Published : 07 Oct 2025 07:41 AM
Last Updated : 07 Oct 2025 07:41 AM
ஒரு குழந்தை வளர்ந்து நாட்டின் குடிநபராக உருவாக எடுத்துக்கொள்ளும் அத்தனை நாள்களிலும் நிகழும் அனைத்து நிகழ்வுகளுமே கல்விதான். யோடோ கிடாமுரா உலகின் ஏனைய நாடுகளின் கல்வியோடு ஒப்பிடும்போது, தவிர்க்க முடியாத பேசு பொருளாக ஜப்பானிய கல்வி முறை உள்ளது.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கல்வியில் தனிப் பாதையை ஜப்பான் வகுத்திருக்கும் விதத்தை எடுத்துரைக்கிறது 'ஜப்பானின் கல்விமுறை' (‘Education in Japan’) கட்டுரைத் தொகுப்பு. ‘ஓசோஜி’ செய்யும் நேரம்! ஜப்பானியக் கல்வியில் உள்ள தனித்துவமான ஐந்து அடிப்படைக் கூறுகளை இந்நூல் எடுத்துரைக்கிறது. முதலாவது, தேர்வுகளுக்கு அப்பாற்பட்ட மனித நேய வளர்ச்சி.
தொடக்கக் கல்வியின் முதல் நான்கு ஆண்டுகள், நற்பண்புகள், மரியாதை, ஒற்றுமை, உதவிசெய்யும் மனப்பாங்கு ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு ஊட்டுவதில் தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தப் பருவத்தில் தாய்மொழி, தாய்நாடு, பிராந்தியம் குறித்துக் கற்பிக்கப்படுகிறது. அங்குள்ள மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையிலான தோழமை உணர்வு, வணக்கம் செலுத்தும் முறை போன்றவை அலாதியானவை.
இரண்டாவது, தூய்மைப்பணி கல்வியின் ஓர் அங்கம். பள்ளி களில் தனியாகத் தூய்மை பணியில் ஈடுபடும் ‘ஆயாம்மா’ கிடையாது. வகுப்பறை, கழிப்பிடம், பள்ளி வளாகத்தை மாணவர்கள் ஒன்றிணைந்து தூய்மைப்படுத்துகின்றனர். ‘ஓசோஜி’ என அழைக்கப் படும் தூய்மை நேரம் அன்றாடம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பணியைச் செய்வதில் மாணவர்களுக்கு இடையே எத்தகைய பாகுபாடும் கிடையாது.
மூன்றாவது, ஒழுக்கக் கல்வியைப் போதிக்கும் ‘தோத்தோகு’ நேரம். சக மனிதர்களிடம் பரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீதான அக்கறை, பெரியவர்களுக்கு மரியாதை அளித்தல், சாலை விதிகளைப் பின்பற்றுதல், பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளித்தல் போன்ற அடிப்படை நெறிமுறைகள் சொல்லிக் கொடுக்கப் படுகின்றன. “சாலையில் பணம் கிடந்தால் என்ன செய்வாய்? பேருந்தில் நீ அமர்ந்து பயணம் செய்யும்போது பெரியவர் யாரேனும் நின்று கொண்டிருந்தால் என்ன செய்வாய்?” என்பன போன்ற நூற்றுக்கணக்கான அறநெறி சார்ந்த தலைப்புகள் விவாதிக்கப்படுகின்றன.
மதிய உணவுத் திட்டம்: நான்காவது அற்புத அம்சம், அரசு, தனியார் என அனைத்து விதமான பள்ளிகளிலும் மதிய உணவு அளிக்கப்படுகிறது. அனைத்து குழந்தைகளும் பள்ளியில் தரப்படும் உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகள், அதற்கான பிரத்யேகக் காரணத்தைத் தெரிவித்தால் அரசாங்கம் கல்விக் கட்டணத்தில் குறிப்பிடும் படியான தொகையைச் செலுத்துகிறது. ஜப்பானில் தனியார் பள்ளி என்பது அரசாங்க உதவிபெற்று கல்வி கற்கும் முறை ஆகும்.
ஐந்தாவதாக, பாடப்புத்தகங் களைக் கடந்து விளையாட்டு, இசை, ஓவியம், பொம்மை செய்தல் போன்ற கலை அம்சங்களையும் உள்ளடக்கிய கல்விமுறையாக அது மலர்ந் துள்ளது. இவை ஒவ்வொன்றிலும் தொடக்கத்தில் இருந்து ஈடுபடுத்தப்படும் குழந்தைகள், 6ஆம் வகுப்பு வரும்போதே தங்களின் தனித்துவமான திறமையை அடையாளம் கண்டு, அதைத் தேர்வு செய்கிறார்கள்.
ஜப்பானியர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் எப்போதுமே மூன்று அல்லது நான்காம் இடம்பெறும் அளவுக்குப் பதக்கங்களை வென்றுவிடுவதற்கு இந்தக் கல்வி முறை முக்கிய காரணம். கொடிய அணுகுண்டு வெடிப்புகளினால் உருகுலைந்துபோன ஒரு தேசம், நோபல் பரிசுகள் பெறும் அறிஞர்களின் நாடாக ஒளிரவைப்பது அந்நாடு முன்னெடுத்து வரும் இந்த ஐந்த அம்ச கல்வி முறைதான்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT