Published : 08 Jul 2025 07:24 AM
Last Updated : 08 Jul 2025 07:24 AM

மன வரைபடம் எனும் மாயாஜாலம்! | வகுப்பறை புதிது 27

மன வரைபடம் என்பது புத்தகத்தை அப்படியே காப்பி அடிப்பதற்காக அல்ல. மாறாகப் புத்தகத்தில் உள்ள பாடப்பொருள் தொடர்பான நம் மூளையின் கருத்தாக்கத்தைப் பிரதிபலிக்க - டோனி பூசன்

நீட் தேர்வில் கடந்த ஆண்டில் முழு மதிப்பெண் பெற்ற விழுப்புரம் மாணவர் தான் மன வரைபடங்களை நம்பியதால் வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். பாடப் புத்தகத்தைப் பார்த்து முக்கிய பாடங்களை மன வரைபடமாக உருவாக்கத் தெரிந்தால் கல்வியில் வெற்றி அடைய முடியும் என ‘தி மைன்ட் மேப் புக்’ நூல் கொண்டு நிரூபித்துக் காட்டுகிறார் பிரிட்டிஷ் கல்வியாளர் டோனி பூசன்.

நினைவு மாளிகை: பாடங்களையும் கற்றல் அனுபவங்களையும் மன வரைபடங்களாக உருவாக்கிப் புரிந்துகொள்ளும் வித்தையைக் குழந்தைப் பருவத்திலேயே பயிற்றுவித்தால் கற்றலின் புதிய பரிமாணத்தை அடைய முடியும் என்கிறார் நூலாசிரியர். சிக்கலான கருத்துகளை நினைவில் நிறுத்த அகக்கண்ணில் அவற்றைப் பதிய வைக்கும் முறையை மனிதர்கள் காலங்காலமாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர்.

மனித மனம் வட்ட வடிவிலான சுழற்சி முறையில் சிந்தித்து இயங்குகிறது என்கிறார் டோனி. முந்தைய கிரேக்க அறிஞர்கள் ‘மெமரி பேலஸ்’ எனும் பெயரில் மனதில் ஒரு நினைவு மாளிகையை எழுப்பி அதன் ஜன்னலாகவும் கதவாகவும் சுவராகவும் படிகளாகவும் விரிந்து செல்கின்ற அறிவுச் செய்திகளை மனப்பாடமாகப் பதிந்து வைத்திருந்தார்கள்.

அதேநேரம் மன வரைபடம் தயாரிப்பது கடினமல்ல. ஒரு மைய பொருளைச் சுற்றி தகவல்களை ஒழுங்கமைத்து அதனுடன் தொடர்புடைய கருத்துகள், சிந்தனைகளை இணைக்கும் கிளைகளை எளிதாக உருவாக்கிவிட முடியும். இந்த நுட்பம் சிக்கலான பாடப்பொருளைப் புரிந்து கொள்வதற்கும், தேர்வு நேரத்தில் நினைவுபடுத்தி அதனை கண்முன்னே கொண்டு வரவும் உதவுகிறது. ஆனால், டோனி ஒரு படி மேலே செல்கிறார்.

அத்தனையும் நினைவில்: முக்கிய பகுதிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து பாடப் பொருள்களும் மனதில் பதிவதற்கான சூட்சுமத்தை கற்றுத் தருகிறார். குறிப்பிட்ட பாடப்பொருளை மஞ்சள் வண்ண பேனாவால் நீங்கள் மன வரைபடமாக ஆக்கிக் கொள்ளலாம். மற்றொன்றை நீல வண்ணத்திலும் வேறொன்றை சிவப்பு வண்ணத்திலும் உருவாக்கி உள்வாங்கப் பழகலாம்.

இதன் மூலம் தேர்வின்போது கேள்வியைப் பார்த்தவுடன் இது மஞ்சள் விடைக்கானது, இது சிவப்பு விடைக்கானது என உடனடியாக உங்கள் மூளை அந்த விடையைக் கொண்டு வந்து மனக்கண்முன்னே நிறுத்துகிறது. இது உண்மையிலேயே மாணவர்களுக்கு மிகவும் பயன்படுகிற ஆச்சரியமான நினைவு முறை.

அறிவியல் பேரறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிறிய நோட்டுப்புத்தகத்தை எப்போதும் கோட் பாக்கெட்டில் வைத்திருந்து மன வரைபடங்கள் வழியாகவே தன் பேருரைகளை நிகழ்த்தி இருக்கிறார். கணித மேதை ராமானுஜன் கணித தேற்றங்கள் அனைத்தையும் முதலில் சிறுசிறு வரைபடங்களாகவே கற்பனை செய்திருக்கிறார்.

இப்படி நூற்றுக்கணக்கான தகவல்களை இந்நூல் அடுக்குகிறது. மொத்தத்தில், குறுகிய கால நினைவாற்றலை நெடுங்கால நினைவாற்றலாக மாற்றுகிற உத்தியை சொல்லித் தந்துவிடுகிறது இந்நூல். தேர்வு மைய கல்வியாக நம் கல்விமுறை நீடிக்கும்வரை டோனி ஜெயித்துக்கொண்டே இருப்பார்.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x