பள்ளிப்பருவத்தை உற்சாகமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருக்கும் விஷயங்களில் ஒன்று விளையாட்டு. குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு படிப்பு எப்படி முக்கியமோ, அதேபோல் உடல் வளர்ச்சிக்கு விளையாட்டும் அவசியம். அதனால்தான், “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று படிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பாடிய பாரதியார், அடுத்த சில வரிகளிலேயே, “மாலை முழுதும் விளையாட்டு” என்று விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி அழுத்திச் சொல்கிறார்.

முன்பெல்லாம் மாலை நேரங்களில் ஒவ்வொரு தெருவைக் கடக்கும்போதும் கிரிக்கெட், பேட்மிண்டன், கண்ணாமூச்சி என்று உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் கூக்குரல்களைக் கேட்க முடியும். இந்த கூக்குரல்களில் உள்ள மகிழ்ச்சி, மற்றவர்களையும் விளையாடத் தூண்டும். ஆனால் இப்போது அந்தக் காலம் மாறிவிட்டது. நீங்கள் யாராவது மாலையில் வீட்டுக்கு வெளியில் சென்று அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள குழந்தைகளுடன் விளையாடுகிறீர்களா?

வீட்டில் உள்ள பெரியவர்கள் விளையாட அனுமதித்தாலும், பலரும் வெளியில் சென்று விளையாடுவதில்லை. இப்போதெல்லாம் விளையாட்டு என்றாலே உங்களில் பலருக்கு ‘பப்ஜி’ போன்ற செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடும் ஆட்டங்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

உங்களின் பெற்றோரும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. “அவனால ஒரு தொந்தரவும் இல்லை. ஸ்கூல்ல இருந்து வந்தா, தான் உண்டு கம்ப்யூட்டர் உண்டுன்னு இருப்பான். யார் வம்புக்கும் போக மாட்டான்” என்று இதைப் பற்றி பெருமையாக சொல்லும் பெற்றோர்களும் உண்டு.

ஆனால் இதெல்லாம் உங்கள் உடல்நலனுக்கு நல்லதா என்றால் நிச்சயம் இல்லை. நீங்கள் நன்றாக இருக்க வேண்டுமானால் முதலில் உங்கள் உடல் வலுவானதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டுகள் மூலம் உடலை வலுவாக வைத்திருக்கும் அதே நேரத்தில், அந்த விளையாட்டுகளின் வரலாற்றையும், அது இந்தியாவில் வளர்ந்த விதத்தையும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு உங்களுக்கு உதவுவதற்காகவே இந்த பகுதி. உங்களில் பெரும்பாலானவர்களுக்கு பிடித்த விளையாட்டான கிரிக்கெட்டில் இருந்து அடுத்த திங்கள்கிழமை முதல் இதைத் தொடங்குவோம்.

FOLLOW US

WRITE A COMMENT

x