Published : 02 Sep 2025 07:31 AM
Last Updated : 02 Sep 2025 07:31 AM
குழந்தை தன் பார்வையில் உலகைப் புரிந்துகொள்ளவும், அதில் தான் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளவும் கதைகள் உதவும். அதன் வழியே பிறப்பதுதான் உண்மையான கல்வி. - அம்பர் ஓ நீல் ஜான்ஸ்டன்.
சிறந்த கதைச்சொல்லியாக இருக்கும் ஆசிரியர், குழந்தைகளின் நேசத்துக்கு உரியவர் ஆகிறார். அதற்கெல்லாம் நேரமில்லை என்கின்றனர் பலர். “இந்தப் புத்தகத்தைப் படித்தால் 100 புத்தகங்களை வாசித்ததற்குச் சமம்” என்கிற வாசகத்துடன் தொடங்கும் ‘ஆன்மா பள்ளி’ (Soul School) நூல் கதை சொல்ல நேரமில்லை என்பவரின் எண்ணத்தைப் புரட்டிப்போடும்.
கறுப்பு என்றால் அழகு: நூலாசிரியர் நீல் ஜான்ஸ்டன் அமெரிக்க கறுப்பின குழந்தைகளின் இதயத்தைக் கண்டறிந்தவர் எனப் போற்றப்படுகிறார். பாடங்களைக் கதைகளாக மாற்றிக் கற்பிக்கும் முறையை அவர் கையிலெடுத்திருக்கிறார்.
‘கறுப்பு என்றால் அழகு’ என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ள முன்னுரை, கல்வி குறித்த புதிய சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது. கறுப்பினம் என்பது வெறுமனே ஒரு தோற்றமல்ல, அது ஒரு நெடிய மரபு. போராட்ட குணம், கடும் உழைப்பு இவை இரண்டும் எங்களுக்குள் உதிரமாக ஓடுகிறது என முழங்குகிறார் நூலாசிரியர்.
இவருடைய வகுப்பறை கதைகளால் கட்டப்பட்ட, ஒளிரும் குட்டி தேவதைகளின் அரண்மனை. தான் யார் என்பதைப் புரிந்துகொள்ள உணர்வுபூர்வமாகத் தூண்டும் கதைகள் அந்த வகுப்பறையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. தனித்துவமான பயிற்சிகள் மூலம் ஆசிரியர்கள் கதை விற்பன்னராக, சிறந்த கலைஞர்களாகக் குழந்தைகள் முன் கதைசொல்லிகள் என்கிற அந்தஸ்தோடு கல்வி கற்பிக்கிறார்கள்.
மூன்று விதமான கதைகள்: சிறார் கதைகளை நூலாசிரியர் மூன்றாகப் பிரிக்கிறார். முதலாவதாக, ‘முகம் பார்க்கும் கண்ணாடி’ வகைக் கதைகளின் மூலம் குழந்தைகள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டாவது, ‘ஜன்னல் கதைகள்’. இதில், கதைகளுக்குள் இருந்து குழந்தைகள் வெளி உலகத்தைப் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மூன்றாவது, ‘சுய அடையாள கதைகள்’. இதில் கதை மாந்தர்களாக உருமாறிக் குழந்தைகள் தாம் யார் என்பதைக் கண்டடைகிறார்கள்.
பேச்சு நடையில் அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை இத்தகைய மண்ணின் கதைகள் எடுத்துச்சொல்கின்றன. குழந்தைகள் உள்ளத்தில் வேரூன்றும் அளவுக்குக் கதைகளே வகுப்பறையின் அங்கமாக மாறுகின்றன. குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் இம்மாதிரி ஆன்மா பள்ளி வகுப்பறைகள் அமெரிக்காவில் ஐந்தாம் வகுப்புவரை பரவலாகி வருகின்றன.
கணிதக் கதைகள்: உயர் வகுப்புகளில் என்ன செய்வார்கள்? கரிசனத்தைக் கோரும் கதாபாத்திரங்களைத் தாண்டி மகிழ்ச்சியான குடும்பங்கள், பண்பாட்டு நாயகர்கள், விளையாட்டுச் சாதனையாளர்கள், அறிவியலாளர்கள், போராட்டத் தலைவர்கள் எனச் சிறுசிறு புத்தகங்களாக நிஜ மனிதர்களின் கதைகளை ஆறாம் வகுப்பிலிருந்து கறுப்பின அமெரிக்கக் குழந்தைகள் வாசிக்கப் பழகுகிறார்கள். வயதுக்கு ஏற்ற புத்தகங்கள் எழுதப்படுகின்றன.
ஒவ்வொரு புத்தகத்திலும் சிந்தனைக் கேள்விகள், உணர்வுப் பகிர்வுகள் முதலான பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு புத்தகத்துடன் தொடர்புடைய இசை, நடனம், கலை விழாக்கள் போன்றவை பேசப்படுகின்றன. கணக்கு பாடத்துக்குக்கூட தனித்தனியே கதை நூல்கள். இது முழுக்கமுழுக்க கறுப்பின குழந்தைகளுக்கான கல்வி மட்டுமல்ல. யார் வேண்டுமானாலும் தம் மண்ணின் மாணவர்களுக்குப் பொருந்தும்படியாக மாற்றி அமைத்திட முடியும். கதைகளின் மூலம் பரஸ்பரம் மதிப்பு, புரிதல், அறிவு முன்னேற்றம் ஆகியவற்றைக் கொடுக்க முடியும் என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் நாம் உணர்கிறோம். ஒவ்வோர் ஆசிரியரும் ஒரு கதைச்சொல்லியாக மாறினால் குழந்தைகளின் கற்றல் சொர்க்கமாக வகுப்பறை மாறும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT