Published : 14 Oct 2025 07:32 AM
Last Updated : 14 Oct 2025 07:32 AM
மாணவர்களின் பொருளாதார பின்னணி, அவர்களுடைய பெற்றோரின் சமூக அந்தஸ்து என்பதை எல்லாம் கடந்து முதலில் நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை நினைவுப்படுத்துவதாக வகுப்பறை இருக்க வேண்டும். - ஜாக் பெட்ராஷ்.
தென்னாப்பிரிக்காவில் அனைவருக்குமான பள்ளிகள் தொடங்கப்பட்டு கறுப்பினக் குழந்தைகளுக்கு அரசு விலையில்லா கல்வி வழங்கியபோதும், அவற்றில் இணைய கறுப்பின மக்கள் மறுத்தனர். பள்ளி செல்லாதவர்களிடம் அதற்கான காரணத்தை அன்றைய அதிபர் நெல்சன் மண்டேலா வினவினார்.
அரசியல் விடுதலை கிடைத்தாலும் தாங்கள் அடிமைகள் என நினைவூட்டும்படியாக அந்த வகுப்பறைகள் இருப்பதாக கறுப்பின குழந்தைகளிடமிருந்தும் பெற்றோரிடமிருந்தும் பதில் வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்குத் தீர்வு காணவே ‘வால்டார்ஃப்’ கல்வி முறையை நெல்சன் மண்டேலா அறிமுகம் செய்தார்.
குழந்தை சொல்லும் பாடம்: இதை விவாதப் பொருளாகக் கொண்டு வெளிவந்திருக்கும் நூல், ஜாக் பெட்ராஷ் எழுதிய ‘வால்டார்ஃப் கல்வி முறையைப் புரிந்துகொள்ளுதல்’ (Understanding Waldorf Education). குழந்தைகளை வெளியிலிருந்து உள்நோக்கி பொதுக்கல்வித் திட்டம் இயக்குகிறது. அவர்கள் என்னவாக உருவாக வேண்டும் என்பதைத் திணிப்பதற்காகவே கல்வி செயல்படுகிறது என நூலாசிரியர் குற்றம்சாட்டுகிறார்.

இதற்கு மாற்றாக, குழந்தையின் மனத்திலிருந்து வெளி உலகை நோக்கி செயல்படும் கல்வியே நமக்குத் தேவை. தான் என்ன ஆக வேண்டும் என்பதைக் குழந்தையே சுயமாக முடிவு செய்யும்படியாகக் கல்வி இருக்க வேண்டும் என்கிற அற்புத கருத்தை முன்மொழிகிறார். இந்த அடிப்படையில்தான் வால்டார்ஃப் கல்வி முறை செயல்படுகிறது.
ஆஸ்திரிய கல்வித் தத்துவ அறிஞர் ருடால்ஃப் ஸ்டெய்னர் 1919இல் உருவாக்கிய கல்விமுறை இது. அவர் பெயரில் இல்லாமல் வால்டார்ஃப் என அழைக்கப்படுவது ஏன்? ஜெர்மனியில் வால்டார்ஃப் எனும் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாகத் தொடங்கப்பட்டதால் இந்தப் பெயர் பெற்றது.
குழந்தையின் முழுமையான வளர்ச்சி, அறிவோடு மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல. உடல், மனம், சமூகம் நோக்கிய பார்வை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதே வளர்ச்சி என்றார் ருடால்ஃப் ஸ்டெய்னர். இந்தக் கல்விமுறையில் தேர்வு கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் இங்கே குழந்தைகளுக்கு இடையில் பாகுபாடு இல்லை.
‘H’ திட்டம்: ஆங்கில எழுத்து H அடிப்படையில் தலை (Head), இதயம் (Heart), கை (Hand) ஆகிய மூன்றும் இணைவு பெறுகின்ற முழுமையான பாடத்திட்டம் இவர்களுடையது. நடைமுறைத் திறன்களை வளர்க்கக்கூடிய இந்தக் கல்விமுறையில் பாடப்புத்தகங்கள் இரண்டாம்பட்சம்.
மனித வளர்ச்சியின் தனித்துவமான கட்டங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்றே வகுப்புகள்தான் உள்ளன. குழந்தைப்பருவம், நடுத்தரக் குழந்தைப்பருவம், இளமைப் பருவம் ஆகியவற்றுக்கான மூன்று வகுப்பறைகள்தான்.
“எல்லாரும் சேர்ந்து அல்ஜீப்ராவை படித்துவிட்டு உடனடியாக காலாண்டு தேர்வுக்குத் தயாராகுங்கள்” என்று இந்தக் கல்வி முறை கட்டளை இடுவதில்லை. மாறாக ஒருவர் ஆறு மாதத்தில் முடிக்கின்ற அல்ஜீப்ராவை, மற்றொருவர் பயில எட்டு மாதம்வரைகூட எடுத்துக்கொள்ளலாம் என்று அவரவர் வேகத்துக்கு ஏற்ப கற்பிக்கப்படுகிறது. கல்வி மட்டுமின்றி, வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் தானே உருவாக்கிக் கொள் கின்ற அற்புதத்தை இந்தக் கல்வி முறை முன்மொழிகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT