Last Updated : 19 Aug, 2025 07:45 AM

 

Published : 19 Aug 2025 07:45 AM
Last Updated : 19 Aug 2025 07:45 AM

‘It is much hotter today’ என்பது சரியா? | ஆங்கிலம் அறிவோமே 4.0 - 145

May, might இரண்டும் possible என்பதை உணர்த்தும் சொற்கள்தானா? - இரண்டுமே possible என்பதைக் குறித்தாலும் mightஐவிட may என்பது சற்றே அதிக possibilityஐ உணர்த்துகிறது. It may rain என்றால் மழை பெய்வதற்குக் கணிசமான வாய்ப்பு இருக்கிறது. It might rain என்றால் மழை பெய்வதற்கான வாய்ப்பு சற்று குறைவு. மற்றபடி may என்பது அனுமதி கோரவும் அனுமதி அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. May I leave now? You may leave now.

He deceased yesterday என்பது சரியா? - Cease என்றால் நிறுத்திக்கொள்வது அல்லது ஒன்றை முடிவுக்குக் கொண்டுவருவது. The company ceased its operations in China. Decease என்றால் இறப்பு. Deceased என்பது பொதுவாக verb ஆகப் பயன்படுத்தப்படுவதில்லை. Adjective ஆகப் பயன்படுத்தப்படுகிறது. Deceased person. சட்டபூர்வமான ஆவணங்களில் அது nounஆகப் பயன்படுத்தப்படுகிறது. The property was transferred after his decease.

Misuse, abuse என்ன வேறுபாடு? - Misuse என்றால் ‘தவறான பயன்பாடு’. இது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது இல்லை. தற்செயலாகவோ, அறியாமை காரணமாகவோ செய்யப்பட்டதாக இருக்கவே சாத்தியம் அதிகம். தலைவலியைப் போக்க மாத்திரையை உட்கொள்கிறீர்கள். அதிகத் தலைவலி என்பதற்காக நீங்களாகவே இரண்டு மாத்திரைகளை உட்கொண்டால் அது misuse.

மாறாக ஒருவரது உடல் பாதிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேவைக்கு அதிகமான மாத்திரைகளை அளித்து அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது abuse. Abuse, misuse ஆகிய இரண்டுக்கும் நோக்கம் என்பது மிக முக்கிய வேறுபாடு. Abuse என்பதனால் உண்டாகும் எதிர்மறை விளைவும் மோசமாக இருக்கும். காய்கறி வெட்டுவதற்கான கத்தியைக் கொண்டு தாளில் துளையிட்டால் misuse. அந்தக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தால் அது abuse.

Eastward சொல்லில் உள்ள ward எதைக் குறிக்கிறது? - Ward என்கிற பின்னொட்டு குறிப்பிட்ட திசை அல்லது பாதையைக் குறிக்கிறது. Eastward, westward, forward, backward.

Blood congeal ஆவது என்றால்? - ஒரு காயம் உண்டானால் அதன் வழியாக ரத்தம் தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருப்பது ஆபத்து. இதைத் தடுக்கும் வகையில் இயற்கை அங்கு ரத்தத்தை congeal செய்கிறது. அதாவது காயத்தின் வாய்ப் பகுதியில் ரத்தத்தை உறைய வைக்கிறது. அந்தத் திரவத்தைத் திடப்பொருள் போல் மாற்றுகிறது. இதை coagulation, clot என்றும் கூறலாம்.

‘It is much hotter today’ அல்லது ‘It is very hotter today’ எது சரி? - இரண்டு வாக்கியங்களிலும் hot என்பதை மட்டுமே பயன்படுத்தி இருந்தால் இரண்டுமே சரி. ஆனால், hotter என்பது ஒப்பீடு. ஒப்பீடு செய்ய வேண்டும் என்றால் குறைந்தது இரண்டு பொருள்களோ மனிதர்களோ இருக்க வேண்டுமே. It is much hotter today than yesterday எனக் கூறினால் சரி. She is tall என்பது சரி. ஆனால், She is taller என்று மட்டுமே ஒரு வாக்கியம் இருக்கக் கூடாது. She is taller than her neighbour எனலாம்.

- கட்டுரையாளர்: ‘ஆங்கிலம் அறிவோமே’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; aruncharanya@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x