Published : 04 Nov 2025 07:45 AM
Last Updated : 04 Nov 2025 07:45 AM
முதலில் கண்ணில் படுவது தோற்றம்தான். தோற் றமே வசீகரிக்கிறது. உள்ளடக்கம் தெரிவது பின்னால் தான். ரஞ்சனா, அந்தப் பள்ளியில் புதிதாகச் சேர்ந்த 8ஆம் வகுப்பு ஆங்கில ஆசிரியர். அவர் வகுப்புக்கு வந்ததும், மாணவர் சிலருக்குச் சிரிப்பு வந்தது. ரஞ்சனா படு குட்டை. அந்த வகுப்பி லேயே குட்டையான மாணவனான மணிவண்ணனின் உயரத்தில்தான் ரஞ்சனாவும் இருந்தார். மாணவர் சிரிப்பைப் பொருட்படுத் தாமல் பாடத்தைத் தொடங்கினார்.
நைட்டிங்கேல் பறவைக்கு ஒரு பாராட்டு, ‘Ode to a Nightingale’. “கேட்கப் பட்ட இசைக்குறிப்புகள் இனியவை. கேட்கப்படாதவை மிக இனியவை” (Heard melodies are sweet: but those unheard are sweeter) என்கிற ஜான் கீட்சின் புகழ் மிக்க பாடல் வரிகளுடன் பாடத்தைத் தொடங்கினார் ரஞ்சனா. பற்றிப் பிணிக்கும் குரல். கேட்கப்படாத இசைக்குறிப்புகளாய் கிராமப்புற மாணவர்கள் நிறைந்த வகுப்பு அது. வகுப்பறையின் சிரிப்பு மறைந்தது.
வகுப்பறை விரும்பிய வருகை: கீட்ஸ் அதிகம் வற்புறுத்திய எதிர் மறைத் திறன் (Negative Capability) பற்றிச் சுவையான உதாரணங்களுடன் விளக்கினார் ரஞ்சனா. எதிர்மறைகளைச் சந்தித்த வண்ணம் இருக்கும் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதாக இருந்தது அவரது பேச்சு. கீட்ஸ் 25 வயதில் இறந்த செய்தியை உருக்கமாக விளக்கியபோது வகுப்பறையின் கண் கலங்கியது, குறிப்பாக மாணவியர்க்கு.
பாடலின் முதல் வரியான “என் உள்ளம் நோகிறது” (My heart aches…) என்பதைச் சொல்கையில் ரஞ்சனாவுக்கே தொண்டை கரகரத்தது. அவரது வருகையை வகுப்பறை பெரிதும் விரும்பியது. ரஞ்சனாவுடன் பேசும்போது பல படிகள் மேலே ஏறிய உத்வேகம் மாணவர்களுக்குக் கிடைத்தது. வீடுகளில் உற்சாக வார்த்தைகளைக் கேட்காத பிள்ளைகளுக்கு, இது புத்தம் புது அனுபவம்.
வந்த ஒரு மாதத்துக்குள், ஐந்து மாணவியரின் படிப்புச் செலவை ரஞ்சனா ஏற்றுக்கொண்டார் எனத் தெரியவந்ததும், அவர் மீது மாணவர்கள் கொண்டிருந்த மதிப்பு பன்மடங்கு கூடியது. எந்த நேரமும் ரஞ்சனாவைச் சுற்றி ஒரு கூட்டம், ஒருமுறை தன் கணவரோடு ரஞ்சனா வந்திருந்தார்.
எப்படியும் அவர் ஆறரை அடி உயரம் இருப்பார். பக்கத்தில் சிறு பிள்ளைபோல் ரஞ்சனா. தோற்றம்தான் முதலில் கண்ணுக்குத் தெரிகிறது. ‘அடேயப்பா! எவ்வளவு உயரம்’ என்று பார்த்தவர்கள் வியந்தனர். ‘கணவர் எந்த வேலையிலும் ஒட்டாமல் மனைவி சம்பாத்தியத்தை ருசித்தபடி வீட்டில் வெறுமனே இருக்கும் ரகசியம்’ ரஞ்சனாவுக்கு மட்டும் தெரிந்த உண்மை!
உறுதுணை: பக்கத்தில் இருந்த பூங்காவுக்கு நடைப் பயிற்சிக்குப்போவது பாண்டிய னின் வழக்கம். பூங்காவில் சிதறிக்கிடந்த கண்ணாடித் துண்டுகளை ஒருவர் பொறுக்கிக் கொண்டிருந்தார். அடடே! பாபு! பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்க்கிறார். அவரைப் பாண்டியனுக்கும் தெரியும். “என்ன பாபு இங்கே!” என்றார் பாண்டியன்.
“வயசானவர் ஒருத்தர் நடக்கணும்னு சொன்னார். அவரைக் கூட்டி வந்தேன். அந்தா அவர்தான்” என்றார் பாபு. வயதானவர் ஒருத்தர்- வயது எப்படியும் எண்பதை நெருங்கி இருக்கும்- கம்பு ஊன்றி பூங்காவில் உருவாக்கப்பட்டு இருந்த நடைபாதையில் மெல்லமெல்ல நடந்துவந்தார். வயதானவர்களுக்குத் துணை வேண்டும். அவருக்குத் துணையாக பாபு வந்திருக்கிறார். வயதானவர் நடந்து முடித்ததும், பாபு பத்திரமாகக் கூட்டிப் போவார். அதன் பிறகே வேலைக்குப் போவார்.
வயதானவர்கள் பலருக்கும் துணை யானவர் பாபு. எங்கே போவதென்றாலும் பாபுவைத்தான் தேடுவார்கள். வயதானவர்களோடு சேர்ந்து கிடக்கிறது மரணம். அவர்களை இந்த உலகத்தோடு சேர்த்து வைத்திருப்பவர் பாபு. சந்திக்கும் போதெல்லாம் பாண்டியன் மறக்காமல் கேட்பார்: ‘உங்க கல்யாணம் எப்ப?’ பாபுவுக்கு வயது நாற்பதை நெருங்குகிறது. பாபு எப்போதும் சொல்லும் பதில்தான்: “என்னை யார் சார் கட்டிக்குவா? கல்யாணத்துக்கு ஏத்த உருவமா என் உருவம்?”கறுப்பு நிறம்; எத்துப் பல்லு - பாபுவின் சில அடையாளங்கள்.
அவரின் சில அடையாளங்களே அவரைத் திருமணத்தில் இருந்தும், வீட்டில் இருந்தும் பிரித்து, சமூகத்தோடு குறிப்பாகச் சமூகத்தின் வயதான மனிதர்களோடு பிணைத்துவிட்டது. பாபு ஓர் ஆச்சரியம்தான். நடைப்பயிற்சி முடிந்ததும் பெரியவர், “பாபூ! பாபூ!” என்று கூப்பிட்டார்.
பாபு ஓடினார். ஆறுதலாகப் பெரியவர் கையைப் பிடித்தார். “பெரியவரை வீட்டில் விட்டுக் கொஞ்ச நேரம் பேசி விட்டு வேலைக்குப் போறேன்” என்று பாண்டியனிடம் சொல்லிவிட்டுப் போனார்பாபு. அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.
- கட்டுரையாளர்: மூத்த கல்வியாளர், எழுத்தாளர்; smadasamy1947@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT