Published : 15 Jul 2025 07:19 AM
Last Updated : 15 Jul 2025 07:19 AM
ஒரு வகுப்பறையின் ஆன்மா மாண வர்கள்தான். சிறந்த வகுப்புகள் மாணவர்கள் தங்களுக்குள் நடத்தும் உரையாடல்களால் இயக்கப்படுகின்றன, அவர்களது மௌனத்தால் அல்ல - அலெக்ஸிஸ் விக்கின்ஸ்.
பத்து வயதுவரை தன் பெயரே ‘ஷட்டப்’ என சார்லி சாப்ளின் நினைத்துக் கொண்டிருந்ததாக வாசித்தபோது அதிர்ச்சியுற்றேன். அந்த அளவுக்கு நம்முடைய பள்ளிக்கூடங்கள் மாணவர்களை மௌனிகளாக அடக்கி வைக்கின்றன என்பது இன்றைக்கும் உண்மைதான். மாணவர்கள் தங்களுக்குள் உரையாடுவதை “வெட்டி கதை பேசாதே” என்கிற முறையில்தான் எத்தனையோ ஆசிரியர்கள் அணுகுகிறார்கள். இது ஆசிரியர் பணியின் நோக்கத்துக்கே எதிரானது என்கிறார் கல்வியாளர் அலெக்ஸிஸ் விக்கின்ஸ்.
சிலந்தி வகுப்பறை: கருத்தொற்றுமை கொண்ட கல்வியாளர் களை உலகெங்கிலும் ஒருங்கிணைக்கும் அடிப்படை கற்றலுக்கான கல்வியாளர் கூட்டமைப்பின் நிறுவனர் அலெக்ஸிஸ் விக்கின்ஸ். ‘நீங்கள் ஒருபோதும் கற்பிக்காத உங்கள் தலைசிறந்த வகுப்பறை’ என்கிற இவரது நூல் ‘சிலந்தி வலை கலந்துரையாடல்’ வகுப்பறைகளை நடத்தும் வித்தையைப் படிப்படியாகச் சொல்லிக் கொடுக்கிறது.
இவரது வகுப்பறையில் அனைத்து மாணவர்களுமே முதல் மதிப்பெண் பெற்றார்கள் என இந்நூலில் வாசித்தபோது நம்ப முடியவில்லை. அது என்ன ‘சிலந்தி வலை’ வகுப்பறை? இந்த திட்டத்தின்படி மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கற்றலை வழிநடத்தி ஆதரிக்கிறார்கள். ஒரு வட்டமான வகுப்பறை. காகிதம், பென்சில் மட்டுமே இந்த வகுப்பறைக்குத் தேவை.
எந்தப் பாடப் பொருளையும் ஆசிரியர் கையில் எடுக்கும்போது அதுகுறித்து மாணவர்கள் ஏற்கெனவே என்ன அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் பரிசோதிக்கிறார். ஒவ்வொரு மாணவரும் தான் வளர்ந்த சூழல், வயதைப் பொறுத்துப் பாடப் பொருள் குறித்து ஏற்கெனவே அறிந்ததைச் சொல்கிறார். உடனடியாக அவர்களுடைய கருத்து கரும்பலகையில் எழுதப்படுகிறது.
உயிருள்ள பாடசாலை: ஆச்சரியம் என்னவென்றால் உங்கள் பாடப்புத்தகத்தில் உள்ள பாடப் பொருளைக் கடந்து நூற்றுக்கணக்கான தகவல்கள் அங்கு வந்து குவிகின்றன. பிறகு அந்தத் தகவல்களைச் சிறு சிறு துண்டு காகிதங்களில் ஒவ்வொன்றாக அவர்கள் எழுதுகிறார்கள். அதை மொத்தமாக ஓர் அட்டை பெட்டியில் போட்டு நன்றாகக் குலுக்கி தகவல் காகிதங்கள் அனைவருக்கும் பகிரப்படுகின்றன.
அவரவர் தன் கையில் கிடைத்திருக்கும் பாடப் பொருள் குறித்த செய்தியை வாய்ப்பு வரும்போது பிறகு விரிவாகப் பேச வேண்டும். தனக்குத் தெரிந்த மொழியில் அதை எழுத வேண்டும். மாணவர்களை “கையைக் கட்டு வாயை மூடு” எனச் சொல்லாதவரையில் அற்புதங்களை இந்த வகுப்பறை நிகழ்த்துகிறது.
வேதியியல் பாடத்தையோ, இயற்பியலின் முக்கிய கண்டுபிடிப்பையோ இந்த முறையில் எப்படிக் கொண்டு செல்வது என்கிற கேள்வி எழலாம். மாணவர்கள் சிலந்தி வலை கலந்துரையாடலைப் பயிற்சி செய்யும்போது அவர்களுடைய தொடர்பாற்றல் பட்டைத்தீட்டப்படுகிறது. ஒட்டுமொத்த வகுப்பறையும் சிந்திக்கும், ஓர் உயிரியாக மாறுகிறது என்கிறார் நூலாசிரியர்.
வழக்கமான வகுப்பறைகளாலும் தேர்வு முறைகளாலும் முட்டாள்கள் என முத்திரை குத்தப்பட்ட குழந்தைகள் வாய்ப்பு கொடுக்கப்படும்போது தங்கள் அறிவை ஆச்சரியமான முறையில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்பதே கிடையாது. வகுப்பறையிலும் அதற்கு அப்பாலும் தங்கள் கற்றல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் நுட்பத்தை இந்த வகுப்பறைகள் எப்படி அனைவருக்கும் வழங்கும் என்பதை அனுபவங்களின் வழியே இந்தப் புத்தகம் விளக்குகிறது.
- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT