Published : 11 Nov 2025 07:36 AM
Last Updated : 11 Nov 2025 07:36 AM
சுதந்திரத்தைக் கையாலாகாத்தனம் என்றே பலர் புரிந்து வைத்திருந்தனர். மாணவர்களுக்குச் சுதந்திரம் தர தைரியம் வேண்டும் என்பது சமுத்திரத்தின் எண்ணம். ஆசிரியர்கள் பலருக்கு இந்தத் தைரியம் இல்லை. தண்டித்தால்தான் பிள்ளைகள் சரியாக வருவார்கள் என்பது பள்ளியில் ஊறிப்போன மிகமிகப் பழைய நம்பிக்கை. வகுப்பறையில் பிள்ளைகளைப் பேசவைப்பது சுதந்திரத்தின் முதல் அடையாளம் என்பது சமுத்திரத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
சமுத்திரம் தமிழ் ஆசிரியர். ஒரு நாள் - பாடம் வேண்டாம் எனப் பிள்ளைகள் குரல் எழுப்பினர். சரி! வேண்டாம்! என்று சொல்லிப் புத்தகத்தை மூடினார் சமுத்திரம். “என்ன செய்யலாம்?” - சற்று நேரம் வகுப்பில் மௌனம். “சினிமா பத்திப் பேசலாமா?” என்று கேட்டான் செந்தில். “ஓ!” என்றார் சமுத்திரம் சிரித்தபடி. தான் சமீபத்தில் பார்த்த சினிமா பற்றி செந்தில் பேசினான். அவனைத் தொடர்ந்து இருவர் சினிமா பற்றிப் பேசினர். ஒருவர் போன பாதையில்தான் பலரும் நடக்கின்றனர்.
மாணவர்கள் பேசட்டும்: ரம்யா பாதையை மாற்றினாள். ‘குடும்பத்தின் வதைகள்’ பற்றிப் பேசினாள். பலரைக் கண்கலங்க வைத்த உரை. சமுத்திரமும் கண்கலங்கினார். “அக்காள் நினைப்பு வந்துச்சு! பேசினேன்” என்றாள். ரம்யா பேச்சுக்குப் பலர் கைதட்டல் சத்தம் கேட்டுத் தலைமை ஆசிரியரும் வகுப்பறைக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவர்களிடம் உற்சாகம் கொடிகட்டிப் பறந்தது. அடுத்துப் பேச வந்தவர்கள் சமூகப் பிரச்சினைகளை முன்வைத்துப் பேசினர். மணி அடித்தபோது மாணவர் பலருக்கு ஏமாற்றம்.
“பொதுவாக நாம் பேசுவோம். மாணவர்கள் கேட்பார்கள். இங்கு மாணவர்கள் பேசுவது அருமையான ஏற்பாடு” என்று நெகிழ்ந்து பாராட்டினார் தலைமை ஆசிரியர். ரிசல்ட் மனிதரையும் ‘சுதந்திரம்’ நெகிழ வைத்துவிட்டதே என ஆச்சரியம் கொண்டார் சமுத்திரம். சுதந்திர வகுப்பறையின் அடுத்த கட்டம் என்ன என்பது குறித்துத்தான் அவர் இப்போது ஓயாமல் யோசிக்கிறார். யோசிக்கட்டும்!
கேள்வியே பதில்: ‘தலையிடுவது’தான் அன்பு என்று சமூகமே கருதுகிறது. சங்கர் மட்டும் விதிவிலக்கா? தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார் சங்கர். அவர் மனைவி விமலா ஆங்கில நாளிதழ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு செல்லப் பெண்குழந்தை. சங்கர் அவர் உண்டு; அவர் வேலை உண்டு என்றிருப்பவர். விமலாவின் வேலை சமூகம் சார்ந்தது. அடிக்கடி வீட்டைத் தாண்ட வேண்டி இருக்கும். தாண்டுவார்.
அது சங்கருக்குப் பொறுக்கவில்லை. அடிக்கடி தலையிடுவார். கொஞ்சம் சாப்பாடு சரியில்லை என்றாலும், “முதல்ல வீட்டைக் கவனிம்மா! சமூகத்தை அப்புறம் பாக்கலாம்” என்பார்.
அரசு அதிகாரத்தை எதிர்த்துப் பத்திரிகையில் தான் எழுதிய கட்டுரையைக் கணவரிடம் விமலா ஆசைஆசையாகக் காட்டினார். கணவர் பாராட்டவில்லை. தலையிட்டார். “இது மாதிரிக் கட்டுரை எல்லாம் நீ எழுதக் கூடாது; நமக்கெதுக்கு வம்பு” என்றார். பயந்தவர்களே அதிகம் தலையிடுகிறார்கள் என்பதற்கு சங்கர் ஓர் உதாரணம்.
விமலாவின் எழுத்துக்கு ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர். அவர்களில் ஒருவன் ரகு. பக்கத்து ஊர்ப் பையன். அடிக்கடி பாராட்டினான். ஒரு நாள் வீட்டுக்கு வந்தான். விமலா அந்த ரசிகனை வரவேற்றாள். இருவரும் பேசியதெல்லாம் சமூகப் பிரச்சினைகளே. சங்கர் பேச்சில் கலந்து கொள்ளவில்லை. அவன் போனதும், “ஆளைப் பாத்தா நல்லவனாத் தெரியலையே!” என்றார் சங்கர். விமலாவுக்குச் சுருக் என்றது. விமலாவின் முகம் வாடியது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. மாலைவரை விமலா எதுவும் சாப்பிடவில்லை. ஏதோ யோசனையில் இருந்தாள். சங்கர் பேசப் பயந்தார். தவறு தன்னுடைய தலையீடு என்பது தெரிந்தது. அவர் அருகே வந்ததும், “நான் வேலை பார்க்கவா? வேலையை விட்றவா?” என்று கேட்டார் விமலா. சூடான கேள்வி! சில நேரம் கேள்விகளே பிரச்சினைகளை முடித்து வைக்கின்றன. சங்கர் சிரித்தபடி சொன்னார்: “வேலை பாரும்மா! இனி உன் வேலை விசயத்தில் நான் தலையிடவே மாட்டேன்”என்றார். விமலாவும் சிரித்தார். அன்பு மயமான இந்தக் குடும்பக் காட்சியைக் கைதட்டி வரவேற்றது ஐந்து வயதுப் பெண்குழந்தை.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT