Published : 01 Jul 2025 07:34 AM
Last Updated : 01 Jul 2025 07:34 AM

சொற்பொழிவை நிறுத்துங்கள் ஆசிரியரே!  | வகுப்பறை புதிது 26

குழந்தைகள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கக் கற்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் தயவுசெய்து சொற்பொழிவு நிகழ்த்துவதை நிறுத்துங்கள் - டொனால்ட் ஃபிங்கல்

“என்ன வேலைச் செய்கிறீர்கள்?” என யாரேனும் கேட்டு, அதற்கு நீங்கள் “கற்பிக்கிறேன்” எனப் பதில் அளிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். உடனே நீங்கள் மாணவர்களுக்கு அறிவுரைகள் கூறி, ஒழுங்காக இருக்கும்படி உத்தரவிட்டு, வகுப்பறை விதிகளை ஆணைகளாகப் பிறப்பித்து, கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பவர்களாக மாணவர்களைத் தயார்ப்படுத்தும் அதிகாரம் படைத்த வேலைச் செய்யும் ஆசிரியராகப் புரிந்து கொள்ளப்படுவீர்.

இது கல்வி அல்ல: அமெரிக்காவின் மறைந்த பேராசிரியர் டொனால்ட் ஃபிங்கல் எழுதிய நூல் ‘வாயை மூடிக்கொண்டு கற்பித்தல்’ (Teaching with your mouth shut). தமக்கு வழங்கப்பட்ட 45 நிமிட பாட வேளை முழுவதும் பாடத்தைச் சொல்லிக் கொடுத்துத் தீர்க்கும் ஓர் ஆசிரியரே சிறந்த ஆசிரியர் எனப் போற்றப்படுவதைத் தன்னால் ஏற்க முடியாது என்று பகிரங்கமாக இந்நூலாசிரியர் அறிவிக்கிறார்.

வகுப்பறை நேரம் முழுவதும் ஆசிரியரின் அதிகாரக் குரல், “இதைச் செய், அதைச் செய்யாதே, வாயை மூடு, கவனி” என்று ஒலித்துக் கொண்டே இருப்பது உண்மைதானே. குழந்தைகளின் எல்லா வகையான செயல்பாடுகளையும் முடக்கி மணிக்கணக்கில் ஒரே இடத்தில் ஒரே கோணத்தில் அவர்களை அமர வைப்பதற்குப் பெயர் கல்வி அல்ல என்கிறார் டொனால்ட் ஃபிங்கல்.

எல்லா ஆணைகளையும் ஏற்றுச் செயல்படுபவர்களாக, சிறந்த நகல் எடுப்பவர்களாகக் குழந்தைகளை உருமாற்றிவிடுகிறது இந்தக் கல்விமுறை. இதனைச் சுட்டிக்காட்டும் இந்நூல், ஆசிரியர் மைய வகுப்பறைகளை மாணவர்கள் மைய வகுப்பறைகளாக எப்படி மாற்றுவது என்பதை முதன்மையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அதற்கு முதலாவதாக ஆசிரியர்கள் பேசாமல் இருக்க வேண்டும்.

இதற்கு மாற்று வழிகள் என்ன? பாட பொருளைக் கலந்துரையாடுதல், குழுவிவாதம், செய்முறை, கதையாகவும் பாட்டாகவும் செயல்திட்டமாகவும் பாட பொருளை மாற்றுதல் உள்ளிட்டவை ஆகும். இவற்றைச் செயல்படுத்தும்போது தங்கள் சொந்தப் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டியபடி குழந்தைகள் சுதந்திரமாக வகுப்பறையில் கற்றலில் பங்கு பெறுகின்றனர். குழந்தைகளின் தலைமைப்பண்பு உடனடியாக வெளிப்படுகிறது.

கூட்டு வகுப்பறைகள்: வகுப்பறையை வழி நடத்துங்கள், அனைவரும் பேசுவதற்கான வாய்ப்பைக் கொடுங்கள் என இந்த நூல் அறைகூவல் விடுக்கிறது. அனைத்துக் குழந்தைகளையும் பாடப் பொருள் குறித்து பேசவைத்துத் தான் வாயை மூடிக்கொண்டு கற்றல் நடைபெற அனுமதிக்கும் ஓர் ஆசிரியர்க் கற்றல் கற்பித்தலின் சொர்க்கபுரியாகத் தன் வகுப்பறையை மாற்றி விடுவார்.

இயற்பியல், வேதியியல், கணிதமாகக்கூட இருக்கட்டும் இவை ஒவ்வொன்றையும் பங்கேற்பு வகுப்பறை என்கிற புதிய சித்தாந்தத்தின்படி எப்படிக் கொண்டு செல்ல முடியும் என்பதை ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஆச்சரியப்படும்படியாக நூலாசிரியர் விளக்குகிறார். கற்றல்-கற்பித்தல் நடவடிக்கையில் குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் அத்தனைப் பேதங்களையும் மறந்து ஒற்றுமையாக ஒன்றிணையும் அதிசயத்தை அடுத்ததாக எடுத்துரைக்கிறார். அதிலும் தேர்வு குறித்த அவரது சிந்தனை அலாதியானது.

மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து, புத்தகத்தில் அச்சிடப்பட்ட கேள்விகளைக்காட்டிலும் ஆழமான, தாம் கற்ற பாடப் பிரிவில் இருந்து தானே உருவாக்கிய புதிய கேள்விகளை அவர்களே கேள்வித்தாளில் இணைக்கிறார்கள். ‘கூட்டு வகுப்பறைகள்’ என நூலாசிரியர் அழைக்கும் இம்மாதிரியான வகுப்பறைகள் மாமனிதர்களை, சுயச் சிந்தனையாளர்களை, பாட புத்தகத்தைக் கடந்து சுயமாக யோசிக்கும் பங்கேற்பாளர்களை உருவாக்கும் வல்லமைப் படைத்தவை.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x