சுலபத்தவணையில் சிங்காசனம்-1: வா வியோமனாட் வா!


சுலபத்தவணையில் சிங்காசனம்-1: வா வியோமனாட் வா!

ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் கேட்டேன்.
‘நீ எதிர்காலத்தில் யாராக விரும்புகிறாய்?’
யோசிக்காமல் பதில் சொன்னாள், ‘ஐ.நா சபையின் பொதுச் செயலாளர்!’

ஆச்சரியமாக இருந்தது. இந்த வயதில் எவ்வளவு உயர்ந்த உலகளாவிய கனவு?
‘ஐ.நா. பொதுச்செயலாளராக என்ன படிக்க வேண்டும் தெரியுமா?’
உதட்டை பிதுக்கினாள். அவளுக்கு தெரியவில்லை.

இதைப்போல உங்களுக்கு எதிர்கால கனவுகள் பல இருக்கின்றன. அவற்றிலும் ஒரு குறிப்பிட்ட கனவு ஓயாமல் உங்கள் உறக்கம் கலைக்கிறது. ஆனால், அந்த கனவை எப்படி அடைவது என்ற வழியும் வழிகாட்டுதலும் இல்லை. எப்படி கனவை மெய்ப்படுத்துவது?
ஒவ்வொரு வாரமும் ஒரு கனவை அலசி, அதை அடையும் வழிகளை தெளிவாக்கும் முயற்சியே ‘சுலபத்தவணையில் சிங்காசனம்’.

உள்ளுக்குள் உழல்கின்ற - உன்
கற்பனைகள் உயிர் பெறுக!
சொல்லுக்கு சிக்காத – உன்
சொப்பனங்கள் மெய்ப்படுக!
பல கனவுகளோடு நான் ஒரு போர் விமான பொறியாளனாக, இந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தபோது எனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அங்கு போர் விமானங்களை சோதனை செய்யும் தலைமை விமானியாக இருந்தவர் ராகேஷ் சர்மா. ஆம். விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர்!

விண்வெளி வீரர் ஆகும் கனவு உங்களுக்கு இருக்கக்கூடும். விண்வெளி வீரராக என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவில் விண்வெளி பயணத்துக்கு விமானப்படை விமானிகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். ராகேஷ் சர்மாவும் இந்திய விமானப்படை
விமானியாக இருந்து, விண்வெளி வீரராக தேர்வானவர்தான். இஸ்ரோ 2021-ல் செலுத்த இருக்கும் ககன்யான், மூன்று இந்திய விண்வெளி வீரர்களை சுமந்து பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் 7 நாட்கள் சுற்றுப்பாதையில் சுற்றிய பிறகு பாராசூட் உதவியுடன் கடலில் இறங்கும்.

இந்திய விண்வெளி வீரர்கள் வியோமனாட் (Vyomanaut) என்று குறிப்பிடப்படுகிறார்கள். வியோம என்ற சமஸ்கிருத சொல்லுக்கு வானம் என்று அர்த்தம். இந்திய விமானப்படையின் விமா னிகளில் தேர்வாகும் விமானிகளே ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். தேர்வாகும் வீரர்களுக்கு பல கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.

அமெரிக்காவின் நாசாவில் போர் விமானிகள் மட்டுமின்றி பொறியியல், உயிரியல், இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் இவற்றில் பட்டம்
பெற்று மூன்றாண்டு வேலை அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பித்து விண்வெளி வீரராக தேர்வாகலாம். தேர்வானவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள்.

புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில் இயங்குவதற்கான பயிற்சியிலிருந்து நீச்சல் பயிற்சிவரை விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்படும். கூடவே
விண்கலத்தை இயக்குவதற்கான பயிற்சியும், விண்வெளியில் செய்ய வேண்டிய அறிவியல் பரிசோதனைகளுக்கான பயிற்சியும் வழங்கப்படும்.
வியோமனாட் ஆக, விமானப்படை விமானியாக இருப்பது கட்டாயமெனில், எப்படி போர் விமானியாவது?

- கட்டுரையாளர், ‘ஏவுகணையும் கொசுக்கடியும்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

FOLLOW US

WRITE A COMMENT

x