Published : 29 Jul 2025 06:45 AM
Last Updated : 29 Jul 2025 06:45 AM
நம் கல்வி முறை பழைய செய்திகளை அறிவு என அச்சிட்டு அதையே மாணவர்களின் வாழ்க்கையாக்கி விடுவதால் புதிய முயற்சிகள் நோக்கிய கல்வியாக இது இல்லை - ராபர்ட் .ஜே.நேஷ்
தரப்படுத்தப்பட்ட தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் மாணவர்களை மையப்படுத்திய கற்றல் விருப்பத்துக்கும் இடையில் இன்று இழுபறி நிலவுகிறது. இந்த முரண்பாட்டைக் களைய புதிய பாதை காட்டுகிறது ‘மாற்று வழி கற்றல் கல்விமுறை’ (Crossover Pedagogy) நூல்.
முதல் அத்தியாயமான, ‘கற்றல் முரண்’ தேர்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை தரும்போது நாம் நினைக்கும் அளவுக்கு அறிவு வளர்ச்சி அடைவதில்லை; ஆனால், அறிவின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்குத் தேர்வுகளைத் தவிர வேறு வழி எதையும் இன்னும் இந்தக் கல்வி முறைக் கண்டுபிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
புதிய பாலம்: அற்புதமான இரண்டு எடுத்துக்காட்டுகளை அடுத்த அத்தியாயம் பேசுகிறது. கல்லூரி மாணவராக புள்ளியியல் வகுப்புக்குக் கால தாமதமாக வருகிற ஜார்ஜ் டான்ட்ஜிக் (George Dantzig) முடிந்து போன அந்த வகுப்பின் கரும்பலகையில் ஆசிரியர் குறிப்பிட்டிருந்த இரண்டு கணித சவால்களை வீட்டுப் பாடம் என நினைத்துவிட்டார்.
அடுத்த நான்கு நாட்களில் அதற்கான விடையைக் கண்டுபிடித்து சமர்ப்பித்தார். வருடம் 1939. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தீர்க்கப்படாத கணித சவால்கள் அவை. வழக்கமான கணித முறையைப் பின்பற்றாமல் மாற்று பாதையை நாடியதால் அவரால் விடை காண முடிந்தது என்பதே உண்மை. அவர் மேதை என்பதைக்கூட தேர்வை மையப்படுத்திய இந்தக் கல்வித் துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் துயரம்.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக செர்ஜி பிரின், லோரி பேஜ் என இருவர் இணைகிறார்கள். ‘புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் இணையத்தில் வேறு எப்படியெல்லாம் தேடி தகவல்களைத் திரட்ட முடியும்?’என்பதே ஆய்வின் தலைப்பு.
வழக்கமான ஆய்வு முறையைப் புறந்தள்ளி மாற்று வழியில் அவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்ததுதான் ‘கூகுள்’ தேடு பொறி. மாணவர் பருவத்திலேயே இருவருமாக நிறுவனத்தைத் தொடங்கவே இன்றுவரை அவர்கள் முனைவர் பட்ட ஆய்வையே முடிக்கவில்லை. இவ்வாறு, முறையான கல்வியையும் முறைசாரா கல்வியையும் இணைக்கும் பாலமாக ’கிராஸ் ஓவர்’ கல்விமுறை இருப்பதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
ஜிடி நாயுடு திட்டம்: இந்தியாவின் முதல் தனியார் பொறியியல் கல்லூரியை உருவாக்கியவர் தமிழக அறிஞர் ஜிடி நாயுடு. இவர் பொறியியல் பட்டப் படிப்பில் ஓராண்டில் எழுத்துத் தேர்வுகளை மாணவர்கள் முடித்துவிட்டு, மீதமிருக்கும் மூன்று ஆண்டுகள் கருவிகள், உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பட்டறைகளில் வேலை அனுபவம் பெறும் உத்தியைச் செயல் படுத்தினார். பொறியியல் கல்வி கற்கும்போதே அவர்கள் வருமானம் ஈட்டும் புதிய முறை அறிமுகமானது. ஆனால், விடுதலைக்குப் பிறகு இது கைவிடப்பட்டது.
பள்ளிக்கூடம் போலவே பொறியியல் கல்லூரிகளிலும் கத்தை கத்தையாக நோட்ஸ் வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் நம்முடைய குழந்தைகளை அந்தக் கொடுமையிலிருந்து விடுவித்தால் கண்டுபிடிப்பாளர்களாகவும் வேலைத் திறன்கள் கொண்டவர்களாகவும் அவர்கள் ஒளிர்வார்கள். அதற்கு ‘கிராஸ்ஓவர்’ கல்விமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT